மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 17 ஏப் 2022

இருளர்களுக்கு எதிராக சிறுத்தைகள்? கிள்ளை பேரூராட்சி சலசலப்பு!

இருளர்களுக்கு எதிராக சிறுத்தைகள்? கிள்ளை பேரூராட்சி சலசலப்பு!

திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கிறது.

ஆனால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் கிள்ளை பேரூராட்சியில் சிறுத்தைகள் கட்சி தனது அரசியல் சமூக கொள்கைக்கே எதிராக செயல்படுகிறது என்று திமுகவினரே குற்றம் சாட்டுகிறார்கள்.

கிள்ளை பேரூராட்சி தலைவராக திமுகவின் இருளர் சமூகத்தைச் சேர்ந்த மல்லிகா இருக்கிறார். துணைத் தலைவராக திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினராக கிள்ளை ரவீந்திரன் பதவி வகிக்கிறார்.

பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாகவே இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த சேர்மன் மல்லிகாவை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அலையாத்தி காடுகள் மற்றும் மாங்குரோவ் காடுகள் நிறைந்து உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான பிச்சாவரம் இந்த கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில்தான் உள்ளது.

இந்தப் பேரூராட்சியில் எம்ஜிஆர் நகர், கலைஞர் நகர், தளபதி நகர், சிசில் நகர், கிரிடு நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே வசிக்கிறார்கள். இதனால் இந்த பேரூராட்சியின் 8, 10 வார்டுகளில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள்.

மொத்தம் 15 வார்டுகளில் திமுக 9 அதிமுக 2 காங்கிரஸ் 3 விடுதலை சிறுத்தைகள் 1 என்ற அளவில் வெற்றி பெற்றனர். கூட்டணி பலம் இல்லாமலேயே திமுக பெரும்பான்மை பெற்ற நிலையில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த மல்லிகா பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக ரவீந்திரன் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலையில்தான் பேரூராட்சி செயல்படத் தொடங்கிய சில நாட்களிலேயே விடுதலை சிறுத்தை கட்சியினர் சேர்மன் மல்லிகா மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுக்கி போராட்டம் செய்து வருகிறார்கள்.

கிள்ளை பேரூராட்சியில் நடப்பது என்ன என்பது குறித்து துணைத்தலைவர் கிள்ளை ரவீந்திரனிடம் பேசினோம்.

"நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மாநிலம் முழுக்க ஒரு கூட்டணி என்றால் இங்கே மட்டும் வித்தியாசமான கூட்டணி அமைத்தார்கள் விடுதலை சிறுத்தைகள்.

அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளோடு விடுதலை சிறுத்தைகள் கூட்டணி அமைத்து திமுகவுக்கு எதிராக செயல்பட்டார்கள். திமுக போட்டியிட்ட 6, 11 வார்டுகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போட்டியிட்டனர். வேட்புமனு பரிசீலனையின் போது விடுதலை சிறுத்தைகளின் வேட்பாளர்களில் ஒருவருக்கு இரண்டு இடத்தில் வாக்குகள் உள்ளதையும், இன்னொரு வேட்பாளர் நீதிமன்றத்தில் ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் செலுத்தியதை வேட்புமனுவில் மறைத்த விவகாரத்தை எடுத்து சொன்னோம். இதனால் இரண்டு விடுதலைச் சிறுத்தை வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஐந்தாவது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் விஸ்வநாதனின் மனைவி பாரதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஒருவர் தான் இங்கே விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பினர்.

தேர்தலின் போது நடந்த விவகாரங்களை மனதில் வைத்துக்கொண்டு சேர்மன் மற்றும் துணை சேர்மன் பதவி ஏற்றுக்கொண்டு நடந்த முதல் கூட்டத்திலேயே... விடுதலை சிறுத்தைகள் கவுன்சிலர் பாரதி பேரூராட்சி தலைவரை கண்டித்து போராட்டம் செய்தார். ஏப்ரல் 11ஆம் தேதி சிறப்பு கூட்டம் நடந்தபோதும் போராட்டம் செய்தார். சேர்மனுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்" என்று தெரிவித்தார் கிள்ளை ரவீந்திரன்.

பேரூராட்சி தலைவர் மல்லிகாவிடம் நாம் பேசினோம்.

"நான் பழங்குடியினர் பிரிவில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். தாவரவியலில் பட்டப் படிப்பு படித்து உள்ளேன். (பிஎஸ்சி பாட்டனி), நான் இந்தப் பதவிக்கு வந்தது சமூக ரீதியாக சிலருக்கு பிடிக்கவில்லை. அதை வெளிப்படையாக சொல்லாமல் தொடக்கத்திலிருந்தே என்மீது ஊழல் புகார்களை சுமத்தி வருகிறார்கள். கிள்ளை பேரூராட்சியின் ஆண்டு வருமானம் 25 லட்ச ரூபாய். ஆனால் மாதம் ஒன்றுக்கு30 முதல் 35 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஊதியம் ஐந்து லட்ச ரூபாய், மின்சார கட்டணம் 4 லட்ச ரூபாய், பராமரிப்பு செலவுகள், டீசல், பெட்ரோல், கொசு மருந்து போன்றவை உட்பட 20 லட்ச ரூபாய் என ஆகிறது.

நான் பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்று 42 நாட்கள் தான் முடிவடைந்துள்ளது. பேரூராட்சிக்கு இன்னும் எந்த நிதியும் வரவில்லை. எந்த வேலையும் தொடங்கப்படவில்லை. ஆனால் ஊழல் செய்துவிட்டேன் என்று போராட்டம் செய்கிறார் விடுதலை சிறுத்தைகள் கவுன்சிலர் பாரதியின் கணவர் விஸ்வநாதன். ஏதோ அவர்தான் கவுன்சிலர் என்பதைப் போல

விஸ்வநாதன் செயல்படுகிறார். அதிகாரிகளை மிரட்டுகிறார்.

இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண் பேரூராட்சி தலைவர் ஆகி விட்டதை சகித்துக் கொள்ள முடியாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த விஸ்வநாதன் போராட்டம் செய்து என்னை அச்சுறுத்தி வருகிறார்.

தமிழக முதல்வர் இருளர் உள்ளிட்ட மிகவும் ஒடுக்கப்பட்ட சமுதாயமான எங்களுக்கு ஆதரவாக இருந்து எங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எங்கள் மாவட்ட அமைச்சர் எம். ஆர். கே பன்னீர்செல்வம் இந்த பேரூராட்சியில் தலைவர் பதவியை இருளர் சமுதாயத்தின் பெண்ணுக்கே தரவேண்டுமென பாடுபட்டு பெற்றுக் கொடுத்தார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் என் மீது புகார்களை சொல்லி போராட்டம் நடத்துவது வேதனையாக இருக்கிறது" என்று கூறினார் கிள்ளை பேரூராட்சித் தலைவரான மல்லிகா.

இவர்களின் புகார்கள் பற்றி விளக்கம் கேட்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் பாரதி, அவரது கணவரான நகர செயலாளர் விஸ்வநாதன் ஆகியோருக்கு தொடர்ந்து நாம் போன் செய்தோம் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

வணங்காமுடி

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

ஞாயிறு 17 ஏப் 2022