மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 20 ஏப் 2022

ஆளுனர் வருகைக்கு எதிர்ப்பு: திமுகவுக்குள் சலசலப்பு!

ஆளுனர் வருகைக்கு எதிர்ப்பு: திமுகவுக்குள் சலசலப்பு!

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்துக்கு செல்லும் வழியில் நேற்று ஏப்ரல் 19ஆம் தேதி தமிழக ஆளுநருக்கு கருப்புக்கொடி போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி, சிறுத்தைகள் மற்றும் உள்ளூர் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்தினர்.

இந்த போராட்டத்தில் ஆளுநரின் கான்வாய் மீது கருப்பு கொடிகளும் பதாகைகளும் வீசப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து தமிழக டிஜிபி நேற்று விளக்கம் அளித்தார். ஆளுநரின் பாதுகாப்பு மெய்க்காப்பாளர் இந்த நிகழ்வுகள் குறித்து டிஜிபிக்கு விரிவான அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

நேற்று சென்னை திரும்பிய ஆளுநர் இன்று காலை டெல்லி புறப்பட்டு விட்டார். ஆளுநரை எதிர்த்து நடந்த போராட்டம் பற்றி உள்துறை அமைச்சகம் வரை அறிக்கைகள் சென்றுள்ள நிலையில், மயிலாடுதுறை திமுகவிலும் இந்த சலசலப்புகள் தொடர்கின்றன.

ஆளுநர் ஆர்.என். ரவி தருமபுரம் ஆதீனத்துக்கு வருகை தரும் தகவல் சில நாட்களுக்கு முன்னே உறுதிப்படுத்தப்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் ஆளுநர் திருக்கடையூர் கோவிலுக்கு வழிபட திட்டமிட்ட நிலையில்.... தருமபுரம் ஆதீனம் ஆளுநரின் வருகையை பயன்படுத்தி சில நிகழ்ச்சிகளை வளாகத்தில் நடத்த திட்டமிட்டார்.

தருமபுரம் ஆதீனம் ஆளும் தி மு க புள்ளிகளுக்கு மிகவும் நெருக்கமானவர். அண்மையில் முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தருமபுரம் ஆதீனத்துக்கு சென்று ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ் வளர்க்கும் ஆதீனத்துக்கு ஆளுநர் ரவி வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகள் மற்றும் பேராசிரியர் ஜெயராமன் மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் இந்தப் போராட்ட திட்டமிடலில் இணைந்தனர்.

திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால் இந்த விவகாரத்தில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. எனவே திமுக நீங்கலாக மற்ற கட்சிகள் , அமைப்புகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரட்டியது.

இதற்கிடையே பதினேழாம் தேதி பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட சிலர் தருமபுரம் ஆதீனத்துக்கு நேரடியாகச் சென்று ஆளுநரை அழைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று ஒரு கடிதத்தை அளித்தனர்.

அதேநேரம் போராட்ட அறிவிப்பும் வெளிவந்ததால் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆர்டிஓ மற்றும் டிஎஸ்பி உள்ளிட்டோர் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார்கள்.

ஆளுநருக்கு எதிரான போராட்டங்களை தவிர்க்குமாறு அரசு தரப்பில் கட்சிகள் அமைப்புகளிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது எங்கள் ஜனநாயக உரிமை என பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர்.

இந்த விவகாரத்தில் திமுக எந்த விதத்திலும் கலந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என தலைமையிடமிருந்து அறிவுறுத்தப்பட்ட நிலையில்.... முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய கொள்கை பரப்பு இணைச் செயலாளருமான குத்தாலம் அன்பழகன் தன்னிச்சையாக தருமபுரம் ஆதீனத்துக்கு சென்று ஆதீனத்தை சந்தித்து ஆளுநர் வருகையை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார். இதைத் தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் அவர் வெளியிட்டார்.

திமுக ஆளுங்கட்சியாக இருக்கும் நிலையில் அக்கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் என்ற பொறுப்பில் இருக்கும் குத்தாலம் அன்பழகன் ஆதீனத்தை சந்தித்து ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டது திமுக மாவட்ட தலைமையை கோபப்படுத்தியது. இதுதொடர்பாக மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் தலைமைக்கு தெரியப்படுத்தி விட்டார்.

