மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 21 ஏப் 2022

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு, வடசென்னையில் குத்துச்சண்டை மைதானம்!

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு, வடசென்னையில் குத்துச்சண்டை மைதானம்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று(ஏப்ரல் 21) மாற்றுத் திறனாளிகள், சமூகநலம் மகளிர் உரிமைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

பின்னர், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், ”பன்னாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் அதிக பதக்கங்களை வெல்வதை ஊக்குவிக்கக் கூடிய வகையில் தமிழ்நாடு அரசு 3 கோடி ரூபாய் முதல் பல்வேறு வகையான ஊக்க உதவித் தொகைகளை தொடர்ந்து வழங்கி இளைஞர்களை ஊக்கப்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் உள்ளிட்ட பன்னாட்டு விளையாட்டு போட்டிகள் மற்றும் சர்வதேச அளவிலான வாகையர் போட்டிகளில் வெற்றி வாகை சூட ஏதுவாக பல்வேறு விளையாட்டுகளுக்காக உலக தரத்திலான விளையாட்டு கட்டமைப்புகளை ஏற்படுத்த சென்னைக்கு அருகில் மிக பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் அமைக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்த தமிழ்நாட்டின் நான்கு மண்டலங்களில் தலா ஒன்று வீதம் நான்கு ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் விளையாட்டு பயிற்சிகள் அதற்கான வசதிகள் ஏற்படுத்த, அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் நிறுவப்பட உள்ளன. இதன் மூலம் ஏழை எளிய நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த கிராம மற்றும் நகர்ப்புறங்களில் வாழக்கூடிய இளைஞர்கள் பயன் பெறுவார்கள்.

தமிழக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கு வழிகாட்ட ஒரு முயற்சியை தொடங்க இருக்கிறோம். ஒலிம்பிக் தங்கம் தேடுதல் என்ற திட்டம் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

வடசென்னை பகுதியானது பல்வேறு விளையாட்டு திறமையாளர்களை ஊக்குவிப்பதில் புகழ்பெற்று விளங்கி வருகிறது. அப்பகுதியில் உள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தி மேம்படுத்தக்கூடிய நோக்கில் வடசென்னை பகுதியில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய நவீன குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. இங்கு கையுந்துபந்து, இறகுப் பந்து, கூடைப் பந்து, குத்துச்சண்டை, கபாடி மற்றும் இதர உள்ளரங்க விளையாட்டுகளுக்கான வசதிகளோடு நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட உள்ளது.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு என்று தனியாக பிரமாண்டமான மைதானம் அமைக்கப்பட உள்ளது. தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்திய தற்காப்பு கலைகளில் ஒன்றாக விளங்கி கொண்டிருக்கக்கூடிய சிலம்பம் விளையாட்டினை ஊக்கப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. சிலம்ப வீரர்களுக்கு விளையாட்டு வீரர்களுக்கான வேலை வாய்ப்புகளில் 3 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்த முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தமிழ்நாட்டில் விளையாட்டை சார்ந்த பொருளாதாரம் உருவாகவும், அதனை மேம்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை ஓபன் டென்னிஸ் தொடரை மீண்டும் நடத்தவும், பீச் ஒலிம்பிக்ஸ் எனப்படும் கடற்கரை ஒலிம்பிக்ஸ் தொடரை நடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் பல்வேறு தேசிய மற்றும் பன்னாட்டு போட்டிகள் நடத்துவதன் மூலம் விளையாட்டுத் துறையில் புதிய முதலீடுகளும் தொழில் வளர்ச்சியும் ஏற்படும். இதனையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறை வளர்ச்சி அடையவும் வாய்ப்புகள் ஏற்படும்.

சதுரங்க விளையாட்டில் இந்தியாவின் தலைநகராக விளங்கக் கூடிய வகையில் எப்போதுமே தமிழ்நாடு பல்வேறு கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கியிருக்கிறது. அந்த வகையில் உலக அளவில் சிறந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பல்வேறு கிராண்ட் மாஸ்டர்களை தமிழ்நாடு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.

இந்தியாவில் விளையாட்டு உலகின் மணிமகுடமாக விளங்கக்கூடிய 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28-7-2022 முதல் 10-8-2022 வரை தமிழ்நாட்டில் உலகமே வியக்கக்கூடிய வகையில் பிரம்மாண்டமாக தமிழ்நாடு அரசால் நடத்தப்பட உள்ளது.

44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் உலகில் உள்ள 150 நாடுகளைச் சார்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் அதில் பங்குபெற இருக்கிறார்கள். 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதற்கு இன்றைக்கு ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு அந்த பணிகளும் சிறப்பாக செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக விளையாட்டு துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக வளர்ந்து சிறக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்தார்

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வியாழன் 21 ஏப் 2022