மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 ஏப் 2022

சிறப்புக் கட்டுரை: அமெரிக்காவைப் பின்பற்றி இந்தியா, சீனாவுடன் சமரசமாகிறதா? பகுதி 3

சிறப்புக் கட்டுரை:  அமெரிக்காவைப் பின்பற்றி இந்தியா, சீனாவுடன் சமரசமாகிறதா? பகுதி 3

பாஸ்கர் செல்வராஜ்

இந்தியாவின் அமெரிக்க சார்பு நடவடிக்கையின் அடிநாதம்... அமெரிக்க - சீன பனிப்போர் ஏற்படும்; அதனால் அங்கிருக்கும் உற்பத்தி இங்கு வரும் என்ற எதிர்பார்ப்பு. கொரோனா போரில் தோல்வி, அமெரிக்க ஆட்சி மாற்றம் ஆகியவை அதில் மண் அள்ளிப் போடவே பைடன் நிர்வாகம் தடுப்பூசி உற்பத்தி, சூரிய மின்னாற்றல் உற்பத்தி ஆகியவற்றை தருவதாக ஆசைகாட்டியது. ஆனால், தடுப்பூசி உற்பத்தியிலும் ஏமாற்றி சூரிய மின்னாற்றல் உற்பத்தியையும் சீனாவுக்குக் கொடுத்து அமெரிக்க பணவீக்க பிரச்சினையை பைடன் நிர்வாகம் தீர்க்க முனையவே விழித்துக்கொண்ட பாஜக அரசு, விவசாய நில திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்று பின்வாங்கியது. அமெரிக்க மத்திய வங்கியின் வட்டிவிகித உயர்வு பங்குச்சந்தை வீழ்ச்சி, முதலீடு குறைவு ஆகியவை முன்பு காங்கிரஸ் கட்சி ஆட்சியிழக்க காரணமானதைப்போல 2024இல் பாஜகவும் ஆட்சியை இழக்கும் வாய்ப்புகளை கொண்டிருந்தது. இந்த நிலையில்தான் உக்ரைன் போர் ஏற்பட்டது.

முன்பு கொரோனா தொற்றில் புதிய பனிப்போர் வாய்ப்பு ஆசைகாட்டி இந்தியாவை தனது வலையில் விழச்செய்ததைப் போல ரஷ்ய வளத்தையும் அதற்கான சந்தையையும் காட்டி ஐரோப்பியர்களை அமெரிக்கர்கள் இந்த போர்வலையில் விழ வைத்திருக்கலாம். அமெரிக்காவின் வலையில் இந்தியா விழுந்ததால் மின்னணுப் பொருளாதார மாற்ற சந்தையை அமெரிக்க நிறுவனங்கள் பெற்று அதற்கான விலையை இந்தியாவின் சிறு குறு உற்பத்தியாளர்களும், வணிகர்களும், தொழிலாளர்களும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது ஐரோப்பா, உக்ரைன் போர் சதிவலையில் விழுந்ததால் ஐரோப்பாவின் எரிபொருள் சந்தையை அமெரிக்க நிறுவனங்கள் பெறுகின்றன. எரிபொருள் விலையேற்றத்துக்கான விலையை அங்கிருக்கும் மக்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப்போல இனி ஐரோப்பா ரஷ்ய நாணயமான ருபிளை கொடுத்துதான் ரஷ்யாவிடம் எரிவாயுவைப் பெற வேண்டும் என்று தன்மீது தொடுத்த பொருளாதாரப் போருக்குப் பதிலடியாக ஐரோப்பாவின் மீது ரஷ்யா தனது பொருளாதாரப் போரைத் தொடுத்திருக்கிறது.

