wவெந்த புண்ணில் வேலை பாய்ச்சாதீர்கள்: ஓபிஎஸ்

politics

கல்லூரி மாணவர்களின் தேர்வு கட்டண உயர்வுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுக் கூட்டத்தில் நடப்பாண்டிற்கான மாணவர்களின் தேர்வு கட்டணத்தை உயர்த்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்வுக் கட்டணம் இரு மடங்கு உயர்த்தி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்து, தஞ்சை அரசு மன்னர் சரபோஜி கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துத் தேர்வு கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவர் இன்று (ஏப்ரல் 10) வெளியிட்ட அறிக்கையில், “முப்பது வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்” என்று வாக்குறுதி அளித்து, அதன்மூலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள திமுக, வாக்குறுதியை நிறைவேற்றாததோடு, கல்லூரி மாணவ, மாணவியரின் தேர்வுக் கட்டணங்களை எல்லாம் இரண்டு மடங்கு, மும்மடங்கு உயர்த்த வழிவகை செய்துள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 147 இணைப்புக் கல்லூரிகளில் பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவியரின் தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட பெரும்பாலான கட்டணங்கள் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகவும், சில இனங்களுக்குப் பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

இதனைக் கண்டித்து தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இதேபோன்று திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மன்னை ராஜகோபால சுவாமி அரசினர் கலைக் கல்லூரியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் கல்லூரி வளாகத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.

பெரும்பாலான மாணவ, மாணவியர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும், இந்தத் தேர்வுக் கட்டண உயர்வு என்பது தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் நீட்டிக்கப்படும் என்ற அச்சமும் தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் தற்போது நிலவுகிறது.

இந்தக் கட்டண உயர்வு குறித்து மாணவ, மாணவியர் போராட்டங்களை நடத்தியும், அரசு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. பழைய கட்டணத்தையே தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் வசூலிக்கவும், இதர பல்கலைக்கழகங்களும் கட்டண உயர்வை அறிவிக்காமல் இருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவியர் மத்தியில் நிலவுகிறது.

எனவே, தமிழக முதல்வர் மாணவ, மாணவியரின் ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று நோயினால் ஏற்பட்ட பாதிப்பினைக் கருத்தில் கொண்டும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணம் உட்பட அனைத்து கட்டண உயர்வையும் உடனடியாக ரத்து செய்யவும், இனி வருங்காலங்களில் பிற பல்கலைக்கழகங்களில் கட்டண உயர்வு அறிவிப்பு வெளியிடாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *