மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 ஏப் 2022

சிறப்புக் கட்டுரை: வரதட்சணை பெண்ணுக்கு வரமா? - சர்ச்சையைக் கிளப்பிய ஒரு பாடநூலை முன்வைத்து…

சிறப்புக் கட்டுரை: வரதட்சணை பெண்ணுக்கு வரமா? - சர்ச்சையைக் கிளப்பிய ஒரு பாடநூலை முன்வைத்து…

அ. குமரேசன்

“வரதட்சணை உண்மையில் பெண்ணுக்குப் பாதுகாப்பான ஏற்பாடுதான்” என்று வாதிடுவோர் உண்டு. கணவன் வீட்டில் அது பெண்ணுக்கு ஒரு கவுரவமான இடத்தை உறுதிப்படுத்துகிறது, பெற்றோரின் சொத்தில் தனக்குரிய பங்கைப் பெறுவதற்கு வழிசெய்கிறது என்றெல்லாம் வரதட்சணைப் பழக்கம் நியாயப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் சட்டப்படி வரதட்சணை தடை செய்யப்பட்டுள்ளது, அதைக் கேட்பதும், கொடுப்பதும் குற்றச் செயல்களாக அறிவிக்கப்பட்டுள்ளன என்ற போதிலும் நடைமுறையில் அது தொடரவே செய்கிறது. திருமணப் பேச்சுவார்த்தைகளில் நேரடியாகவோ, “உங்க பொண்ணுக்கு நீங்க செய்றீங்க” என்பதான நாசூக்கான சொல்லாடல்களுடனோ வரதட்சணை பேரம் பேசப்படுகிறது. வரதட்சணைக் கொடுமைகள் பற்றிய செய்திகளும் வருகின்றன.

இந்நிலையில் வரதட்சணையை நியாயப்படுத்திப் போற்றுகிற புத்தகம் ஒன்று வந்திருக்கிறது. கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில், பொதுவெளியில் இது பற்றி விவாதிக்க விரும்புகிற புத்தகம் அல்ல அது. அதிகாரப்பூர்வ அமைப்பின் கீழ் மாணவர்களிடம் இக்கருத்தை எடுத்துச்செல்கிற பாடப்புத்தகம். பெண்ணுரிமை இயக்கங்களின் கண்டனம், தேசிய மகளிர் ஆணையத்தின் தலையீடு, சம்பந்தப்பட்ட அமைப்பால் காவல்துறையில் புகார் என அந்தப் புத்தகம் கவனத்தைப் பெற்றுள்ளது.

செவிலியர் படிப்பு, பயிற்சி, நியமனம் ஆகியவற்றை முறைப்படுத்துவதற்கான அமைப்பு ‘இந்திய செவிலிய மன்றம்‘ (இந்திய நர்சிங் கவுன்சில் – ஐஎன்சி). ஒன்றிய அரசின் சுகாதாரத் துறையின் கீழ் இந்த கவுன்சில் இயங்குகிறது. “ஐஎன்சி பாடத்திட்டத்தின்படி” என்ற குறிப்புடன் ‘டெக்ஸ்ட் புக் ஆஃப் சோஷியாலஜி ஃபார் நர்சஸ்’ (செவிலியர்களுக்கான சமூகவியல் பாடநூல்) என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. சில செவிலியர் கல்லூரிகளில் பயன்படுத்தப்படுகிற இந்த நூலை டி.கே. இந்திராணி என்பவர் எழுதித் தயாரித்துள்ளார். இந்த நூலில் ஒரு கட்டுரை “குடும்பமும் திருமணங்களும்” என்ற தலைப்பில், “வரதட்சணையின் சிறப்புகள்” என்ற துணைத்தலைப்பில் இடம்பெற்றுள்ளது.

இக்கட்டுரையை விமர்சிக்கும் பதிவுகள் சமூக ஊடகங்களில் பதிவாகின. மகளிர் அமைப்புகள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்து அந்தப் பாடத்தை விலக்கிக்கொள்ள வலியுறுத்தின. ஒன்றிய அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதில் தலையிட வேண்டுமென தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா கடிதம் அனுப்பினார். மாணவர்களிடையே வரதட்சணை பற்றிய தவறான எண்ணத்தை ஏற்படுத்தக்கூடிய நூல் இது என்று செவிலியர் மன்றமே புகார் செய்துள்ளது. கவுன்சிலின், ஒப்புதல் பெறாமல் பெயரைப் பயன்படுத்தியுள்ள நூலாசிரியர், பதிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி காவல்துறையில் ஐஎன்சி செயலாளர் சர்வ்ஜித் காவுர் புகார் பதிவு செய்துள்ளார்.

