சிறப்புக் கட்டுரை: அமெரிக்காவுக்கு நெருக்கமாக இலங்கையைக் கொண்டுவரும் கட்டாயத்தில் இந்தியா!

ஷ்ரே கன்னா
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணறும் இலங்கை அரசு சரிவைச் சீராக்க அமெரிக்காவுடன் நெருக்கத்தை அதிகரிக்க வேண்டிய சூழலில் உள்ளது. சீனாவினால் உருவாகியிருக்கும் கடன் சூழ்நிலையைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்தாக வேண்டுமென்ற நிலையில், இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளோடு கைகோர்த்து அமெரிக்கா உடனான உறவைச் சீர்படுத்த வேண்டியது அவசியம்.
கடந்த ஏப்ரல் 12ஆம் தேதியன்று எண்ணெய் மற்றும் விவசாயத் தேவைகளுக்காக வாங்கப்பட்ட 51 பில்லியன் டாலர் வெளியுறவுக் கடனை முழுமையாக செலுத்தத் தவறியதாக அறிவித்தது இலங்கை அரசு. அந்நாட்டில் உருவாகியிருக்கும் உணவுப் பஞ்சம் மக்களை தெருவில் இறங்கிப் போராடிய வேண்டிய நிலைக்கு ஆளாக்கி சில நாட்களாகிவிட்டன. ‘கோதா வீட்டுக்குப் போ’ எனும் பதாகைகளுடன் மக்கள் எழுப்பும் குரலினால் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியன்று அவசர நிலையை பிரகடனம் செய்தார் அதிபர் கோத்தபய ராஜபக்சே. ஆனாலும், நான்கே நாட்களில் அது திரும்பப் பெறப்பட்டதனால் அது தொடர்பான கொந்தளிப்பு அடங்கியது. தற்போது முன்னாள் அதிபர் ஸ்ரீசேனாவின் ஸ்ரீலங்கா விடுதலைக் கட்சி உட்பட சில கட்சிகள் அரசுக்கான தங்களது ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளன. ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவைச் சேர்ந்த 12 பேர் உட்பட 42 பேர் ஆளும்கூட்டணிக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளதால் பெரும்பான்மை பலம் குறைந்துள்ளது.
எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாசாவின் சமகி ஜன பலவேகயா அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துடன் அதிபரின் எதேச்சதிகாரமிக்க நிர்வாக அதிகாரத்தை நீக்கும் வகையில் 20ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கான தனி நபர் மசோதாவையும் கொண்டு வந்துள்ளது. இதன் மூலமாக அதிபரிடம் குவிக்கப்பட்ட அதிகாரத்தை வரம்புக்கு உட்படுத்தி, ராஜபக்சேவின் குடும்பத்தினர் அல்லாதவர்கள் இடம்பெறும் இடைக்கால அரசுக்கு அதிகாரம் கிடைக்க வழி செய்யப்படும். தற்போது அதிபரிடம் இருந்து நிதி அதிகாரத்தைத் திரும்பப் பெற இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு தீர்வை மொழிந்துள்ளார் முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் பரவியிருந்த சிங்கள புத்த அலையைப் பயன்படுத்தி ராஜபக்சே குடும்பம் அரசியல் பீடத்தைக் கைப்பற்றியிருந்தது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கோத்தபயவின் மாபெரும் பொருளாதாரக் கொள்கைகள் தோல்வியடைந்துள்ளன. ஆனாலும் கோத்தபய அல்லது மகிந்த ராஜபக்சே இருவருமே இலங்கையை விட்டு வெளியேறுவதாக இதுவரை அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.
கைவிட்ட சீனா!
ராஜபக்சே குடும்பத்துடன் நெருங்கிய உறவு பாராட்டி வந்த சீனா, 2020இல் கொரோனா தொற்று நெருக்கடியின்போது 1 பில்லியன் டாலர் கடன் வழங்கியது; அதன் தொடர்ச்சியாக 1.5 பில்லியன் டாலர் அளவில் நாணய மாற்று ஒப்பந்தத்தையும் மேற்கொண்டது. ஆனாலும், சிங்கள பெரும்பான்மையினத்தவரிடையே உருவான சீனாவுக்கு எதிரான மனநிலை இலங்கையின் தென்பகுதியில் புதிதாக முதலீடுகளை மேற்கொள்ள எதிராக இருந்தது. இந்தியா தந்த அழுத்தம் காரணமாக இலங்கையின் வட பகுதியில் சீனா மேற்கொள்ளவிருந்த கலப்பு எரிசக்தி திட்டம் கைவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இலங்கை சென்ற சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மூன்றாம் தரப்பு தலையீடு இல்லாமல் சம அளவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றார். சிங்களர்கள் இடையே உருவான சீனாவுக்கு எதிரான உணர்வு ராஜபக்சே அரசை இந்தியா பக்கம் திரும்பச் செய்தது. அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு புனிதமான சீதா கோயில் கல் தந்ததில் தொடங்கி மீண்டும் டெல்லியுடன் உறவைப் புதுப்பித்தது. இதன் காரணமாக 2.4 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன்கள், திரிகோணமலை எண்ணெய் ஆலை உட்பட சில பலன்களையும் பெற்றுள்ளது. இது தவிர தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டை ஒட்டி 11,000 மெட்ரிக் டன்கள் அரிசியையும் இலங்கைக்கு அனுப்பியுள்ளது இந்தியா.
தற்போது ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராக இலங்கையிலுள்ள சாதாரண மக்கள் கிளர்ந்துள்ள நிலையிலும் இந்திய அரசு உதவிகளைத் தொடர்வது சரிதானா என்ற கேள்வி எழுந்துள்ளது. அது ராஜபக்சே குடும்பத்தினரைக் காக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் கருதப்படுகிறது.
திசை திரும்பும் இலங்கை!
தற்போது நாடு எதிர்கொள்ளும் பொருளாதாரச் சூழலினால் தொடர்ந்து உணவையும் எண்ணெயையும் இலங்கைக்கு இந்தியா வழங்குவது இயலாத காரியம். எனவே, அமெரிக்கா உடன் இலங்கை கைகோர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2020இல் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெற மறுத்தது ராஜபக்சே அரசு. சீன ஆதரவு மனோபாவத்தில் அமெரிக்கா வழங்கிய 480 மில்லியன் டாலர் மதிப்புள்ள உதவியைப் பெற விரும்பவில்லை. குவாட்டை விமர்சித்ததோடு, அது இந்திய பசிபிக் பிராந்தியத்தில் மறைமுகப் போர் சூழலுக்கு வழிவகுக்கும் என்றது. தற்போது, வேறு வழியில்லாமல் மீண்டும் ஐஎம்எஃப் உதவியை நாட வேண்டிய நிலையில் இலங்கை உள்ளதால், தற்போதிருக்கும் பொருளாதாரச் சூழலைக் கடக்க இந்தியாவின் ராஜதந்திர உதவிகளைப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ராஜபக்சே குடும்பத்தின் அதிகாரத்தில் இருந்து விடுபட விரும்பும் இலங்கை, சீனாவின் கடன் வளையத்தில் இருந்து தப்பி மீண்டும் உலக அரங்கில் தனது இடத்தை திடப்படுத்திக்கொள்ள அமெரிக்கா பக்கம் திசை திரும்ப வேண்டும். அப்போது, இலங்கையில் இந்தியாவுக்கான செல்வாக்கும் பழைய நிலையை எட்டும்!
*
நன்றி: தி ப்ரின்ட்
தமிழில்: புலிகேசி