மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 14 ஏப் 2022

ஆளுநரின் தேநீர் விருந்து: புறக்கணிக்கும் கட்சிகள்!

ஆளுநரின் தேநீர் விருந்து: புறக்கணிக்கும் கட்சிகள்!

தமிழக சட்டப் பேரவையிலிருந்து நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட முன்வடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை, குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதில்லை எனக் கூறி தமிழக அரசியல் கட்சியினர் ஆளுநர் மீது அதிருப்தியில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் ஆளுநரின் தேநீர் விருந்தை அரசியல் கட்சியினர் புறக்கணிப்பதாகத் தெரிவித்து வருகின்றனர்.

இன்று (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் விசிக, மமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “தமிழ்ப் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்குத் தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் குரலையும், தமிழக மக்களின் கோரிக்கைகளையும் முற்றாக நிராகரிப்பதோடு, அரசுக்கு மேலானதொரு அதிகார மையமாகச் செயல்படத் தொடர்ச்சியாக ஆளுநர் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் தமிழகச் சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோதா உள்ளிட்டவற்றைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தமிழகச் சட்டமன்றத்தின் மாண்பைச் சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகள், துணைவேந்தர் நியமன பிரச்சினை, இந்தியாவின் பன்மைத்துவத்தை நிராகரிக்கும் உரை போன்ற நடவடிக்கைகளால் தமிழக மக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் எங்களது கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட யாரும் பங்கேற்பதில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) முடிவு செய்துள்ளது" என்று அறிவித்துள்ளார்.

விசிக எம்.பி திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழர் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஆளுநர் அவர்கள் சித்திரை நாள் தேநீர் விருந்துக்கு அழைப்பது தமிழகத் தலைவர்களைக் கேலி செய்வதாக உள்ளது. நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் காலம் கடத்தும் நிலையில் அவர் அழைப்பை எங்ஙனம் ஏற்க இயலும்?

சனாதனக் கருத்தியலின் பரப்புநராகச் செயல்படும் ஆளுநர் அவர்கள், சமூகநீதிக் கருத்தியலைச் சிதைக்கும் வகையில்தான் ஏற்கனவே நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பினார். அடுத்து நிறைவேற்றப்பட்ட அதே மசோதாவை இன்னும் கிடப்பில் போட்டிருக்கிறார். இந்த நிலையில் அவரது அழைப்பை எவ்வாறு ஏற்க இயலும்? எனவே, ஆளுநரின் தமிழர் விரோதப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆளுநரின் சித்திரை நாளுக்கான தேநீர் விருந்து அழைப்பை விசிக புறக்கணிக்கிறது. இந்த நிலையில், நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பி வைக்குமாறு வலியுறுத்துகிறோம்" என்று கூறியுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, “தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கிறார் ஆளுநர். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கக்கூடிய ஆளுநர் அங்கு சென்று தமிழக அரசின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் விரோதமாகப் பேசி வருகிறார்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பிலுள்ள மருத்துவர் சுதா சேஷய்யன் அவர்களின் பதவிக்காலம் முடிந்த பின்னரும் மேலும் ஒரு ஆண்டுக்கு எதேச்சதிகாரமாகப் பதவி நீட்டிப்பு ஆளுநரால் வழங்கப்பட்டிருக்கிறது.

இதுபோன்று தொடர்ந்து தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தினை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணிக்குமென முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

-பிரியா

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

வியாழன் 14 ஏப் 2022