மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 14 ஏப் 2022

டிஜிட்டல் திண்ணை: பாஜக தலைமையில் கூட்டணி: தினகரனை இறுக்கும் டெல்லி

டிஜிட்டல் திண்ணை: பாஜக தலைமையில் கூட்டணி:  தினகரனை இறுக்கும் டெல்லி

வைஃபை ஆன் செய்ததும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஏப்ரல் 12ஆம் தேதி டெல்லியில் அமலாக்கத்துறை விசாரணையில் ஆஜரானது பற்றிய குறிப்பை அனுப்பியது இன்ஸ்டாகிராம்.

அது தொடர்பான பின்னணி தகவல்களை டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ்அப்.

"2017 ஆம் ஆண்டு முடக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் ஆணையத்துக்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்தார் என்ற சர்ச்சை எழுந்தது. இதனடிப்படையில்

தினகரன் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் மூன்று மாதங்கள் அவர் திகார் சிறையில் இருந்தபோதுதான் தர்மயுத்தம் நடத்திய பன்னீரையும் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியையும் ஒன்றிணைக்கும் வேலையை தீவிரமாக செய்தது பாஜக.

தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக தினகரனும், புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் என்பவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் லஞ்சம் வாங்கிய அல்லது வாங்க முயன்ற அந்த தேர்தல் அதிகாரி யார் என்று இன்று வரை கண்டறியப்படவில்லை.

அந்த வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட தினகரன் அதிமுகவில் இருந்து முற்றுமுழுதாக ஒதுக்கி வைக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையையும் டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை கொடுத்து நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் லஞ்சம் கொடுத்த பணம் எங்கிருந்து வந்தது என்ற அடிப்படையில் இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை தினகரன் மீதும் சுகேஷ் மீதும் வழக்கு பதிவு செய்தது.

சசிகலா வெளியே வந்து அதிமுகவை ஒருங்கிணைக்க போகிறேன் என்று சொல்லி வரும் நிலையில், கடந்த மாதத்திலிருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்சி பணிகளை தீவிரப்படுத்தினார் தினகரன். எனது முடிவு என்று ஏதுமில்லை தொண்டர்களின் முடிவுதான் என் முடிவு என்றும் அண்மையில் தினகரன் கூறியிருந்தார்.

இந்த சூழலில்தான் அமலாக்கத்துறை கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி டெல்லி அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று தினகரனுக்கு சம்மன் அனுப்பியது. சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று முடிவு செய்தது அமலாக்கத்துறை. ஏப்ரல் 8ஆம் தேதி தன்னால் ஆஜராக முடியவில்லை என்று கூறி ஏப்ரல் 12ஆம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார் டிடிவி தினகரன்.

அன்று பகல் 12:30 மணிக்கு தினகரனிடம் தொடங்கிய விசாரணை இரவு 11 மணி வரை நீடித்துள்ளது. சுமார் பதினோரு மணி நேரம் அமலாக்கத் துறையின் அலுவலகத்தில் இருந்த தினகரனுக்கு ஹோட்டலிலிருந்து உணவை வரவழைத்துக் கொடுத்தது அமலாக்கத்துறை. விசாரணை முடிந்ததும் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த தினகரன், 'இந்த வழக்கில் நான் நிரபராதி. இதற்குப் பின்னால் யாரோ இருந்து இயக்குகிறார்கள்' என்று சொல்லிவிட்டு களைப்புடன் புறப்பட்டார்.

மறுநாள் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், '11 மணிநேரம் விசாரணை என்றால் 11 மணி நேரமும் விசாரணை இருக்காது' என்றும் குறிப்பிட்டார்.

அமலாக்கத்துறை தினகரனை டெல்லிக்கு வரவழைத்து 11 மணிநேரம் விசாரணை நடத்தியதன் பின்னணி குறித்து அரசியல் வட்டாரத்தில் நிறைய தகவல்கள் கிடைக்கின்றன.

தேர்தல் பணிகளை கட்சி ரீதியாக பாஜக ஆரம்பிக்கும் முன்பே, சிபிஐ, அமலாக்கத் துறை, வருமானவரித்துறை போன்ற ஏஜென்சிகள் பாஜக சார்பாக தேர்தல் பணிகளை தொடங்கி விடுகின்றன.

அந்த வகையில் டிடிவி தினகரன் தற்போது அமலாக்கத்துறையின் விசாரணைக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னணியிலும் அரசியல் இருக்கிறது. வரும் 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தனது தலைமையில் கூட்டணி அமைவதற்கு பாஜக தீவிர முயற்சி செய்து வருகிறது.

அண்மையில் தமிழக பாஜக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'வரும் மக்களவைத் தேர்தலில் 24 இடங்கள் பாஜகவுக்கு கிடைக்கும். செலவைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நாம் கேட்டால் அமித்ஷா எவ்வளவு வேண்டுமானாலும் தருவார்' எல்லாம் உற்சாகமாக சொல்லியிருக்கிறார்.

கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்டது பாஜக. அதேநேரம் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்வதாக அண்ணாமலையும் எடப்பாடியும் அறிவித்தார்கள். இந்த நிலையில் வரும் மக்களவைத் தேர்தல் பிரதமரை முடிவு செய்ய நடக்கும் தேர்தல் என்பதால் தேசிய கட்சியான தங்களது தலைமையில்தான் தமிழகத்தில் கூட்டணி அமைய வேண்டும் என்று பாஜக முடிவெடுத்திருக்கிறது. எடப்பாடி சம்மதிப்பாரா என்ற கேள்வி பாஜகவின் மாநில நிர்வாகிகளுக்குள்ளேயே எழுந்த நிலையில், அவரை சமாளிக்க வைப்பது எப்படி என டெல்லிக்கு தெரியும் என்றும் பேசப்பட்டிருக்கிறது.

பாஜக தலைமையிலான இந்த கூட்டணியில் அதிமுக, அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை கொண்டு வருவது என்று பாஜக முடிவெடுத்து முயற்சித்து வருகிறது.

அதன் ஒரு கட்டமாக தான் தினகரனை சரிக்கட்டும் வகையில் அமலாக்கத் துறை விசாரணை என்ற முதல்கட்ட அம்பை ஏவியிருக்கிறது பாஜக. தினகரன் இதற்கு உடனடியாக எந்த பதிலும் சொல்லாத நிலையில், அவரது கட்சியில் உள்ள பிரமுகர்களை தங்கள் பக்கம் இழுக்கும் செயல் திட்டத்தையும் கைவசம் வைத்துள்ளது பாஜக.

ஏற்கனவே அமமுக நிர்வாகிகள் பலர் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் சென்றுவிட்டனர். இந்த நிலையில், மீதமிருக்கும் முக்கியஸ்தர்களையும் பாஜக இழுக்க முயற்சிப்பதை அறிந்து கொண்டு தான் கடந்த சில மாதங்களாக கட்சி பணிகளை தீவிரப்படுத்தி இருக்கும் தினகரன், மண்டலப் பொறுப்பாளர்களை மாவட்ட ரீதியாக ஆய்வு செய்யச் சொல்லி உத்தரவிட்டார். அதில் முதல் கட்டமாக நாளை முதல் மண்டலச் செயலாளர்களை சந்தித்து ஆய்வறிக்கைகளை பெற்றுக்கொண்டு கட்சிப் பணிகளை முடுக்கி விட முடிவெடுத்திருக்கிறார் தினகரன்.

மக்களவைத் தேர்தல் நெருங்க நெருங்க பாஜக தமிழகத்தில் நடக்கும் அரசியல் ஆட்டங்கள்

அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்கின்றன"என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

.

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வியாழன் 14 ஏப் 2022