�டிஜிட்டல் திண்ணை: இந்தப் பக்கம் மோடி-அந்தப் பக்கம் சோனியா: வாசன் முடிவு என்ன?

politics

வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராம் ஒரு போட்டோவை அனுப்பியது. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கடந்த மார்ச் மூன்றாவது வாரத்தில் பிரதமர் மோடியை சந்தித்த புகைப்படம் தான் அது.

அது தொடர்பான செய்திகளை வாட்ஸ்அப் டைப் செய்யத் தொடங்கியது.

“ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் புள்ளியியல் துறை ஆகியவற்றைக் கவனித்து வந்தவர் ஜி கே வாசன். கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே அவர் காங்கிரசிலிருந்து விலகி மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸை தொடங்கினார். இன்றுவரை தமாகாவை நடத்தி வருகிறார். தனது கட்சிக்குள்ளேயே கடும் விமர்சனங்களை தாண்டி பாஜக இடம்பெற்ற அதிமுக கூட்டணியில் சேர்ந்தார் வாசன்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மாமல்லபுரம் சீன அதிபர் சந்திப்புக்காக தமிழகம் வந்தார் பிரதமர் மோடி. அப்போது விமான நிலையத்தில் மோடியை வாசன் வரவேற்ற போது, ‘ வாசன் ஜி… என்ன டெல்லி பக்கமே காணோம்? நான் கூப்பிட்டாதான் வீட்டுக்கு வருவீங்களா?’ என்று வாசனிடம் உரிமையாக பிரதமர் கேட்டது அரசியல் அரங்கில் பெரும் கவனிப்பை ஏற்படுத்தியது. அன்று முதல் மோடிக்கும் வாசனுக்கும் இடையிலான பிணைப்பு மேலும் அதிகரித்தது.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மூலம் வாசனை பற்றி நல்ல விதமாக பல்வேறு விஷயங்களை தெரிந்து கொண்ட மோடி, எப்படியாவது ஜி.கே‌. வாசனை பாஜகவுக்கு கொண்டுவருவது என்றும் தனது அமைச்சரவையில் வாசனுக்கு இடம் கொடுப்பது என்றும் பல்வேறு முயற்சிகளைச் செய்தார். ஆனால் வாசன் மோடியின் ஆஃபரில் இருந்து நழுவிக் கொண்டே வருகிறார்.

இந்த பின்னணியில்தான் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் வாசன். அப்போது கூட தனது அமைச்சரவையில் இண்டிபெண்டன்ட் சார்ஜ் எனப்படும் கேபினட் அமைச்சர் இல்லாத அதேநேரம் தனித் துறையுடன் கூடிய இணையமைச்சர் பதவி தருவதாக பிரதமர் மோடி கேட்டதாகவும் அதற்கு வாசன் சற்று யோசித்து பதில் சொல்வதாக சொல்லி விட்டதாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பேச்சுகள் உலவின.


இதற்கிடையே இந்த தகவல் டெல்லி புள்ளிகள் மூலம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கவனத்திற்கும் சென்றிருக்கிறது. சமீப நாட்களாகவே சோனியா காந்தி ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் காங்கிரஸூக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த வகையில் தமிழகத்தில் ஜி.கே. வாசனை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டுவரும் முயற்சியிலும் சோனியா இறங்கியுள்ளார்.

சோனியாவின் ஒப்புதலோடு முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏ.கே.ஆண்டனி சமீப வாரங்களில் வாசனுடன் தொடர்ந்து பேசி வருகிறார். பிரதமர் மோடியிடம் எப்படி வாசன் நழுவினாரோ, அதேபோலத்தான் அந்தோணியிடமும் பிடிகொடுக்காமல் பதிலளித்திருக்கிறார் வாசன்.

இந்த நிலையில் வரும் மே மாதம் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து தமிழ் மாநில காங்கிரசின் மாவட்டத் தலைவர்களை, நிர்வாகிகளை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் வாசன். அவர்களிடம் ஆலோசித்து மீண்டும் காங்கிரஸில் சேர்வதா அல்லது வேண்டாமா என்பது பற்றி முடிவெடுக்க இருக்கிறார் என்கிறார்கள் அக்கட்சி வட்டாரத்தில். வாசன் மீண்டும் காங்கிரசுக்குள் வருவதை தற்போதைய மாநில காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி விரும்புகிறார். ஏற்கனவே இது குறித்து சில முயற்சிகளை அவரும் மேற்கொண்டிருந்தார். ஆனால் இப்போது சோனியா காந்தியே களத்தில் இறங்கி இருப்பதால் வாசன் என்ன முடிவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம் வாசனை மீண்டும் காங்கிரசுக்குள் சேர்ப்பதில் ராகுல் காந்திக்கு ஆர்வம் இல்லை என்றும் டெல்லி வட்டாரத்தில் கூறுகிறார்கள்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *