மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 19 ஏப் 2022

பெற்றோர்களுக்கு முதல்வர் அறிவுரை!

பெற்றோர்களுக்கு முதல்வர் அறிவுரை!

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கல்வி மட்டும்தான் திருட முடியாத சொத்து என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை, லேடி வெல்லிங்டன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற “நம் பள்ளி நம் பெருமை” என்ற பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இத்திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “பள்ளிப் பருவம் என்பது திரும்பக் கிடைக்காத ஒரு மகிழ்ச்சியான காலம். ஒரு தலைமுறையில் பெறக்கூடிய கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும். உங்களிடம் இருந்து யாராலும் அதை பறிக்க முடியாது, திருட முடியாத ஒரு சொத்து இருக்கிறது என்றால், அது உங்களது கல்வி மட்டும்தான். அதனால்தான் பள்ளிக் கல்விக்கு இந்த அரசு மிகமிக முக்கியத்துவத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது.

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகிய மூவரது சிந்தனையும் ஒரே நேர்கோட்டிலிருந்தால்தான், கல்வி நீரோடை மிக சீராகச் செல்லும். அதில் எவர் ஒருவர் தடங்கல் போட்டாலும் கல்வியானது தடம் புரண்டுவிடும்” என்றார்.

உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல, அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள். ஆனால் அவர்கள் உங்களில் இருந்து வரவில்லை. அவர்களுக்கு நீங்கள் உங்கள் அன்பைத் தரலாம், சிந்தனையை அல்ல. அவர்களுக்கு என அழகான சிந்தனைகள் உண்டு. நீங்கள் அவர்களைப் போல ஆவதற்கு உழையுங்கள், ஆனால் அவர்களை உங்களைப் போல ஆக்கிவிடாதீர்கள் என்ற கவிஞர் கலீல் ஜிப்ரானின் வரிகளை சுட்டிக்காட்டிப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “உங்கள் குழந்தைகள் என்னவாக ஆக வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அவர்களுக்குத் நீங்கள் தடை போடாமல், அவர்களுக்கு உதவி செய்யுங்கள், வழிகாட்டுங்கள். உங்கள் கனவுகளை தயவு செய்து அவர்கள் மீது திணிக்காதீர்கள்” என்று பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டார்.

கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ.36,895 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறது என்று தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், “அரசுப் பள்ளிகளை முழுமையாக மேம்படுத்துவதற்காகப் பள்ளி மேலாண்மைக் குழுக்களைச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகளைப் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்கள் போன்றோர் இந்தப் பள்ளி மேலாண்மைக் குழுவில் இடம் பெறுவார்கள்.

ஒவ்வொரு அரசுப் பள்ளியையும் தன்னிறைவு பெற்ற பள்ளியாக மாற்ற வேண்டும். அந்தப் பள்ளியின் தேவைகள் என்ன என்று அறிந்து அதை வழங்க வேண்டும். குழந்தைகளுக்குத் தரமான, சமமான கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும், அதற்குரிய நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும்.

இதனைச் செயல்படுத்துவதற்காகத்தான் பள்ளி மேலாண்மைக் குழுவை நாம் இப்போது அமைத்திருக்கிறோம். குழந்தைகளின் கற்றலை மேம்பாடு அடையச் செய்தல், பள்ளியின் சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக்குதல், இடைநிற்றலைத் தவிர்த்தல் மற்றும் இடைநின்ற குழந்தைகளை வயதுக்கேற்ற வகுப்பில் மீண்டும் பள்ளியில் சேர்த்தல், பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகளில் புதிய மேலாண்மைக் குழுக்கள் ஆக்கப்பூர்வமாகச் செயலாற்ற வேண்டும்.

அனைத்து வகை வன்முறைகளிலிருந்தும் குழந்தைகளை நாம் பாதுகாக்க வேண்டும். குழந்தைகள் ஒருவருடன் ஒருவர் அன்புடன் பழகும் சூழலை உருவாக்க வேண்டும்.

இதனைச் செயல்படுத்துவதற்காகத் தான் இந்தக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

தொடர்ந்து அவர், 20.3.2022 அன்று 37,558 அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டங்களில், மொத்தம் 23 லட்சத்திற்கும் அதிகமான பெற்றோர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியினுடைய வரலாற்றில் இது முக்கியமான மைல்கல் ஆக அமைந்திருக்கிறது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் ஒருசேர இதுபோல் பங்கேற்றது இதுதான் முதல்முறை.

இந்தச் சாதனை என்பது ஒரு நிகழ்ச்சியின் சாதனையாக மட்டும் அல்ல, வரலாற்றுச் சாதனையாக, கல்விச் சாதனையாக இது மாற வேண்டும்.

37,558 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.

பள்ளிகளின் பெருமையை மீட்டெடுத்து, நமது குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைக்கத் தமிழ்நாடு அரசு முன்னெடுக்கக்கூடிய இந்த முயற்சிக்குக் கை கொடுக்க வாருங்கள் என்று உங்களை எல்லாம் கேட்டுக்கொள்கிறேன். பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்தி பள்ளிகளை வளப்படுத்துவோம்” என்றார்.

-பிரியா

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

செவ்வாய் 19 ஏப் 2022