மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 ஏப் 2022

சிறப்புக் கட்டுரை: ஆங்கிலம் – இந்திய ஒன்றியத்தின் ஆதார விசை!

சிறப்புக் கட்டுரை: ஆங்கிலம் – இந்திய ஒன்றியத்தின் ஆதார விசை!

ராஜன் குறை

இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக ஆங்கிலம் தொடர்ந்து நீடிக்கலாமா? இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும், தீர்ப்புகளும் தொடர்ந்து ஆங்கிலத்தில் நிகழலாமா? இந்திய மாநில அரசுகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றங்களும், மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசாங்கத்துக்கும் இடையிலான தகவல் தொடர்பும் ஆங்கில மொழியில் நிகழலாமா?

பகுத்தறிவுடன் சிந்திப்பவர்கள் இந்த கேள்விகளுக்கு அளிக்கக் கூடிய விடை, அவசியம் ஆங்கிலம்தான் தொடர்ந்து இங்கெல்லாம் நீடிக்க வேண்டும் என்பதுதான். அதுதான் வரலாறு உருவாக்கி வழங்கிய தீர்வு என்பதுடன், பல்வேறு விதங்களில் மிகுந்த பயனுள்ள தீர்வுமாகும். ஏனெனில் ஆங்கிலம் இல்லையெனில் ஒன்றிய அரசோ, இந்திய தேசிய அரசியலோ, தேசியக் குடியரசோ சாத்தியம் ஆகியிருக்காது. இது மிக எளிய, அடிப்படையான வரலாற்று உண்மை.

இதற்கு மாறாக ஒரு கருத்து பல வட மாநிலத்தவரிடையே கடந்த நூறாண்டுகளாக நிலவி வருகிறது. அது என்னவென்றால், ஆங்கிலம் ஆங்கிலேயர்கள் எனப்படும் பிரிட்டிஷ்காரர்களின் மொழி. அவர்கள் நம்மை ஆட்சி செய்தார்கள். அவர்கள் ஆட்சியிலிருந்து நாம் போராடி விடுதலை பெற்றோம். அதனால் அவர்கள் மொழியை நாம் தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது என்பது அவர்கள் வாதம். சரி, அப்படி ஆங்கிலம் கூடாதென்றால் எதைப் பயன்படுத்தலாம் என்று கேட்டால், அதிக மக்கள் பேசும் இந்தி மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்பார்கள். இது பகுத்தறிவுக்குப் பொருந்தாத, நடைமுறை சாத்தியமற்ற, வெற்று உணர்ச்சி கோஷம். இது நடைபெறாது என்று தெரிந்தபிறகும் அலுவல் மொழி நடைமுறைப்படுத்தும் குழு Official Language Implementation Committee என்று ஒன்றை வைத்துக்கொண்டு, 'ஹிந்தி திவஸ்' என்று வருடா வருடம் சடங்கு நடத்துகிறார்கள். அப்படி ஒரு சடங்கில்தான் அமித் ஷா மீண்டும் ஆங்கிலத்தைத் தவிர்க்க வேண்டும், இந்தியை அலுவல் மற்றும் இணைப்பு மொழியாக இந்தியாவில் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு பல்வேறு மாநிலங்களிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழி, உச்ச நீதிமன்றத்தின் வழக்காடு மொழி, ஒன்றிய அரசாங்கம் மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான தொடர்பு மொழி, பல்கலைக்கழக உயர்கல்வி, ஆய்வுக்கல்வி மொழி ஆகியவை இனி எல்லா காலங்களிலும் ஆங்கிலம்தான் என்று நாம் திட்டவட்டமாக முடிவு செய்வதுதான் நமது தேசத்தின் எதிர்காலத்துக்கு நல்லது. முந்நூறு ஆண்டுகளாக இந்தியர்களால் பயிலப்பட்டு, சிறப்பாகப் பயன்படுத்தப்படும் ஆங்கில மொழியும் இன்று இந்திய மொழிகளில் ஒன்றுதான். பல கோடி மக்கள் அலுவலகத்திலும், இல்லத்திலும் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். சேத்தன் பகத்தின் ஆங்கில நாவல்கள் இந்தியா முழுவதும் எழுபது லட்சம் பிரதிகள் விற்கின்றன – அப்படியென்றால் ஏழு கோடி பேர் படிக்கிறார்கள் என்று கூறலாம். இப்படி இந்திய வாழ்வின் அங்கமாகிவிட்ட ஆங்கிலத்தைத் தவிர்த்து, இந்தியைப் பயன்படுத்துவது என்பது கனியிருப்ப காய் கவர்ந்தற்று எனலாம். தேசியத் தற்கொலை என்றும் கூறலாம். ஏன் என்று விரிவாகப் பார்ப்போம்.