எந்த பொருளாதாரத்தை, நாணயத்தை ஒன்றுமில்லாமல் செய்ய பொருளாதாரத் தடை, செல்வ முடக்கம் செய்தார்களோ... அதை இப்போது இவர்களே தாங்கிப்பிடிக்கப் போகும் சூழல். இந்த அறிவிப்பு வந்தவுடன் டாலருக்கு எதிராக ரஷ்ய நாணயம் ஐந்து விழுக்காடு உயர்ந்தது. ரஷ்ய எரிபொருள் இன்றி ஐரோப்பாவால் வாழ முடியாது. ரஷ்ய நிபந்தனைக்குக் கட்டுப்பட்டால் அதற்கான அரசியல் விலையை ஐரோப்பிய ஒன்றிய அரசியல் கட்சிகள் கொடுக்க வேண்டிவரும். இந்தப் பக்கம் சென்றால் கடிக்கும்; அந்தப் பக்கம் சென்றால் உதைக்கும் என்ற நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் பிளவுபட்டு நிற்கிறது. மேற்கின் அனைத்து நாடுகளின் நிறுவனங்களும் வெளியேறினாலும் பிரான்ஸின் நிறுவனங்கள் அங்கேயே இருக்கின்றன. அதற்கான பலனை அந்த நிறுவனங்களும் தனது சுயமான வெளியுறவுக் கொள்கையை தக்கவைத்ததன் பலனை வரப்போகும் தேர்தலில் அந்த நாட்டின் அதிபர் மேக்ரானும் அறுவடை செய்வார்கள். சுயசார்பற்ற ஐரோப்பிய நாடுகளின் அரசியல் கட்சிகள் அதற்கான விலையை எதிர்காலத்தில் கொடுக்கும்.

இதை எதிர்கொள்ளும் விதமாக புதின் ஏன் எரிவாயு ஒப்பந்தத்தின் பரிவர்த்தனை ஊடகமான பணத்தை மட்டும் மாற்றக் கோருகிறார்; விலையையும் ஏன் மாற்றக் கூடாது என்ற குரல்கள் ஐரோப்பாவில் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. அதனால் என்ன குறைத்தால் போச்சு என்று ரஷ்யா சொல்ல வாய்ப்பிருக்கிறது. அப்படியான ரஷ்ய - ஐரோப்பிய ஒப்பந்தம் அமெரிக்காவையும் அதன் ஐரோப்பிய நேட்டோ கரத்தையும் உடைக்கும். என்னவாகும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த உக்ரைன் போரில் தோல்வி என்பது அமெரிக்காவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு “ரஷ்ய எரிவாயு வளம் அதன் சந்தை” என்ற முழுப்பலனை கொடுக்கவில்லையே தவிர, இப்போதைய பிரச்சினைகளான பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகிய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொடுத்திருக்கிறது. ஐரோப்பாவை ரஷ்யாவுக்கு எதிராகவும் இந்தியாவை சீனாவுக்கு எதிராகவும் ஏவிவிட்ட அமெரிக்காவின் நிறுவனங்கள் பலனை அறுவடை செய்வது மட்டுமல்ல; இதுவரையிலும் இந்த இருவருக்கும் பொது எதிரியாக சீனாவைக் கட்டமைக்க முயன்ற அமெரிக்கா எல்லோருக்கும் முன்பாக முந்திக்கொண்டு அதனுடன் பொருளாதார ஒப்பந்தம் செய்துகொண்டு தனது அணி நாடுகள் அனைத்தின் முதுகிலும் குத்தி இருக்கிறது.

இப்படியான அமெரிக்காவின் ஒப்பந்தம் நாம் முன்பே ஊகித்ததுதான். இப்படியான ஒப்பந்தம் அமெரிக்க சார்பெடுத்த இந்திய பார்ப்பனியவாதிகளுக்கு சாவு மணியாக இருக்கும் என்றும் முன்பு கூறியிருந்தோம். இதில் எதிர்பாராதது

1. உலக வர்த்தகத்தில் டாலரின் வீழ்ச்சி படிப்படியாக 10-20 ஆண்டுகளில் நடைபெறும் என்ற கணிப்பு பொய்யாகி உக்ரைன் போர் தொடங்கிய 10-20 நாட்களில் மாறத்தொடங்கி இருப்பது

2. அமெரிக்க சார்புநிலைக்கு போன வேகத்தில் மீண்டும் நடுநிலை வெளியுறவுக்கொள்கைக்கு இந்தியா வந்தது மட்டுமல்ல; சொந்த நாணயத்தில் வர்த்தகம், சீனாவுடன் சமரசம் என அது 180 டிகிரி கோணத் திருப்ப முடிவுகளை எடுத்திருப்பது.

