மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 13 ஏப் 2022

அயோத்தியா மண்டப வழக்கு: நீதிமன்றம் உத்தரவு!

அயோத்தியா மண்டப வழக்கு: நீதிமன்றம் உத்தரவு!

அயோத்தியா மண்டபம் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இடைக்காலத் தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ ராம சமாஜ் என்ற தனியார் அமைப்பு அயோத்தியா மண்டபத்தை நிர்வகிக்கிறது. இந்த மண்டபத்தை 2014ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்தது. தேனாம்பேட்டை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலரை அயோத்தியா மண்டபத்தின் தக்காராகவும் நியமித்தது.

இதை எதிர்த்து ராம சமாஜ் அமைப்பின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் வழக்கு நிலைக்கத்தக்கதல்ல என்று கூறி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அயோத்தியா மண்டபத்தைப் பார்வையிட வந்தனர்.

அப்போது அயோத்தியா மண்டபத்தைச் சட்டவிரோதமாக இந்து சமய அறநிலையத் துறை கைப்பற்ற முயல்வதாக பாஜகவினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன் உட்பட பாஜகவினர் பலரும் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட உமா ஆனந்தன் உட்பட 75 பேர் மீது போலீஸார் தடையை மீறிச் செயல்படுதல், சட்ட விரோதமாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராம சமாஜ் அமைப்பின் தலைவர் ராமச்சந்திரன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ராமச்சந்திரன் தனது மனுவில், எங்கள் அமைப்பு 1958ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. அயோத்தியா மண்டபத்தில் கலை, கலாச்சாரம், சமயம் தொடர்பான பல்வேறு ஆன்மிகக் கூட்டங்களும் திருமணங்களும் நடத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ராம நவமியை முன்னிட்டு அயோத்தியா மண்டபத்தில் ராமர், லட்சுமணன், சீதாதேவி, அனுமன் ஆகியோரது சிலைகள் வைக்கப்பட்டுச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் அயோத்தியா மண்டபத்தைக் கோயில் எனக் கூறி அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தக்காரை நியமித்தது சட்டவிரோதம். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி. தமிழ்செல்வி முன்பு நேற்று (ஏப்ரல் 12) விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், “இந்த அமைப்பில் ஏற்கனவே நிர்வாகிகளாக இருந்த ஒரு சிலர் தங்களுக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாகப் பொய் புகார் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை அயோத்தியா மண்டபத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

இது கோயில் அல்ல. அறநிலையத் துறை அதிகாரிகள் இந்த தனியார் அமைப்புக்குள் நுழைய முற்பட்டதை எதிர்த்துப் போராடியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். திருமணத்துக்காக இந்த மண்டபம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதால் அங்கு வருபவர்கள் யாரையும் தடுக்கக்கூடாது ”என்று தெரிவித்தார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், "தக்காரை நியமித்து அறநிலையத் துறை உதவி ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கைத் தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். அதன்படி கோயில் நிர்வாகத்தைத் தக்கார் நேற்று ஏற்றுக் கொண்டார்.

அப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் உடனே விடுவிக்கப்பட்டனர். அயோத்தியா மண்டபத்திற்குள் செல்ல யாருக்கும் தடையில்லை. திருமண மண்டபத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்விவகாரம் தொடர்பாக விரிவாகப் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் தேவை” என்று கூறினார்.

இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதற்குள் தமிழக அரசு இவ்விவகாரம் தொடர்பாகப் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் எந்த ஒரு இடைக்காலத் தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் கூறினர்.

இதனிடையே பதற்றமான சூழல் நிலவியதால் அயோத்தியா மண்டபத்தைச் சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

-பிரியா

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

புதன் 13 ஏப் 2022