அங்கீகாரம் பெறாத ஒரு தொகுப்பு கல்லூரிகளுக்குள் நுழைந்தது எப்படி? முறைகேடு நடந்திருக்கிறது என்றால் அதன் நுழைவாயில் எது? கல்வியமைச்சகம் என்ன செய்யப்போகிறது, காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று கவனித்து வருவோம். இதனிடையே, மேற்படி நூலில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம்.

நியாயப்படுத்தும் வாதங்கள்

ஒரு புதிய குடும்பத்தை அமைப்பதற்கு வரதட்சணை உதவுகிறது. ஒரு வீட்டிற்கான பொருள்கள், துணிமணிகள் வாங்குவதற்குப் பயன்படுகிறது என்று அந்தக் கட்டுரை தொடங்குகிறது. குடும்பச் சொத்தில் பெண்கள் அவர்களுக்குரிய பங்கினைப் பெற வரதட்சணை மறைமுகமாக வழி செய்வதாகக் கூறுகிறது. படித்த பெண்ணாக இருந்தால் வரதட்சணை குறைவாகவே கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால், அது பெண் கல்வியை வரதட்சணை என்கிறது. இந்த வாதங்களை விஞ்சுவது போல, அசிங்கமான தோற்றம் கொண்ட பெண்கள் கூட கவர்ச்சிகரமான வரதட்சணை கொடுத்து அழகான ஆண்களைத் திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்குவதாக முன்வைக்கிறது.

எழுந்துள்ள கண்டனங்கள் எவ்வளவு நியாயமானவை என்று காட்டுகிற இந்த வாதங்களை முன்வைப்பதற்கு ஒருவருக்கு உள்ள உரிமையை மறுப்பதற்கில்லை. பொதுவெளியில் முன்வைக்கப்பட்டிருந்தால் அது ஆரோக்கியமான விவாதத்திற்கு இட்டுச்சென்றிருக்கும். ஆனால், ஒரு பகுதி மாணவர்களிடையே தீர்மானகரமான கருத்துப் பரப்புரையாகக் கொண்டுசெல்லப்பட்டிருப்பதுதான் சர்ச்சைக்குரியதாகியிருக்கிறது. பெண்களுக்கு எதிரான இத்தகைய கருத்துகளை ஒரு பெண்ணே வெளிப்படுத்தியிருப்பது புருவங்களை உயர்த்த வைத்துள்ளது. அவருடைய பின்னணி என்ன, நோக்கம் என்ன என்ற கேள்விகள் இயல்பாகத் தொடர்கின்றன.

யோசித்துப் பார்த்தால் சமூகத்தில் நிலவும் சிந்தனைகள்தான் இவை. பெண்ணின் சுயமரியாதை, பாலின சமத்துவம் உள்ளிட்ட முற்போக்கான கொள்கைகளை உணர்வுப்பூர்வமாக ஏற்றிருப்போர் தவிர்த்து, சமூகத்தில் மிகப் பலருக்கும் இந்தச் சிந்தனைகள் இருக்கின்றன. சட்டம் காரணமாக அவர்கள் வெளிப்படையாகப் பேசுவதில்லை. ஆனால், பெரும்பாலான ஏற்பாட்டுத் திருமணங்களில் (அதாவது பெரியோர்களால் நிச்சயிக்கப்படுகிற திருமணங்களில்) வரதட்சணைதான் அந்த ஏற்பாட்டின் மையம். பெண் வீட்டாரோ, ஆண் வீட்டாரோ, உற்றார் உறவினரோ இது பற்றிப் பேசுவதில்லை. பேசப்பட்ட தொகையில் பாக்கியைக் கேட்டுத் துன்புறுத்துவது, பிறந்த வீட்டுக்குத் திருப்பி அனுப்புவது, சில நேரங்களில் வரதட்சணைக் கொடுமைகள் கொலை வரையில் செல்வது என்றெல்லாம் வரும்போதுதான் புகார், வழக்கு என்று பிரச்சினை வெளியே வருகிறது.

