சொத்து வரியைத் திரும்பப் பெறுக: அதிமுக பாஜக வெளிநடப்பு!

politics

சொத்து வரி சீராய்வு என்பது மனமுவந்து செய்யப்பட்ட ஒன்றல்ல என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் முதல்வரின் பதிலை ஏற்க மறுத்த அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தன.

தமிழகத்தில் சொத்து வரி 25% முதல் 150% வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது. இந்தச்சூழலில் இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சொத்து வரி உயர்வு தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்நிலையில் சொத்து வரி உயர்வு குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “சொத்து வரி சீராய்வு என்பது மனமுவந்து செய்யப்பட்ட ஒன்றல்ல. சொத்து வரி உயர்வு குறித்து நேற்று அமைச்சர் கே.என்.நேரு நேற்று விளக்கமளித்தார்.

முன்னதாக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெறவில்லை. மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் தேக்கமடைந்திருந்தது. மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் வருவாய் பற்றாக்குறையால், மக்களின் அன்றாட தேவைக்கான பணிகளை நிறைவேற்றுவதில் கூட பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.

தற்போது அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்பில் பொறுப்பேற்றவர்கள் அரசிடம் என்ன எதிர்பார்ப்பார்கள். அவர்கள் ஆற்றவேண்டிய பணிகளுக்கு, திட்டங்களுக்கான நிதியை எதிர்பார்ப்பார்கள்.

இந்நிலையில் தான் அடித்தட்டு மக்களைப் பாதிக்காமல், உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சியை மனதில் வைத்துக்கொண்டு சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியைப் பெறுவதற்கு ஒன்றிய அரசு விதித்த நிபந்தனையின் பேரில்தான் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் 83 சதவிகித ஏழை எளிய மக்களைப் பெரிய அளவில் பாதிக்காத வகையில் கவனத்துடன் வரி உயர்த்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

ஆனால் முதல்வரின் பதிலை ஏற்க மறுத்த அதிமுக, பாஜக உறுப்பினர்கள் சொத்து வரியைத் திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “திமுக அரசு பொறுப்பேற்ற 10 மாத காலத்தில் எந்த நன்மையையும் செய்யவில்லை. மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. மக்கள் அதிர்ச்சியடையும் அளவுக்கு தற்போது சொத்து வரியை உயர்த்தியுள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள சூழலில் இந்த வரி உயர்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். மக்கள் மீது, இந்த அரசு பெரும் சுமையைச் சுமத்துகிறது. எனவே சொத்து வரி உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், மத்திய அரசு கூறியதன் அடிப்படையில் சொத்து வரியை உயர்த்தியதாகக் கூறியிருக்கிறார். ஆனால் , சொத்து வரிக்கான குறைந்தபட்ச அளவினை ஒவ்வொரு மாநிலமும் அறிவிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், மற்றும் வரி வசூலிப்பதற்கான பொருத்தமான செயல்பாட்டுடன் கூடிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றுதான் மத்திய அரசு கூறியிருக்கிறது. ஆகவே மத்திய அரசு சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறவில்லை.

ஆனால் பொறுப்பேற்று 10 மாத காலத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை காத்திருந்து வாக்களித்த மக்களுக்குப் பரிசளிக்கும் விதமாக வரியை உயர்த்தியுள்ளனர். இதனால் வாடகை வீட்டுதாரர்கள் கூடுதலாக வாடகை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில், அறிவிப்பு எண் 487-ல், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் மேம்படும் வரையில் சொத்துவரி உயர்த்தப்படமாட்டாது என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஒரு பேச்சு, ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு என்ற வகையில் ஸ்டாலின் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். சொத்துவரியை அவர் திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தோம்” என்றார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *