மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 21 ஏப் 2022

டிஜிட்டல் திண்ணை: வன்னியர் 10.5%: நான் தெரிந்தே துரோகம் பண்ணிட்டேன்- ஓபிஎஸ்

டிஜிட்டல் திண்ணை: வன்னியர் 10.5%:  நான் தெரிந்தே துரோகம் பண்ணிட்டேன்- ஓபிஎஸ்

வைஃபை ஆன் செய்யவும் இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்கள் வந்து விழுந்தன.

அந்த படங்களுக்கு ப்ளூடிக் கொடுத்துவிட்டு வாட்ஸ்அப் மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

"வன்னியர்களுக்கு 10..5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு தமிழக அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தை தொடர்ந்து உச்சநீதிமன்றமும் மார்ச் 31 ஆம் தேதி ரத்து செய்தது. இதையடுத்து தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், 'அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டமாக இருந்தாலும் இந்த சட்டத்தை உறுதிப்படுத்த திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் சிறந்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடி வந்தது. சட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு மீண்டும் சமூக நீதியை நிலைநாட்டுவோம்' என்று உறுதியளித்தார்.

இதற்கிடையே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் வன்னியர் சமுதாயத்தை தவிர பிற சமுதாயத்தினர் சீர்மரபினர் இணைந்து சமூகநீதி கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தினார்கள். இந்த அமைப்பு சார்பில் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகே இனி இதுபோன்ற இட ஒதுக்கீடு சட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி மதுரையில் சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் தமிழக காவல்துறையின் தடைகளைத் தாண்டி நீதிமன்ற அனுமதியோடு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்த விவகாரத்தின் ஒரு முனையான வன்னியர் சமுதாய பிரதிநிதிகளை சந்திக்கும் முதல்வர், இந்த விவகாரத்தில் இன்னொரு முனையான வன்னியர் அல்லாத சமுதாய பிரதிநிதிகளை சந்திக்க இதுவரை நேரம் கொடுக்கவில்லை. இதையடுத்து முதல்வரிடம் சாதிவாரிக் கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் நாளை ஏப்ரல் 22 ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை நடைபெறும் நாளில் கோட்டையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் சமுதாயத்தினர் இன்று முதல் சென்னைக்குப் புறப்பட ஆரம்பித்துவிட்டனர்.

மதுரையில் உண்ணாவிரதம் இருப்பதற்கு கூட போலீசார் அனுமதி மறுத்த நிலையில் சென்னையில் கோட்டை நோக்கி பேரணிக்கு அனுமதி கொடுக்க மாட்டார்கள் என்பதால் பேரணி புறப்படும் இடத்தை அறிவிக்காமல் வைத்திருக்கிறார்கள் சமூக நீதி கூட்டமைப்பினர்.

இதற்கிடையே பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கையில் இந்த விவகாரத்தைப் பற்றி சட்டமன்றத்தில் பேசுமாறும் தங்களது கோரிக்கையை வலியுறுத்துமாறும் கடந்த சில நாட்களாக அரசியல் தலைவர்களையும் சமூக நீதி கூட்டமைப்பினர் சந்தித்துள்ளனர்.

இந்த சட்டத்தை முதலில் கொண்டு வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார்கள். 'நானும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்றுதான் வலியுறுத்துகிறேன் என்று

அவர்களிடம் எடப்பாடி கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, செல்லூர் ராஜு ஆகியோரையும் சமூகநீதி கூட்டமைப்பினர் சந்தித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, பாஜக தலைவர் அண்ணாமலை, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோரை சந்தித்து தங்களது நிலைப்பாடு பற்றி விளக்கி இருக்கிறார்கள். மேலும் முதல்வரை சந்திக்க முடியாவிட்டாலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மதுரை மூர்த்தி, அன்பில் மகேஷ் உள்ளிட்டோரையும் சமூகநீதி கூட்டமைப்பினர் சந்தித்தனர். இதுபற்றி முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அவர்களும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த சந்திப்புகளின் முக்கிய அம்சமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தை நேற்று இரவு சென்னையில் சந்தித்திருக்கிறார்கள் சமூகநீதி கூட்டமைப்பினர். அனைத்து மறவர் நல கூட்டமைப்பு தலைவரும் முன்னாள் தடயவியல் துறை இயக்குனருமான விஜயகுமார் தலைமையில் ஓ. பன்னீர் செல்வத்தை சந்தித்து, 'எங்களின் எதிர்காலம் தான் என்ன?' என்று கேட்டு தங்களின் போராட்டம் பற்றி விளக்கி இருக்கிறார்கள்.

ஓ பன்னீர்செல்வம் அவர்களிடம், 'இந்த சட்டத்தை கொண்டு வரும்போதே நான், 'ரொம்ப அவசரப்பட வேண்டாம். அதனால நமக்கு தென்மாவட்டத்தில் பாதிப்பு நிறைய வரும். சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிந்தபிறகு செஞ்சாதான் இது சரியா இருக்கும்'னு எவ்வளவோ அழுத்தம் திருத்தமாக சொன்னேன். ஆனா அவரு (எடப்பாடி) கேட்கல. அவரோட அரசியல் லாபத்தை பார்த்தாரே தவிர என்னோட கோரிக்கையை ஏத்துக்கலை. அதுவும் இல்லாம நான் வன்னியர்களுக்கு எதிரானவன்னு கட்சிக்குள்ளேயே எனக்கு எதிராக உள் அரசியல் பண்ணிட்டாங்க. நான் தெரிஞ்சே என் சமுதாயத்திற்கு துரோகம் பண்ணிட்டேன். இப்ப கையறு நிலையில் இருக்கேன்' இன்று சமூக நீதி கூட்டமைப்பினரிடம் சென்டிமென்டாக உருகியிருக்கிறார் பன்னீர்செல்வம்.

இவ்வளவு அரசியல் தலைவர்களையும் அமைச்சர்களையும் பார்த்துவிட்டு, நாளை சட்டமன்றத்தில் தங்களுக்கான குரலை யாராவது ஒலிப்பார்களா என்று எதிர்பார்த்து போராட்டத்திற்கு தயாராகிறார்கள் வன்னியர் அல்லாத மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தினர்"என்ற மெசேஜுக்கு சென்று கொடுத்து ஆஃப்லைன் சென்றது வாட்ஸ்அப்.

.

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வியாழன் 21 ஏப் 2022