சட்டத்தின் பின்னணி

நாடு முழுவதுமே இந்தக் கொடுமைகள் தலைவிரித்தாடிய சூழலில்தான், 1961இல் வரதட்சணை தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1984, 1986ஆம் ஆண்டுகளில் சட்டத்தில் சில திருத்தங்கள் சேர்க்கப்பட்டன. 1983இல், இந்திய தண்டனைச் சட்டத்தில் 498-ஏ என்ற பிரிவு இணைக்கப்பட்டது. கணவனோ, அவனது பெற்றோரோ, உடன் பிறந்தோரோ, இதர உறவினர்களோ பெண்ணை உடலளவில் அல்லது மனதளவில் துன்புறுத்தினால் மூன்று ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை என அறிவிக்கப்பட்டது. நேரடியாகவோ மறைமுகமாகவோ வரதட்சணை கோரினால் குறைந்தது ஆறு மாதங்கள் சிறை, ரூ.10,000 அபராதம், வரதட்சணை சாவுக்கு ஏழு ஆண்டுகள் சிறை என்று கொண்டுவரப்பட்டது. வரதட்சணை தருவோருக்கான சிறைத்தண்டனை ஐந்து ஆண்டுகள் என இருந்தது ஓராண்டாகக் குறைக்கப்பட்டது. சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் விதிகளும் சேர்க்கப்பட்டன.

இத்தகைய சட்டமும் விதிகளும் இருந்தபோதிலும் வரதட்சணைக் கலாச்சாரமும் இருக்கவே செய்கிறது. 2020ஆம் ஆண்டில் வரதட்சணைக் கொடுமைகளால் நாளொன்றுக்கு 20 பெண்கள் உயிரிழந்தார்கள். மொத்தம் 6,966 சாவுகள் பதிவாகின, 7,045 பேர் மரணமடைந்தார்கள். தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை இதனைத் தெரிவிக்கிறது. பதிவு செய்யப்படாத சாவுகள் எத்தனை இருக்கும்? மரணம் வரை செல்லாத இதர வன்முறைகள் எத்தனை இருக்கும்?

இந்தச் சட்டம் ஆண்களைப் பெண்கள் பழிவாங்குவதற்கும், பொய்யாகப் புகார் செய்வதற்குமே உதவும் என்று ஆண் உரிமைவாதிகள் சொல்வதுண்டு. அதற்கு வாய்ப்பில்லை என்று சொல்வதற்கில்லை. ஆனால், அது மிகக் குறைவாகவே நிகழ்கிறது. 2003இல், இது தொடர்பாக அமைக்கப்பட்ட மாலிமத் குழு 498-ஏ பிரிவில் மாற்றம் செய்யப் பரிந்துரைத்தது. மாதர் அமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. சமுதாய ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் 6.5 சதவிகித வழக்குகள் போலியானவை என்று தெரிவித்தது. தற்போது, பதிவாகும் புகார்களில் 10 சதவிகிதம் போலியானவை என்று கூறப்படுவதன் அடிப்படையில் 498-ஏ பிரிவில் மாற்றம் கொண்டுவர ஒன்றிய அரசு முயன்று வருகிறது. இதற்காக முன்வரைவு ஒன்றை உள்துறை அமைச்சகம், ஒன்றிய அமைச்சரவைக்கு அனுப்பியுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பெண்ணுரிமை இயக்கங்கள், 10 சதவிகிதம் புகார்கள் போலியானவை என்பதற்காக இந்தப் பிரிவை நீர்த்துப்போகச் செய்வது, உண்மையிலேயே பாதிக்கப்படுகிற லட்சக்கணக்கான பெண்களைக் கைவிடுவதாகும் என்று கூறியுள்ளன. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

வரதட்சணை வரலாறு

எப்படி வந்தது வரதட்சணைக் கலாச்சாரம்? திருமணமாகிச் செல்லும் பெண்ணுக்குப் பெற்றோர் சீர்வரிசை செய்வது பற்றிய இலக்கியப் பதிவுகள் உள்ளன. ஆனால் அது பேரம் பேசப்பட்டதன் அடிப்படையில், வற்புறுத்தப்பட்டதன் அடிப்படையில் நடந்ததாகப் பதிவுகள் இல்லை. ஆண்தான் பெண்ணுக்குப் பரிசம் போட்டு அழைத்து வர வேண்டும் என்ற வழக்கம் இருந்து வந்திருக்கிறது. இன்றைக்கும் பல சமூகங்களில் – குறிப்பாகப் பழங்குடி சமூகங்களில் பரிசம் போடும் வழக்கம் இருக்கிறது.

