மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 20 ஏப் 2022

2022ல் ஒரு லட்சம் தனி வீடுகள்: சட்டப்பேரவையில் அறிவிப்பு!

2022ல் ஒரு லட்சம் தனி வீடுகள்: சட்டப்பேரவையில் அறிவிப்பு!

தமிழகத்தில் நில உரிமையுள்ள பொருளாதாரத்தில் நலிவுற்ற பயனாளிகளுக்கு ஒரு லட்சம் தனி வீடுகள் அமைத்துத் தரப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வரும் நிலையில் இன்று காலை 10 மணிக்குக் கேள்வி நேரம் தொடங்கியது. இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் ஆகியோர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.

இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்ட அறிவிப்பில்,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் காடாம்புலியூரில் சுமார் 29 ஏக்கரில் 13 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் லிங்கம்பட்டியில் சுமார் 54 ஏக்கரில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆயத்த ஆடை செய்யும் மகளிர் சேவை குறுங்குழுமத்திற்கு ஒரு பொது வசதி மையம் ரூ.3.75 கோடி தமிழக அரசு மானியத்துடன் அமைக்கப்படும்.

கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டியில் அலுமினியம் அச்சு வார்ப்பு செய்யும் குறுங்குழுமத்திற்கு ஒரு பொது வசதி மையம் ரூ.5.80 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசின் மானியத்துடன் அமைக்கப்படும்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பீங்கான் மின்காப்பு உபகரணங்கள் செய்யும் குறுங்குழுமத்திற்கு ரூ.2.80 கோடி தமிழக அரசின் மானியத்துடன் ஒரு பொது வசதி மையம் அமைக்கப்படும்.

ஈரோட்டில் மஞ்சள் தூள் உற்பத்தி செய்யும் குறுங்குழுமத்திற்கு ரூ.3.50 கோடி தமிழக அரசின் மானியத்துடன் ஒரு பொது வசதி மையம் அமைக்கப்படும்.

ஈரோடு மாவட்டம் பவானியில் ஜமுக்காளம் உற்பத்தியாளர்களுக்கான ஒரு பொது வசதி மையம் ரூ.3.50 கோடி தமிழக அரசின் மானியத்துடன் அமைக்கப்படும்.

கன்னியாகுமரி மர சிற்பம் செதுக்கும் ஒரு தொழில் கூட்டுறவு சங்கத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு பொது வசதி மையம் அரசு மானியத்துடன் அமைக்கப்படும்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த தொழில் முனைவோர் பயனடையும் வகையில் தொழில்முனைவோர் கொரோனா உதவி மற்றும் நிவாரணத் திட்டம் என்கிற புதிய திட்டம் 50 கோடி ரூபாய் நிதி உதவியுடன் ஓராண்டு காலத்திற்கு செயல்படுத்தப்படும்.

கோவை, ஓசூர், திருச்சி மற்றும் மதுரையில் வணிக மற்றும் ஏற்றுமதி வசதி மையங்கள் 10 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.

தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் நிதி சிக்கல்களை எளிதாக்கும் வகையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்கள் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பங்குபெற அனுமதிக்கப்படும்.

வேதிப் பொருள் கலப்படம் இல்லாத ஜவ்வரிசி மற்றும் ஜவ்வரிசி சார்ந்த பிற உணவுப் பொருட்களுக்கான வர்த்தக முத்திரை பதிவு செய்யப்படும்.

2022-23 ஆம் நிதியாண்டிலிருந்து 100 புத்தொழில் நிறுவனங்களுக்கு 10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.

ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கு இந்த ஆண்டு முதல் மாநில அளவிலான சிறந்த தொழில் முனைவோர் விருது வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

அதுபோன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் முத்துசாமி துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசினார்.

அவர் பேசுகையில் , “தமிழகத்தில் 60 இடங்களில் பழுதடைந்த நிலையில் உள்ள 10,000 அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள் இடிக்கப்பட்டு மறுகட்டுமானம் செய்யப்படும்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் மெரினா முதல் கோவளம் இடையிலான சுமார் 30 கிலோ மீட்டர் நீளமுள்ள சென்னை கடற்கரை 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டு புத்தாக்கம் செய்யப்படும்.

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் செங்கல்பட்டு, திருவள்ளூரில் புதிய பேருந்து முனையங்கள் கட்டப்படும்.

திருவான்மியூர், சோழிங்கநல்லூர், மாதவரத்தில் ரூ.105.50 கோடியில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படும்.

தமிழகத்தில் 10 லட்சம் பேர் வசிக்கக்கூடிய நகரங்கள் அதிகரித்து வரும் நிலையில் நகரமயமாக்கலை ஒழுங்குபடுத்தத் திட்டமிட்ட நகரங்கள் அமைவதை உறுதி செய்திட இந்த நிதியாண்டில் திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் ஆகிய பகுதிகளுக்கு நகர்ப்புற வளர்ச்சி குழுமங்கள் ஏற்படுத்தப்படும்” என்று அறிவித்தார்.

அதுபோன்று நடப்பு நிதியாண்டில் நிலம் வைத்திருக்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்குத் தாமாக வீடு கட்டிக்கொள்ள ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டப்படும்.

நகர்ப்புறங்களில் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்த நிதியாண்டில் 25 ஆயிரம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

மக்கள் வாழ்வதற்குத் தகுதியற்ற சிதிலமடைந்த 7500 அடுக்குமாடிக் குடியிருப்புகள் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுகட்டுமானம் செய்யப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: நீயா, நானா? அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: நீயா, நானா?  அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!

ஸ்டாலின் மரியாதை: அழகிரி கண்ணீர்!

4 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் மரியாதை: அழகிரி கண்ணீர்!

பேரறிவாளன் போலவே 6 பேர் விடுதலை? காங்கிரஸுக்கு ஸ்டாலின் தரும் ...

4 நிமிட வாசிப்பு

பேரறிவாளன் போலவே 6 பேர் விடுதலை? காங்கிரஸுக்கு ஸ்டாலின் தரும் அடுத்த அதிர்ச்சி!

புதன் 20 ஏப் 2022