மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 ஏப் 2022

சிறப்புக் கட்டுரை: தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சனின் கொடை!

சிறப்புக் கட்டுரை: தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சனின் கொடை!

ரவிக்குமார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் டெல்லியில் நேற்று வெளியிடப்பட்ட பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் அவர்களின் A Dravidian Journey: Glimpses into Tamilnadu’s Transition to a post Agrarian Society என்ற நூல் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு அறிவுத்தளத்தில் வழங்கப்பட்ட பெரும் கொடை எனச் சொல்வது மிகை அல்ல.

தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்கான திட்டங்களை வகுப்பதில், திறமை உள்ள பலரது பங்கேற்பும் இருக்க வேண்டும் என்ற ஜனநாயக நோக்கோடு செயல்படுகிற அரசு இப்போது அமைந்து இருக்கிறது. தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவராக திரு.ஜெயரஞ்சன் அவர்கள் நியமிக்கப்பட்டது அதற்கு ஒரு சான்று. திரு.ஜெயரஞ்சன் அவர்கள் அரசுக்கு நேரடியாகப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருவதோடு முக்கியத்துவம் வாய்ந்த இந்த நூலையும் வழங்கியிருக்கிறார்.

கடந்த சுமார் 15 ஆண்டுக் கால இடைவெளியில் எழுதப்பட்ட ஒன்பது கட்டுரைகளைக் கொண்ட இந்த நூல் ஒரே நூலாக எழுதப்பட்டது போன்ற பொருள் அமைதியைக் கொண்டிருக்கிறது. இதில் இடம்பெற்றுள்ள “தாராளமயமாக்கல் காலகட்டத்தில் கிராமப்புற தமிழ்நாடு” என்ற தலைப்பிலான கட்டுரை, இந்த நூலில் மையமாக முன்வைக்கப்பட்டிருக்கும் ‘விவசாயத்துக்கு பிந்தைய சமூகம்’ என்ற கருத்தாக்கத்துக்கு வலுசேர்க்கும் விதமாக எழுதப்பட்டிருக்கிறது. பல்வேறு ஆய்வாளர்கள் நடத்திய கிராமப்புற ஆய்வுகள் குறித்து ஜான் ஹாரிஸ் என்பவரோடு இணைந்து ஜெயரஞ்சன் எழுதிய கட்டுரை இது. 2014ஆம் ஆண்டு வெளியான இந்தக் கட்டுரை, அதற்கு முன்பு சுமார் 25 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக் கிராமப்புறங்களில் நிலவுடமை மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தில் நிகழ்ந்த மாற்றங்களை ஆராய்கிறது. கிராமப்புறங்களில் இருந்து உயர்சாதியினர் பெரும்பாலும் வெளியேறி விட்டதையும் நில உரிமை என்பது இடைநிலைச் சாதிகளின் கைகளுக்கு மாறி இருப்பதையும் பல்வேறு கிராமங்களில் நடத்தப்பட்ட கள ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரையில் ஜெயரஞ்சன் விவாதிக்கிறார். நிலவுடைமையாளர்களாக மாறி இருக்கின்றனர் என்றாலும் இந்த மாற்றத்தின் பலனை பெரும்பாலும் அவர்கள் அனுபவிக்க முடியாதவர்களாகவே உள்ளனர் என்று குறிப்பிடுகிறார். விவசாய வேலைகளைப் பெறுவதிலும் அவர்களுக்கு பெரிய வாய்ப்பு எதுவும் இல்லாத நிலையே தொடர்கிறது. எனவே, விவசாயத்தை அண்டி இருக்கும் நிலையிலேயே அவர்கள் உள்ளனர். விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது என்றாலும்கூட அவர்களுக்கு மாற்று ஏதும் இல்லை. 100 நாள் வேலைத்திட்டம் சற்றே அவர்களது வறுமையைக் குறைத்திருக்கிறது அவர்களது கூலி அளவை உயர்த்தி இருக்கிறது என்றாலும்கூட அதனால் பெரிய பலன் ஏதும் வந்துவிடவில்லை என்ற உண்மை இந்த நூல்களில் உள்ள கட்டுரைகளின் வழியாகப் பதிவாகியிருக்கிறது.

இந்த ஆய்வோடு மேலும் சில அம்சங்களையும் இணைத்துப் பார்க்கவேண்டும் என்று கருதுகிறேன்.

1. எண்ணிக்கை பலம் இல்லாத உயர்சாதியினரிடம் நிலம் இருந்தபோது அவர்கள் தமது மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இந்து மதம் வழங்கியிருக்கும் சமயரீதியான உயர்நிலையை சடங்குகள் மூலம் மறு உற்பத்தி செய்துகொண்டிருந்தனர். தம்மை அண்டி நிற்கும் கூலிகளிடம் பரிவோடு இருப்பது போன்ற பாவனை தேவைப்பட்டது. தம்மை வள்ளல்களாகக் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை இருந்தது. இது கிராமப்புற விவசாயப் பொருளாதார அமைப்பை சில சிந்தனையாளர்கள் விதந்தோதவும் காரணமாக அமைந்தது (Romanticisation of Agrarian Economy என திரு.ஏ.எஸ்.பன்னீர்செல்வன் தனது முன்னுரையில் அதைக் குறிப்பிட்டிருக்கிறார்). இப்போது எண்ணிக்கை பலம் கொண்ட இடைநிலைச் சாதியினரிடம் நிலம் கைமாறியதற்குப் பிறகு பொருளாதார அதிகாரமும் அதனால் கிடைக்கும் அரசியல் அதிகாரமும் இணைந்து அவர்களுடைய மேலாதிக்கம் என்பது ஈவிரக்கமற்றதாக மாறி இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட கிராமப்புறங்களில் தலித்துகள் மீதான வன்கொடுமைகள் அதிகரிப்பதற்கு நிலவுடைமையில் நிகழ்ந்த இந்த மாற்றமே முக்கியமான காரணமாகும்.

2. விவசாயத் துறை பொதுவாக வீழ்ச்சியடைந்துவரும் இக்காலத்தில் இடைநிலைச் சாதியினர் கையில் நிலம் வந்ததனால் அவர்கள் பொருளாதார பலத்தைப் பெரிதாகப் பெற்றுவிடவில்லை என்பது உண்மைதான். அதனால் அவர்களைத் தாராளமயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் (Victims) எனச் சித்திரிப்பதும் சரியல்ல (தமிழ்ப் புதின இலக்கியத்தில் இதைப் பார்க்கலாம்). கிராமப்புறத்தில் நிலவுடைமை கொடுக்கும் குறியீட்டு அதிகாரத்தால் எண்ணிக்கை பலம் கொண்ட அவர்களது ஆதிக்கம் பெருமளவில் அதிகரித்திருக்கிறது. திராவிட இயக்கத்தின் கருத்தியல் பிரச்சாரமும், நில சீர்திருத்தச் சட்டங்களும் கிராமப்புறங்களில் உயர்சாதியினரின் பிடியைத் தகர்த்துவிட்டன. அதனால் பலனடைந்த இடைநிலைச் சாதியினர் அரசியலிலும் ஆதிக்கம் செலுத்துபவர்களாக ஆகியிருக்கின்றனர். அரசாங்கத்திடம் அவர்களுக்கு இருக்கும் அணுக்கம் அரசின் திட்டங்களையும், மானியங்களையும், கடன்கள் மற்றும் கடன் தள்ளுபடிகளின் பலன்களையும் பெருமளவில் அவர்கள் அனுபவிக்க வழி செய்திருக்கிறது. இவை கிராமப்புறங்களில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் நிலமற்ற தலித்துகளை எட்டாதது மட்டுமின்றி சமூகரீதியில் அவர்களை மேலும் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளியிருக்கிறது . விவசாயம் சார்ந்த அரசின் திட்டங்களை துண்டு துக்காணி நிலம் வைத்துள்ள ஒருசில தலித்துகளும்கூட பயன்படுத்த வாய்ப்பில்லாமல் அரசியல் ஆதிக்க சக்திகளால் அவர்கள் தடுக்கப்படுகின்றனர்.

3. சுதந்திரத்துக்குப் பிறகான 75 ஆண்டுகளில் தமிழ்நாட்டிலுள்ள தலித்துகள் அரசாங்கத்தில் பங்கேற்பாளர்களாக மாறி இருக்கிறார்களா அல்லது அரசாங்கத்தின் தயவை எதிர்பார்க்கும் நிலையில்தான் இன்னும் வைக்கப்பட்டு இருக்கிறார்களா என்பதை ஆராய்ந்தால் அவர்கள் இன்னும் அரசாங்கத்தின் கருணைக்காக கை ஏந்துகிற நிலையில்தான் உள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இட ஒதுக்கீடு, அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் முதலானவை அவர்களுக்கு அரசாங்கத்தில் பங்கேற்பதற்கான சமவாய்ப்பை அளிக்கும் எனச் சொல்லப்பட்டாலும் அது ஓரளவுக்கே நடந்திருக்கிறது. நகரங்களோடு ஒப்பிட்டால் கிராமப்புறங்களில் அதனால் பெரிய பண்பு மாற்றம் எதுவும் நடந்துவிடவில்லை.