வரதட்சணை குறித்து முதலில் பதிவு செய்தவரான பாரசீக ஆய்வாளர் அபுரியான் அல் புரூனி, 11ஆம் நூற்றாண்டில் தந்தையின் சொத்தில் ஒரு பகுதியைப் பெண் திருமணத்தின்போது பெற்றுக்கொண்டாள். ஆனால், சகோதரனுக்கான சொத்தில் நான்கில் ஒரு பகுதிதான் கிடைத்தது என்று எழுதியிருக்கிறார். சட்ட ஆவணங்கள் காப்பக லா-டாக்ஸ் நிறுவனம் இதைத் தெரிவிக்கிறது. மற்றோர் ஆய்வாளரான ஸ்டான்லி ஜே. தம்பையா, பண்டைய அரசமைப்பு சட்டமாகிய மநுஸ்மிருதியில், வரதட்சணை, பெண்ணின் சொத்து இரண்டும் அனுமதிக்கப்பட்டிருந்தன என்று பதிவு செய்திருப்பதைத் தெரிவிக்கிறது லா-டாக்ஸ். பிராமணக் குடும்பங்களில் வரதட்சணை ஒரு கவுரவமாக இருந்தது, பிற சமூகங்களில் பெண்ணின் சொத்து என்ற வடிவில் இருந்தது, அவர்களிடையே வரதட்சணை தடுக்கப்பட்டிருந்தது என அவர் எழுதியிருக்கிறார். பொதுவாக வரலாற்று இடைநிலைக் காலத்தில் வரதட்சணை வந்ததாகக் கருதப்படுகிறது. காலனியாக்கக் காலத்தில் பிரிட்டிஷ் அரசு வரதட்சணை தருவது கட்டாயம் என்று ஆணை பிறப்பித்தது. இங்கிலாந்தில் 12ஆவது நூற்றாண்டில் நோர்மன் இனத்தவர் வழியாக வரதட்சணை புகுந்ததாம். இப்படியாக, செல்வ நிலைக்கான கௌரவம், சட்டப்பூர்வ கட்டாயம் என மேல்தட்டுக் குடும்பங்களில் தொடங்கியது, காலப்போக்கில் எல்லா மட்டங்களிலும் தொற்றிக்கொண்டது எனத் தெரிகிறது. அந்தத் தொற்றின் விளைவாகக் கொடுமைகள் பீடித்துக்கொண்டன.

சரி, திருமண நாள் வரையில் பெற்றோரின் அரவணைப்பில் இருந்த பெண், கணவனின் வீட்டில் புகுகிறபோது அவளுக்கு ஒரு பொருளாதாரத் தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று வரதட்சணை ஆதரவாளர்கள் கேட்கிறார்கள். தவறில்லைதான். பல குடும்பங்களில் இந்தப் பொருளாதாரத் தளம் பெண்ணுக்கு ஒரு பாதுகாப்பை மட்டுமல்ல, ஒரு வலிமையையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சிக்கல் எங்கே என்றால், பேரம் பேசப்படுகிறது, கட்டாயப்படுத்தப்படுகிறது, கொடுமைப்படுத்தப்படுகிறது என்கிறபோதுதான் வரதட்சணையிலிருந்து பெண்ணுக்குப் பாதுகாப்பு தேவைப்படுகிறது. வரதட்சணை இல்லாமல் வந்த பெண் அல்லது வரதட்சணை குறைவாகக் கொண்டுவந்த பெண் மதிப்புக் குறைவாகவே நடத்தப்படுகிறாள். முகத்துக்கு நேராகவும், முதுகுக்குப் பின்னாலும் இவ்வாறு குத்திக்காட்டப்பட்டு புண்படுத்தப்படுகிறாள்.

மரபுக் கட்டாயம்

அடிப்படையாகப் பார்த்தால், ஆணின் வீடுதான் பெண்ணுக்குப் புகுந்த வீடு என்ற இறுகிப்போன சமூக ஏற்பாட்டோடு இணைந்ததாக இருக்கிறது வரதட்சணை. ஆணுக்குப் புகுந்த வீடு கிடையாது. என்றென்றும் அவனுக்குப் பிறந்த வீடுதான். அரிதாக, பெண்ணின் குடும்பத்தோடு இணையும் ஆணுக்கு, வீட்டோடு மாப்பிள்ளை பட்டத்தை சமூகம் வழங்கிவிடும். இவ்வாறாக, ஆணைச் சார்ந்துதான் பெண் வாழ்ந்தாக வேண்டும் என்ற மரபுக் கட்டாயத்திலிருந்துதான், அதற்கான விலையாக வரதட்சணை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த மரபுக் கட்டாயத்திலிருந்துதான் வரதட்சணை நியாயப்படுத்தப்படுகிறது. அந்த மரபுக் கட்டாயத்திலிருந்துதான் கொடுமைகள் மறைக்கப்படுகின்றன.