தேசத்தின் உருவகங்கள்: சாலட் கிண்ணமா? கூழ் சட்டியா?

மானுடவியலாளர் கிளிஃபோர்ட் கியர்ட்ஸ் தேசங்களை இருவகையாக உருவாக்கலாம், உருவகிக்கலாம் என்று கூறினார். ஒன்று ஒரு கிண்ணத்தில் காய்களையோ அல்லது கனி வகைகளையோ துண்டுகளாக வெட்டி போட்டுக் கலப்பது. அதன் மேல் காய்கள் என்றால் உப்பு, மிளகு, எலுமிச்சைச் சாறு, மயோனைஸ் போன்ற தயாரிப்புகளைச் சேர்த்துக் கலக்கலாம். பழங்கள் என்றாலும் சிலர் உப்பு, மிளகு பொடித்துத் தூவுவார்கள், சிலர் தேன் போன்றவற்றை சேர்ப்பார்கள். பழங்களுடன் ஐஸ்க்ரீம் சேர்த்தும் சாப்பிடலாம். இந்த சாலட் கிண்ணங்களில் அந்தந்த காய்கள், இலைகள் அல்லது கனிகள் அதன் மூலச்சுவை மற்றும் வடிவம் மாறாமல் இருக்கும். இன்னொரு முறை என்பது கூழ் சட்டியில் போட்டு வேறு திரவங்கள், மாவுகளைச் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு அனைத்தும் உருத்தெரியாமல் கலந்து கூழாவது. ஆங்கிலத்தில் இந்த இருவகைகளை சாலட் பெளல் (Salad Bowl), மெல்டிங் பாட் (Melting Pot) என்று கூறினார் கியர்ட்ஸ்.

சாலட் கிண்ணம் என்ற அமைப்பில் மக்கள் தொகுதிகள் அவரவர் தனித்தன்மைகள் கெடாமல் கிண்ணமாகிய தேசத்தில் ஒன்றாக இருப்பர். கூழ் சட்டி அமைப்பில் அவர்கள் தனித்தன்மைகள் எல்லாம் உருத்தெரியாமல் பொதுவான கூழில் கரைந்துவிடும்.

பிரிட்டிஷ்காரர்கள் இந்திய மன்னர்களிடமிருந்து ஆட்சி பிரதேசங்கள் பெற்றும், பறித்தும் ஒன்றிணைத்தபோது தங்கள் நிர்வாக வசதிக்காக இந்தியா என்ற ஆட்சிப் பிரதேச வரையறையை உருவாக்கினார்கள். அதனுள் பர்மா எல்லாம்கூட ஒருகட்டத்தில் இருந்தது. பின்னர் பர்மாவைப் பிரித்துவிட்டார்கள். இலங்கையை ஒருபோதும் இந்தியாவுடன் சேர்க்கவில்லை. இப்படி பிரிட்டிஷ்காரர்களால் அவர்கள் வசதிக்காக ஒருங்கிணைக்கப்பட்ட ஆட்சிப் பிரதேசம்தான் இந்தியா.

காங்கிரஸ் கட்சி உருவானபோது இந்திய மக்கள் தொகுதிகள் அனைத்திலிருந்தும் பிரதிநிதிகளைத் திரட்டி ஒரு கட்சியை உருவாக்கி சுயாட்சி உரிமைகள் கோரினார்கள். இந்திய மக்கள் தொகுதிகளுக்குள் சில பண்பாட்டு தொடர்புகள், ஒப்புமைகள் உண்டு; நிறைய வித்தியாசங்களும், வேறுபாடுகளும் உண்டு. பார்ப்பன ஜாதிகளே வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பண்பாட்டு வழக்கங்களைக் கொண்டிருந்தார்கள். வங்காளத்தில் பார்ப்பனர்கள் மீன் சாப்பிடுவார்கள்; தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் அதைக் கேட்டால் தலையில் அடித்துக்கொள்வார்கள்.

