மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 10 ஏப் 2022

இலவச அறிவிப்புகளில் தலையிட முடியாது: தேர்தல் ஆணையம்!

இலவச அறிவிப்புகளில் தலையிட முடியாது: தேர்தல் ஆணையம்!

தேர்தலுக்கு முன்னும் பின்னும் வாக்காளர்களுக்கு இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை நீக்க அதிகாரம் இல்லை என்று இந்தியத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் நேற்று பதில் அளித்துள்ளது. அதேசமயத்தில் இலவசங்களை அறிவிப்பது கட்சிகளின் கொள்கை முடிவு அதில் தேர்தல் ஆணையத்தால் தலையிட முடியாது என்றும் கூறியுள்ளது.

பாஜகவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் தேர்தல் சமயத்தில் இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இலவசங்கள் நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலைச் சீர்குலைக்கும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்த சூழலில் சனிக்கிழமை தேர்தல் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தேர்தலுக்கு முன்னும் பின்னும் இலவசங்களை அறிவிப்பது என்பது அந்தந்த அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவு ஆகும். இந்த அறிவிப்புகள் நடைமுறையில் சாத்தியமா, மாநில பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை அந்தந்த மாநில வாக்காளர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர் கோரியிருக்கிறார். அதன்படி மூன்று காரணங்களின் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கையைத் தேர்தல் ஆணையத்தால் எடுக்க முடியும்.

மோசடி வழியில் அரசியல் கட்சியைப் பதிவு செய்திருந்தால் அல்லது பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அதன் அமைப்பின் பெயர், விதிகள் மற்றும் நடைமுறைகளில் திருத்தங்களை மேற்கொண்டிருந்தால் அல்லது அரசியலமைப்பின் மீதான நம்பிக்கை மற்றும் பற்றை இழந்துவிட்டதாக தேர்தல் ஆணையத்திடம் ஒரு கட்சி அறிவித்தால் மட்டுமே அதன் பதிவை ரத்து செய்யத் தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆனால் மனுதாரரின் கோரிக்கை மேற்கண்ட காரணிகளுக்குள் வரவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக வெற்றி பெற்ற கட்சி ஆட்சி அமைக்கும் போது எடுக்கக்கூடிய கொள்கை சார்ந்த முடிவுகளில் தேர்தல் ஆணையம் தலையிட்டு அதனைக் கட்டுப்படுத்தவோ, நடவடிக்கை எடுக்கவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது சட்டத்தை மீறிய செயலாகும். தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு கட்சிகளால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கைகளில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்று சுப்ரமணியம் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பையும் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதுபோன்று, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுடனும் ஆலோசித்து, தேர்தல் அறிக்கை தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறையைக் கொண்டு வருவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது

-பிரியா

பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் 41% மாநிலங்களின் பங்கு: ப.சிதம்பரம் ...

3 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் 41% மாநிலங்களின் பங்கு: ப.சிதம்பரம்

முள்ளிவாய்க்கால்: பெசன்ட் நகர் கடற்கரை நினைவேந்தலுக்கு திமுக ...

12 நிமிட வாசிப்பு

முள்ளிவாய்க்கால்: பெசன்ட் நகர் கடற்கரை நினைவேந்தலுக்கு திமுக அரசு தடை!

72 மணி நேரம்தான் கெடு: அண்ணாமலை எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

72 மணி நேரம்தான் கெடு:  அண்ணாமலை எச்சரிக்கை!

ஞாயிறு 10 ஏப் 2022