வரதட்சணைப் பழக்கம் உண்மையிலேயே ஒழிவது இந்தச் சமூக மரபு மாறுவதோடு தொடர்புடையது. மணமக்கள் தேவையையொட்டி யார் வீட்டிலும் புகுவது இயல்பான நடைமுறையாக வேண்டும். பணமோ, பொருளோ கொண்டுவந்தால்தான் பெண்ணுக்குக் கவுரவம் என்ற நிலைமை மாற வேண்டும். வேலை, தொழில் எனப் பெண்ணின் சுயேச்சையான வருவாயும் நிதி ஆதாரமும் உறுதிப்பட வேண்டும். திருமணத்திற்குப் பின் பெண் தன் பெயரோடு கணவனின் பெயரை இணைத்துக்கொள்வது கூட ஆணைச்சார்ந்தே பெண் வாழ வேண்டும் என்ற கட்டாயத்தின் அடையாளம்தான். இதற்கு மாறாக, ஆணும் தன் பெயரைப் பெண்ணின் பெயருடன் இணைத்து அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். அதை விட, இப்படியெல்லாம் பெண் தன் பெயரைக் கணவனின் பெயருடனோ, ஆண் தன் பெயரை மனைவியின் பெயருடனோ இணைப்பதற்கு மாறாக, அவரவர் பெயருடனேயே மட்டும் அடையாளம் பெற வேண்டும். பெரியோர்கள் நிச்சயித்தபடி அல்லாத, வாழ்க்கைத்துணையை அவர்களே தேர்வுச் சுதந்திரம் வலுவாக ஊன்றியாக வேண்டும். காதல் உரிமை உறுதிப்பட்டாக வேண்டும்.

ஆணாதிக்கத்திற்கு அடிகொடுக்கிற சமூக மாற்றங்களோடு இணைந்ததே வரதட்சணை ஒழிப்பு. அது வரையில், காட்டிக்கொடுக்காத கள்ள உடன்பாடுகளோடு வரதட்சணை தொடரும். வரதட்சணைக் கொடுமைக் கதைகளும் தொடரும். அதற்காக, சமூக மாற்றம் என்ற நிகழ்ச்சி நிரல் நிறைவேறுகிற வரையில் தற்போதைய சட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவையில்லை என்று விட்டுவிட முடியாது. சமுதாயத்தில் முழுமையான விழிப்புணர்வும், உறுத்தல் உணர்வும் ஏற்படுகிற வரையில் சட்டங்களின் துணை தவிர்க்க முடியாதது. சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கு மாறாக வலுப்படுத்துகிற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 2021இல் கேரளத்தில் மாவட்டந்தோறும் வரதட்சணை கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம், திருமண அன்பளிப்புகளில் பெண்ணுக்கு உரியவற்றை மூன்று மாதங்களில் ஒப்படைப்பது, அரசு ஊழியர்கள் தாங்கள் வரதட்சணை பெறவில்லை எனச் சான்றிதழ் அளிப்பது உள்ளிட்ட விதிகள் வரதட்சணை தடைச் சட்டத்தில் இணைக்கப்பட்டன. வரதட்சணைக்கு எதிரான விழிப்புணர்வுப் பரப்புரைகளுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு வேறு எந்த மாநிலங்களில் எத்தகைய சட்ட உறுதிகள் செய்யப்பட்டுள்ளன என்ற விவரங்கள் திரட்டப்பட வேண்டும். நாடு முழுதும், வரதட்சணைக்கு எதிரான இயக்கங்கள் வேரூன்றிப் பரவ வேண்டும் - அது மாதர் சங்கங்களின் பொறுப்பு மட்டுமல்ல என்ற உணர்வோடு அனைத்து அமைப்புகளிலும் பேசப்பட வேண்டும். இந்திராணி நூல் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது ஒரு புறமிருக்க, புதுப்பிக்கப்பட்ட விவாதங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் இந்தச் செய்தி ஒரு தூண்டுதலாக இருக்குமென்றால் நல்லதுதான்.

கட்டுரையாளர் அ.குமரேசன்

இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தீக்கதிர் இதழ் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றவர்.

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

திங்கள் 11 ஏப் 2022