காங்கிரஸ் கட்சி இந்தியாவை மக்களாட்சி குடியரசாக உருவாக்க வேண்டும் என்று நினைத்தபோது அது சாலட் கிண்ணமா, கூழ் சட்டியா என்பதில் தலைவர்களுக்கு முற்றிலும் தெளிவில்லை. ஆனால், இந்திய மக்கள் தொகுதிகள் தனித்தனி தேசமானால் அந்த தேசங்களுக்குள் மீண்டும் முன்பு போல போர்கள் மூண்டால் ஒட்டுமொத்தமாக பின்னடைவே ஏற்படும் என்று நினைத்தார்கள். அந்த கவலை சரியானதுதான். ஒரு எதேச்சதிகாரி வங்காளத்தை ஆண்டால், ஒரிஸ்ஸாவை ராணுவ ஆக்கிரமிப்பு செய்யலாம் அல்லது ஒரு சர்வாதிகாரி கர்நாடகாவில் உருவானால் ஹொகனேகல்லைக் கைப்பற்றலாம். அதனால் இந்தியா ஒரே குடியரசாக இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தது தவறில்லை. ஆனால் ஒற்றுமை குறித்த கவலை ரொம்பவும் அதிகமானதில் சாலட் கிண்ணத்தை, கூழ் சட்டியாக பல சமயம் கருதிவிட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு பிரச்சினைதான் தேசிய மொழி பிரச்சினை.

காந்தி ஏன் குழம்பினார்?

காந்தி போல ஏழை எளிய மக்களுக்கு அதிகாரம் வேண்டும் என நினைத்த மேட்டுக்குடி வக்கீலுக்கு, ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருந்தால் அது சாத்தியமில்லை என்று தோன்றியிருக்கலாம். அதனால் மக்கள் பேசும் மொழியே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று நினைத்ததில் தவறில்லை. அதற்காக அவர் எதனால் தமிழ்நாட்டு, ஆந்திர குடியானவர்கள் இந்தி மொழியை படித்துவிடுவார்கள் என்று நினைத்தார் என்பதுதான் வியப்பிற்குரிய செய்தி. அது எவ்வளவு கடினமானது, அவ்வாறு எதிர்பார்ப்பது எவ்வளவு அநீதியானது என்பதை குஜராத்தி மேட்டுக்குடியனரான அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. பொதுவாகவே தலித் மக்கள், பார்ப்பனரல்லாதோர் பிரச்சினையின் தீவிரம் அவருக்கு சரியாகப் புரியவில்லை. பொதுவாக நவீன சமூகத்தின் நுகர்வுக் கலாச்சாரம், சுயநல மனோபாவம், வன்முறை ஆகியவற்றை திறம்பட விமர்சித்த அவரால் இந்திய பாரம்பரிய சமூகங்களில் உறைந்துபோயிருந்த வன்முறையின் பரிமாணங்களை சரிவர உணர முடியவில்லையோ என்றுதான் தோன்றுகிறது. அதன் ஒரு பகுதிதான் அவர் இந்தி மொழியை இந்தியாவின் பொது மொழியாக மாற்றலாம் என நினைத்தது. அவருடைய மத நல்லிணக்க நோக்குக்காக அவரை கொலை செய்யக்கூடிய அளவு கருத்தியல் பகைமை வளர்த்தவர்கள், இன்றும் வளர்ப்பவர்கள், அவருடைய இந்தி மொழி ஆதரவை கொண்டாடுவது நகைப்புக்குரியது. நவீன இந்தி மொழி உருவாக்கமே இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்து தேசிய செயல்பாடு என்பதுதான். காந்தி மக்கள் பேசிய இந்துஸ்தானியைத்தான் விரும்பினார். இவர்கள் உருவாக்கிய சமஸ்கிருத இந்தியை அல்ல.

காந்தி 1918ஆம் ஆண்டு தாகூருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் மூன்று நான்கு கேள்விகளைக் கேட்டிருந்தார். அதில் முதலிரண்டு கேள்விகள்:

1) இந்திய மாநிலங்களிடையேயான தொடர்புக்கு பொது மொழியாக விளங்கும் சாத்தியம் இந்தி மொழிக்குதான் உள்ளது அல்லவா?

2) எதிர்வரும் காங்கிரஸ் கட்சி கூட்டத்தை இந்தியிலேயே நடத்தலாமா?

இதற்கு தாகூர் கூறிய பதில்கள் சுவாரஸ்யமானது. முதல் கேள்விக்கு அவர் இந்திக்குதான் தொடர்பு மொழியாகும் சாத்தியம் உள்ளது என்று கூறுகிறார். ஆனால் இரண்டாவது கேள்விக்கு அவசரப்பட வேண்டாம் என்கிறார். இரண்டு காரணங்களைக் கூறுகிறார்.

1) மெட்ராஸிலிருந்து வருபவர்களுக்கு இந்தி என்பது முற்றிலும் அன்னிய மொழி;

2) அரசியல் சிந்தனை என்பதே ஆங்கில மொழியின் மூலமாகத்தான் சாத்தியமாகிறது என்பதால் பெரும்பாலான தலைவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசுவதுதான் சாத்தியமாக இருக்கும். இரண்டாவது கேள்விக்கு சொன்ன இரண்டு காரணங்களும் முதல் கேள்விக்கும் பொருந்தும்தானே? காங்கிரஸ் மாநாட்டில் பயன்படுத்த முடியாத இந்தி மொழியை அதே காரணங்களுக்காக தேசிய தொடர்பு மொழியாகவும் பயன்படுத்த முடியாதல்லவா?

ஆங்கிலம் உலகளாவிய தொடர்பு மொழி, அறிவின் மொழி

நூறாண்டுகளுக்கு முன்னால் தாகூர் நவீன அரசியல் சிந்தனை ஆங்கிலத்தில்தான் கால்கொண்டுள்ளது என்று சொன்னாரென்றால், நூறாண்டுகளுக்குப் பின் அது பெரும்பாலான அறிவுத் துறைகளுக்குப் பொருந்தும். தாகூரும், காந்தியும் கணினி, இணையம், கூகுள் ஆகியவற்றையெல்லாம் கற்பனையிலும் யோசித்திருக்க மாட்டார்கள். இன்றைக்கு அத்துணை தகவல்களும், தரவுகளும் நம் விரல் நுனியில் ஆங்கிலத்தில் கொட்டிக் கிடக்கின்றன. உலகம் முழுவதும் வாய்ப்புகளைத் தேடி இந்தியர்கள் பயணிக்கிறார்கள்.

உதாரணமாக, ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்காமல் இருந்திருந்தால் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் அந்த நாட்டில் மருத்துவம் பயில்வது நம் கவனத்துக்கு வந்திருக்காது. அதில் பலர் சிறு நகரங்களிலிருந்து சென்றவர்கள். இந்திய மருத்துவக் கல்லூரிகளில் போட்டித் தேர்வின் மூலம் இடம் கிடைக்காததாலும், தனியார் கல்லூரிகளில் நன்கொடை கட்டி படிப்பதை விட உக்ரைன் சென்று படிப்பது மலிவாக இருப்பதாலும் இந்த மாணவர்கள் அங்கு சென்றுள்ளனர். இது சாத்தியமாகக் காரணம் ஆங்கிலம் என்று சொல்ல வேண்டியதில்லை.

