மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 ஏப் 2022

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு... அரசின் நிலை என்ன?

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு...  அரசின் நிலை என்ன?

‘மூன்றாம் பாலினத்தவர்கள் என்பதாலேயே இந்த நாட்டில் நாங்கள் மூன்றாம் தரமாக நடத்தப்படுகிறோம்; பாலியல் தொழில் செய்வதும், யாசகம் கேட்டு அலைவதும்தான் எங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தொழிலா? ஆண்கள், பெண்களைப்போல எங்களுக்கும் எல்லாத் துறைகளிலும் பணி செய்ய விருப்பம் இருக்காதா? அரசாங்கமே எங்களை அங்கீகரிக்காவிட்டால், இந்த பொதுச்சமூகம் எங்களை எப்படி ஏற்றுக்கொள்ளும்? உச்ச நீதிமன்றம் , உயர்நீதி மன்றம் பரிந்துரைப்படி, எங்களுக்கும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்!’ என வலுவாக கோரிக்கை வைக்கிறார்கள் திருநங்கை, திருநம்பிகள் உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தவர்கள்.

கடந்த மார்ச் 2ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் திருநங்கைகள் சார்பில் தாக்கல் செய்த வழக்கொன்று விசாரணைக்கு வந்தது. அதில், கடந்த 2018, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் இரண்டாம்நிலை காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்புத் துறை வீரர்கள் உள்ளடங்கிய சீருடைப் பணியாளர்கள் தேர்வில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை என்றும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வயது வரம்பு சலுகையுடன், எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வுகளிலும், கட் ஆப் மதிப்பெண்களிலும் சலுகைகள் வழங்கக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், “அரசுத் தேர்வுகளில் மூன்றாம் பாலினத்தவர்களாக விண்ணப்பித்தபோதிலும், அவர்களுக்கு ஆண்கள் அல்லது பெண்களுக்கான தேர்வு நடைமுறைகள்தான் பின்பற்றப்படுகிறது. குறிப்பாக, பெண்கள் என அடையாளப்படுத்தும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு, பெண்களுக்கான 30% இட ஒதுக்கீடு கிடைக்கிறது, ஆனால் ஆண்களாக அடையாளப்படுத்துபவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படுவதில்லை!” என வேதனை தெரிவித்த நீதிபதி, மனுதாரர்கள் அனைவரும் ஆரம்பகட்ட தேர்வுகளில் தகுதி பெற்றதாக கருதி, உடற்தகுதி உள்ளிட்ட பிற தேர்வுகளில் பெண்களுக்கான சலுகைகளை வழங்கி, எட்டு வாரங்களில் தேர்வு நடைமுறைகளை முடிக்க வேண்டும் என சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டார்.

மிக முக்கியமாக, “மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோதும், ஏன் வழங்கப்படவில்லை” எனக் கேள்வி எழுப்பியதோடு, எதிர்காலத்தில் அரசு பணி நியமனங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் எனவும் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து, பல ஆண்டுகளாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் திருநங்கை, திருநம்பி உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக்கோரி போராடிவரும் திருநங்கைகள் உரிமை செயற்பாட்டாளர் கிரேஸ் பானு, “கடந்த 2013ஆம் ஆண்டிலேயே டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை எழுத திருநங்கைகளையும் அனுமதிக்க வேண்டும், எங்களுக்கு தனியே இட ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும் என முதன்முறையாக வழக்கு தொடர்ந்தோம். அதன்பின்னர், 2016ஆம் ஆண்டு அந்த வழக்கில், தமிழக அரசு ஆறு மாதங்களில் பதிலளிக்க வேண்டும் என தீர்ப்பு வந்தது. அதன்படி, அப்போதைய அதிமுக அரசாங்கம், எங்களை எம்.பி.சி பிரிவில் வகைப்படுத்தி, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வந்தது. ஒரு பாலினத்துக்கும், சாதிக்குமான அடிப்படை வேறுபாடே தெரியாமல், மூன்றாம் பாலினத்தவர்களை ஒரு சாதிபட்டியலுக்குள் சேர்த்து ஏமாற்றிவிட்டார்கள். நாங்கள் சாதி ரீதியாக மட்டுமல்ல, பாலின ரீதியாகவும்தான் ஒடுக்கப்படுகிறோம்.

எங்கள் போராட்டமே ஆண்கள், பெண்கள் என்ற பாலினத்தவர்களோடுதான். அவர்களுக்கும்கூட மாற்றுத்திறனாளிகள், விதவைகள், எஸ்.சி/எஸ்.டி பெண்கள் என வயது வரம்பில், கட் ஆஃப் மதிப்பெண்களில் நிறைய சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், திருநங்கைகளான எங்களுக்கு எந்த சலுகையும் இல்லை. தேர்வு எழுத அனுமதித்தாலும், தேர்ச்சி பெற்றாலும்கூட பணி நியமனத்துக்கான அழைப்பானை அரசிடமிருந்து கிடைப்பதில்லை; இதனால், அடுத்தடுத்து அரசுத் தேர்வுகள் எழுதிய ஆராதனா, சாரதா, தேன்மொழி போன்ற நிறைய மூன்றாம் பாலினத்தவர்கள் பாதிக்கப்பட்டனர். எனவே, இவற்றையெல்லாம் குறிப்பிட்டு, தமிழக அரசு பின்பற்றும் `வெர்டிகள் ரிசர்வேசனால்' எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை, எனவே `ஹரிசாண்டல் ரிசர்வேசன்' வேண்டும் எனக்கோரி 2020ஆம் ஆண்டு மீண்டும் வழக்கு தொடர்ந்தோம். ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்டு இரண்டாண்டுகளாகியும் தமிழக அரசு சார்பில் இன்றுவரை எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை” என குற்றம்சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும்விதமாக பேசியுள்ள திமுக மகளிரணி துணைச் செயலாளரும், தமிழக அரசின் முன்னாள் சமூக நல வாரிய தலைவருமாக இருந்த கவிஞர் சல்மா, “அரசுப்பணிகளில் எங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் எனக்கோரி கோர்ட் வரைக்கும் இன்று திருநங்கைகள் சென்றிருக்கிறார்கள் என்றால் அதற்கான துணிவைக் கொடுத்ததே திமுக அரசாங்கம்தான். பல்வேறு பெயர்களில் கேலிசெய்யப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்களுக்கு திருநங்கை, திருநம்பி என சூட்டியும், கடந்த 2008ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தை உருவாக்கி அவர்களுக்கான சமூக அங்கீகாரத்தைத்தந்தவர் கலைஞர்தான்.

அவர்வழியில்தான் தற்போது முதலமைச்சர் ஸ்டாலினும் அனைவருக்குமான ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார். தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் புதிய அலுவல் சாரா உறுப்பினர்களாக 13 திருநங்கைகளை புதிதாக நியமித்திருக்கிறார். திருநங்கைகள் கோரிக்கை வைத்த உடனே, அரசுப் பேருந்துகளில் பெண்களோடு சேர்த்து திருநங்கைகளுக்கும் இலவச பயணத்துக்கு வழிவகை செய்துகொடுத்தார். நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் திருநங்கைகளுக்கும் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததன்மூலம், திருச்செங்கோட்டில் திருநங்கை ரியாவும், வேலூரில் திருநங்கை கங்காவும் வெற்றி பெற்று இன்று மக்கள் பணி செய்து வருகிறார்கள். எனவே, திருநங்கைகள் முன்வைத்திருக்கும் இந்த நியாயமான கோரிக்கையை நிச்சயம் முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் நிறைவேற்றுவார்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- ராஜ்-

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

வியாழன் 7 ஏப் 2022