மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 9 ஏப் 2022

டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அடுத்த கடிவாளம்!

டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அடுத்த கடிவாளம்!

வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராம் ஒரு முன்குறிப்பு அனுப்பியது.

" ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் பலரும் நேற்றிலிருந்து ஒரு விஷயத்தை முன்வைத்து தங்களுக்குள் விவாதித்து வருகிறார்கள். அவர்களின் விவாதத்தில் நிதித்துறை அமைச்சர் பி. டி ஆரும் முதல்வர் ஸ்டாலினும் தான் இடம் பெற்றிருக்கிறார்கள்" என்று அந்தக் குறிப்பு தெரிவித்தது.

அதை வழிமொழிகிறேன் என்று சொல்லிவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

"2021 ஆம் ஆண்டு திமுக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்ததும் நிதி அமைச்சராக பதவியேற்ற பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் முக்கியமான சீர்திருத்தங்களை நிதித்துறை மூலம் முன்னெடுக்க வேண்டும் என்று ஸ்டாலினிடம் வற்புறுத்தினார். பி. டி. ஆரின் கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலினும் ஏற்றுக்கொண்டார்.

அதன் அடிப்படையில் இந்த ஆட்சியின் முதல் ஆளுநர் உரையிலும் அதையடுத்து முதல் பட்ஜெட்டிலும் நிதித்துறை சீர்திருத்தங்களை பற்றி முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டது அரசு.

2021 22 பட்ஜெட்டில், 'தணிக்கைத் துறையில் அடிப்படை சீர்திருத்தத்தை இந்த அரசு முன்னெடுக்கிறது. இதன்படி தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறைகளிலும் உள்ள தணிக்கை அமைப்புகள் நிதி அமைச்சகத்தின் கீழ் ஒரே குடைக்குள் கொண்டு வரப்படும். ஒருங்கிணைக்கப்பட்ட தணிக்கை அமைப்பு அனைத்து துறைகளிலும் நடக்கும் வரவு செலவுகளை தணிக்கை செய்யும்' என்று அறிவித்தார் பிடிஆர்.

இதன்படி 2022 ஏப்ரல் 7ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் மாநில தணிக்கை டைரக்டர் ஜெனரல் என்ற பதவி உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அரசாணையில், 'கவனமான ஆய்வுக்கு பிறகு தணிக்கை டைரக்டர் ஜெனரல் என்ற பதவியை உருவாக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப் படுகிறது. உள்ளாட்சி நிதி, கூட்டுறவு தணிக்கை, ஆவின் தணிக்கை, இந்துசமய அறநிலையத்துறை தணிக்கை மற்றும் அரசின் மற்ற துறைகளின் தணிக்கை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள டைரக்டர் ஜெனரல் ஆஃப்ஆடிட் என்ற பதவியின் கீழ் கொண்டு வரப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இப்போது நடைமுறையில் இருக்கும் சிஸ்டம் என்னவென்றால் பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கப்பட்டு அது அந்தந்தத் துறைகளில் செலவிடப்படுகிறது. நிதி அமைச்சகத்தால் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பதற்கான தணிக்கையை அந்தந்த துறைகளே மேற்கொண்டு வருகின்றன. தத்தமது துறைக்குள் தணிக்கையை முடித்து அந்த அறிக்கையை நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கின்றன.

இந்த முறையில் அதிக அளவு முறைகேடுகள் நடைபெற்றிட வாய்ப்பிருப்பதாகவும் அரசு நிதி ஒழுங்காக செலவிடப்படாமல் அந்தந்த தணிக்கைத் துறையின் மூலம் சீர்செய்யப்பட்டு சமாளிக்கப் படுவதாகவும் நிதியமைச்சர் பிடிஆர் கருதினார். முதல்வர் ஸ்டாலினிடம் எடுத்துச் சொல்லி ஒருங்கிணைக்கப்பட்ட தணிக்கை துறையை நிதி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்தால், ஒவ்வொரு அமைச்சகத்திலும் நடக்கும் முறைகேடுகள் தடுக்கப்படும் என்றும் முதல்வரிடம் தெரிவித்து இந்த புதிய சீர்திருத்தத்திற்கு அனுமதி பெற்றார் நிதி அமைச்சர்.

அதன்படியே இப்போது அரசாணை வெளியிடப்பட்டு விரைவில் டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஆடிட் என்ற புதிய பதவிக்கு இந்தியன் ஆக்கவுண்ட்ஸ் அண்ட் ஆடிட்ஸ் சர்வீஸ் எனப்படும் ஐஏஏஎஸ் அதிகாரியை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த அரசாணையின் பத்தி 3இல் பொதுத்துறை அல்லது தனியார் துறையில் நல்ல அனுபவம் பெற்றவரையும் தணிக்கை தலைமை இயக்குனர் பதவிக்கு நியமிக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இதை எதிர்த்து இன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தணிக்கைத் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து நிதியமைச்சக வட்டாரத்தில் விசாரித்தபோது, 'இந்தியன் அக்கவுண்ட் அண்ட் ஆடிட்டிங் சர்வீஸ் பணியில் ஓய்வு பெற்றவர்களை நியமிப்பது தான் நிதியமைச்சரின் நோக்கம். அதேநேரம் தனியார் துறையில் இருக்கும் சில அதிகாரிகள் மிக நேர்மையான முறையில் செயல்படும் வாய்ப்பு இருப்பதால் இந்தத் துறைக்கு நேர்மை மிக முக்கியமான தேவையாக இருப்பதால் அப்படி ஒரு ஆலோசனையையும் நடந்து கொண்டிருக்கிறது' என்கிறார்கள். அதேநேரம், 'ஒவ்வொரு துறையின் சிண்டும் இனி நிதித்துறை மூலம் முதல்வர் ஸ்டாலின் கையில் நேரடியாக இருப்பதால் இனி ஆடிட்டிங் மூலம் எந்த அக்கப்போரும் நடத்த முடியாது. எனவே பன்னீர்செல்வத்தின் இந்த அறிக்கையைப் பார்த்து உள்ளபடியே சில அமைச்சர்கள் மகிழ்ந்து வரவேற்றிருக்கிறார்கள்.

காரணம் இந்த முறை அமலுக்கு வந்தால் பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் தங்கள் கைகள் கட்டப் படும் என்று அறிந்திருக்கிறார்கள். பிடிஆர் மூலம் முதல்வர்தான் இந்த ஆடிட் கடிவாளத்தை அமைச்சர்களின் கழுத்தில் மாட்டி இருக்கிறார் என்பதுதான் கோட்டை வட்டாரத்து குரலாக இருக்கிறது" என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

சனி 9 ஏப் 2022