அரசு அலுவல்களையே எடுத்துக்கொள்வோம். ஓர் அதிகாரி கால்நடை பராமரிப்பில் ஒரு சிக்கலை எதிர்கொள்கிறார். அவர் உலகிலுள்ள பிற நாடுகளில் அந்தப் பிரச்சினையை எப்படி அணுகினார்கள் எனத் தெரிந்துகொள்ள நினைக்கிறார். அவரால் உடனடியாக நூற்றுக்கணக்கான கட்டுரைகளை, நூல்களை இணையத்தில் தரவிறக்கம் செய்ய முடியும், வாசிக்க முடியும். அர்ஜண்டைனாவில் என்ன நடந்தது என்று ஒரு கட்டுரை கிடைக்கும்; ஜப்பானில் என்ன நடந்தது என்று ஒரு புத்தகமே கிடைக்கும். எல்லாம் ஆங்கிலத்தில். உலகின் தொடர்பு மொழியாக, அறிவு சேகர மொழியாக ஆங்கிலம் உள்ளது. நானே பெரியாரை குறித்து ஆங்கிலத்தில் நூல் எழுதினால் அதை வங்காளியும் படிப்பார், ஜப்பானியரும் படிப்பார்; மலையாளியும் படிப்பார், அமெரிக்கரும் படிப்பார்; பஞ்சாபியும் படிப்பார், ஜெர்மானியரும் படிப்பார். அதாவது இந்திய அரசியல் வரலாறு என்ற அறிவுத்துறையில் ஆர்வமுள்ளவர் எங்கிருந்தாலும் படிப்பார். நான் ஹோ சி மின் குறித்தும், அலெண்டே குறித்தும் படிப்பது போல.

இத்தகைய உலகளாவிய அறிவுச்சூழல் மட்டுமின்றி இந்திய ஒன்றிய அரசின் முக்கிய பணி அயலுறவு, வர்த்தகம் போன்றவை அல்லவா? அதற்கெல்லாம் ஆங்கிலம்தானே உதவும்? ரஃபேல் விமானம் வாங்குவதும், பேரம் பேசுவதும் ஆங்கிலத்தில்தானே செய்ய வேண்டும்? ஒன்றிய அரசின் அலுவல் மொழி இந்தி என்பதில் வெற்று பெருமிதம்தான் இருக்கிறதே தவிர... அதனால் வேறு எதுவும் பயன் இருக்கிறதா?

ஆங்கிலம் மேட்டுக்குடியினர் மொழி, எளிய மக்கள், ஏழைகள் பயில்வது கடினம் என்பதெல்லாம் பழைய மனப்பதிவுகள். கடந்த முப்பதாண்டுகளில் பெருமளவு பல தரப்பட்ட சமூகப் பின்னணி உள்ளவர்களும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவதையும், உலகின் பல நாடுகளுக்கு பணி செய்ய போவதையும், குர்கானிலிருந்தோ, நொய்டாவிலிருந்தோ, தரமணியிலிருந்தோ, பெங்களூருவிலிருந்தோ கணினியில் அமெரிக்கர்களுடன் ஆங்கிலத்தில் பேசுவதையும் காண்கிறோம்.

ஆங்கிலம் அந்நிய மொழி என்பது போன்ற அசட்டு கருத்துகளை விட்டுவிட்டு அது உலக அறிவு சேகரத்தின், உலகளாவிய தொடர்பின் மொழி என்பதை உணர்ந்து பள்ளிக்காலத்திலேயே ஆங்கில மொழி தேர்ச்சியில் உரிய கவனத்தை செலுத்தினால் அதுவே இந்திய ஒன்றியத்தின் வளமிக்க எதிர்காலத்தை உறுதிசெய்யும். கவனிக்கவும். ஆங்கில மொழி தேர்ச்சியைச் சொல்கிறேன். ஆங்கிலவழி கல்வியை அல்ல. தாய்மொழிவழிக் கல்வி, (தமிழகத்தில் தமிழ்வழிக் கல்வி), ஆங்கில மொழி தேர்ச்சி ஆகிய இரண்டும் பள்ளியில் இணைந்தால் எதிர்காலத்தில் ஒவ்வொரு மாணவரும் தங்கள் தேவைக்கேற்ப ஆங்கில அறிவை பயன்படுத்திக்கொள்வர்.

இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழியாகவும், மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய அரசாங்கத்திற்கிடையிலான தொடர்பு மொழியாகவும் ஆங்கிலம் நீடிப்பதே அத்தகைய பொதுவான அறிவு வளர்ச்சிக்கு, ஆற்றல் வளர்ச்சிக்கு உதவும். இந்திய ஒன்றியத்தில் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தி மொழியை அந்த இடத்தில் இருத்தும் அர்த்தமற்ற பிற்போக்கு கற்பனைக்கு நாம் விடை கொடுக்க வேண்டும்.

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected]

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

திங்கள் 11 ஏப் 2022