4. 100 நாள் வேலைத்திட்டம் என்கிற தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டம் தலித்துகளுக்கு சில நன்மைகளைக் கொண்டு வந்திருக்கிறது. குறிப்பாக அவர்கள் நிலவுடைமையாளர்களை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டிய நிலையைச் சற்று தளர்த்தி இருக்கிறது, அந்தத் திட்டம் தற்காலிகமாக ஏற்படுத்தும் தொழிலாளர் பற்றாக்குறை கூலி கொஞ்சம் உயர்வதற்கு வழி வகுத்திருக்கிறது. ஆனால், விவசாயம் செய்வது திறன் சார்ந்த வேலையாக (Skilled Labour) அங்கீகரிக்கப்படாத இந்த நாட்டில் விவசாயத்தைச் சார்ந்திருக்கும் தொழிலாளர்கள் திறனற்றத் தொழிலாளர்கள் (Unskilled Labourers) என்றே வகைப்படுத்தப்படுகின்றனர். நகரமயமாதல், தாராளமயப் பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றால் உருவான சந்தை வாய்ப்புகள் எதையும் ‘திறனற்றத் தொழிலாளர்களான’ கிராமப்புற தலித்துகளால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் அவர்கள் நகரங்களுக்குப் புலம் பெயர்ந்தாலும் பெரும்பாலும் சேவை துறைகளிலேயே உதிரிப் பாட்டாளிகளாகத் தேங்கிப் போகும் நிலை இருக்கிறது.

கிராமப்புறங்களிலிருந்து நகரங்களை நோக்கிப் ‘புலம்பெயர் தொழிலாளர்களாக’ (Migrant Labourers ) சென்றாலும் அங்கேயும் கூட கடுமையான நெருக்கடிகளை தலித்துகள் எதிர்கொள்கின்றனர். இந்தியாவில் மிக அதிகமாக நகரமயமான மாநிலமாகத் தமிழ்நாடு இருந்தாலும் நகர மயத்தின், தாராளமயத்தின் அனுகூலங்களை தலித்துகளால் நுகர முடியவில்லை என்பதை திரு ஜெயரஞ்சன் இந்த நூலில் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார். “தலித்துகள் மற்றும் பெண்கள் அதிக ஊதியம் பெறும் விவசாயம் சாராத வேலை வாய்ப்புகளிலிருந்து தொடர்ந்து ஒதுக்கி வைக்கப்படுவதற்கு கிராமப்புற ஆய்வுகளில் வலுவான சான்றுகள் உள்ளன. சமூக நீதியை சாதிப்பதில் தமிழ்நாடு மேலும் வெகுதூரம் பயணிக்க வேண்டும்" (பக்கம் 327) என அவர் குறிப்பிடுகிறார்.

இந்த நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிற தமிழ்நாடு நிதியமைச்சர் மாண்புமிகு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களும் இந்த அம்சத்தை கவனத்தில் எடுத்துத் தனது முன்னுரையில் மேற்கோள் காட்டியிருக்கிறார். அரசின் பொருளாதாரக் கொள்கைகள் இதுகாறும் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறவர்களை முன்னேற்றுவதற்குக் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை அவர் வழிமொழிந்து இருக்கிறார்.

தமிழ்நாட்டிலுள்ள பயிற்சி பெற்ற பொருளாதார அறிஞர்கள் ஒரு சிலருள் தனித்துவம் வாய்ந்தவர் திரு.ஜெயரஞ்சன். தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் அறியப்பட்ட பிற பொருளாதார அறிஞர்களிலிருந்து திரு.ஜெயரஞ்சன் அவர்களை வேறுபடுத்தும் அம்சம் அவரது அடித்தள மக்கள் சார்பு நிலைதான். இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஒன்பது ஆய்வுக் கட்டுரைகளிலும் அந்த கருத்தியல் சார்புநிலை துலக்கமாகத் தெரிகிறது. இந்த நூலில் வெளிப்படுத்தப்பட்டு இருக்கும் உண்மைகளைத் தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு, அனைவரையும் உள்ளடக்கும் பொருளாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும். பாப்புலிசத்துக்குப் பலியாகாமல் வளர்ச்சிக்கான திட்டங்களை உருவாக்குவதற்கு எந்தெந்த இடங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்த நூல் ஒரு கையேடுபோல அடையாளம் காட்டுகிறது.

பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

ரவிக்குமார் விடுதலைச் சிறுத்தைகள் எம்.பி ரவிக்குமார், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல் தலைவர். எழுத்து உலகில் அறியப்படும் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். சாதி எதிர்ப்பு கொள்கை கொண்ட நவாயனா என்ற பதிப்பகத்தைத் தொடங்கி இவர் நடத்தி வருகிறார். சாதி எதிர்ப்பு ஆர்வலரான ரவிக்குமார், 90களில் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த எழுத்தாளர்களை அறிமுகப்படுத்திய பெருமைக்குரிய நிற பிரிகை என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர்.

.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

செவ்வாய் 5 ஏப் 2022