"மயிலாடுதுறை மாவட்டத்துக்கு கலெக்டர் அலுவலகம் கட்டவும் புதிய பஸ் நிலையம் கட்டவும் சுமார் 90 ஏக்கர் நிலம் வரை தருமபுரம் ஆதீனம் கொடுத்துள்ளார். பேருந்து நிலையம் கட்டுவதற்கு 11 கோடி ரூபாய் தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்த லோக்கல் காரணங்கள் இருந்தாலும் ஆளுநரை அழைத்து விழா நடத்துவது என்ற ஆதீனத்தின் முடிவை எதிர்க்க கூடாது என திமுக கருதியது.

மேலும் ஆதீனம் திமுக புள்ளிகளுக்கும் வேண்டப்பட்டவர் தான். தன்னை சந்தித்த குத்தாலம் அன்பழகனிடம், 'இந்த விழாவை ஆதீனம் தன் செலவில் நடத்துகிறது. தன் இடத்தில் நடத்துகிறது. எனவே ஆளுநரை அழைக்கக் கூடாது என நீங்கள் சொல்ல முடியாது' என்று சொல்லிவிட்டார். ஆதீன தரப்பிலிருந்தும் குத்தாலம் அன்பழகன் வந்து சந்தித்தது பற்றி கட்சி மேலிடத்துக்கு தகவல் அனுப்பப்பட்டு விட்டது. குத்தாலம் அன்பழகன் மீது இப்போது திமுக தலைமை அதிருப்தியில் உள்ளது. ஏற்கனவே மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகனுக்கும் குத்தாலம் அன்பழகனுக்கு இடையில் சுமுக உறவு இல்லை. இந்தப் பின்னணியில் ஆளுநர் நிகழ்ச்சி தொடர்பாக தன்னிச்சையாக ஆதீனத்தை சந்தித்து அழுத்தம் கொடுத்தது தொடர்பாக அன்பழகன் மீதும் மாவட்ட பொறுப்பாளர் தனது அதிருப்தியை தலைமைக்கு தெரிவித்துள்ளார்"என்கின்றன மயிலாடுதுறை திமுக வட்டாரங்கள். ‌‌‌‌‌

இதே நேரம் ஆதீனமும் இந்த விஷயத்தில் மிக சாதுரியமாக அரசியல் செய்து விட்டார் என்கிறார்கள் மயிலாடுதுறையின் மூத்த பத்திரிக்கையாளர்கள்.

"மாநில திமுக அரசோடும் திமுக புள்ளிகளுடன் நல்லுறவில் இருக்கும் ஆதீனம் அதேநேரம் தனக்கு ஆளுநரிடமும் செல்வாக்கு இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார். மேலும் அந்த விழாவில் கூட தான் இரண்டு தரப்புக்கும் வேண்டியவர் என்பதை தன் பேச்சின் மூலம் வெளிப்படுத்தி விட்டார். 'தமிழ்நாடு இரண்டு சூரியன்களால் பிரகாசமாக இருக்கிறது, ஒரு சூரியன் ஆளும் உதய சூரியன். இன்னொரு சூரியன் ரவி என்ற பெயருடைய ஆளுநர்' என்று பேசி இரண்டு தரப்புக்கும் தான் பொதுவானவர் தான் என்பதை வெளிப்படுத்தி விட்டார் ஆதீனம்" என்கிறார்கள் மயிலாடுதுறையின் மூத்த பத்திரிக்கையாளர்கள்.

வேந்தன்

திருவாரூர் வீதிக்கு கலைஞர் பெயர்: பாஜகவுக்கு பணிந்ததா திமுக? ...

8 நிமிட வாசிப்பு

திருவாரூர் வீதிக்கு கலைஞர் பெயர்: பாஜகவுக்கு பணிந்ததா திமுக?

குவாரி கொடூரம்: பின்னணி முகம்!

5 நிமிட வாசிப்பு

குவாரி கொடூரம்: பின்னணி முகம்!

சிறப்புக் கட்டுரை: இலங்கை: பெரும்பான்மைவாதம் என்ற தேசத்தின் ...

19 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: இலங்கை: பெரும்பான்மைவாதம் என்ற தேசத்தின் புதைகுழி!

புதன் 20 ஏப் 2022