இரண்டாம் உலகப்போரில் ரஷ்யாவைத் தாக்க முற்பட்டு அழிவைச் சந்தித்த ஜெர்மனியைப் போல இப்போது ரஷ்ய பனிக்கரடியை சீண்டி பூகோள அரசியல் விளையாட்டை விளையாட முற்பட்ட அமெரிக்காவின் டாலர் தனது ஆதிக்கத்தை வேகமாக இழந்து வருகிறது. ரஷ்ய மத்திய வங்கி மற்றும் பண முதலைகளின் சொத்துகளை முடக்கி பொருளாதாரப் போரை தொடுத்த மேற்கின் நடவடிக்கை மற்ற நாடுகளை மாற்றை நோக்கி சிந்திக்க வைத்திருக்கிறது. சவுதி யுயனில் எண்ணெய் வர்த்தகம் செய்ய முன்வந்திருக்கிறது. இந்தியா ரூபிள் - ரூபாய் வர்த்தகம் செய்ய ஆரம்பித்து அடுத்து சீனாவுடன் பேசி வருகிறது.

அமெரிக்காவின் பின்சென்று அவர்கள் சொன்ன மின்னணுப் பொருளாதார மாற்றத்தைச் செய்து முறைசாரா பொருளாதாரத்தைச் சீரழித்து விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்நாட்டில் அரசியல் அழுத்தத்தைச் சந்தித்துக் கொண்டிருந்த இந்தியாவின் பாஜக அரசும் அதன்பின் இருக்கும் முதலாளிகளும் எந்த பலனுமின்றி இந்தப் போருக்கு முன்பே விரக்தியில் இருந்தார்கள். இதற்கு முன்புவரை அம்பானியும் அதானியும் ஒருவரின் வியாபாரத்தில் மற்றவர் குறுக்கிடாமல் சென்று கொண்டிருந்தார்கள். இந்தியாவில் வியாபார வர்த்தகவெளி சுருங்கி எதிர்பார்த்த வாய்ப்புகள் எதுவும் வராமல் போகவே அதானியின் சூரிய மின்னாற்றல் பகுதியில் அம்பானியும் இவரின் எண்ணெய் சுத்திகரிப்பில் அவரும் இறங்கி மோத தயாராகி இருந்தார்கள். அதானி பாஜகவின் எதிரணியில் இருக்கும் மேற்குவங்க முதல்வரைச் சந்தித்தார். இந்த நிலையில் வந்த உக்ரைன் போர் மேலும் எண்ணெய் விலை அதிகரிப்பு, விலைவாசி உயர்வு எனப் பிரச்சினைகளைத் தீவிரமாக்கியது. இதற்கு மேலும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு கண்டனம், அதன்மீது பொருளாதாரத் தடை என அவர்கள் பின் சென்றிருந்தால் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தில் அதன் விளைவு பாரதூரமானதாக இருந்திருக்கும்.

இந்த நிலையில்தான் யாரும் எதிர்பாராத வகையில் இந்த உக்ரைன் போருக்குப் பிறகு பாஜக அரசு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. இதுவரையிலும் நீதிமன்ற வழக்குகள் மூலம் பியூச்சர்-அமேசான் பிரச்சினையைத் தீர்க்கலாம் என்று பொறுமைகாத்த ரிலையன்ஸ் நிர்வாகம், போர் ஆரம்பித்த மறுநாள் இரவு பியூச்சர் குழுமத்தின் மகுடமாக விளங்கும் பிக் பஜார் கடைகளைக் கைப்பற்றி பெயர் மாற்றம் செய்தது. இப்போது அமேசான் குற்றப் பிரிவுகளில் வழக்கு தொடுப்பேன் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறது. இதுவரையிலும் சீன முதலீடுகளை அனுமதிக்காமல் காலம் தாழ்த்திய ஒன்றியம், இப்போது 1.79 பில்லியன் மதிப்புள்ள 66 சீன முதலீடுகளுக்கு அனுமதி அளித்தது. இதன்பிறகு ஒன்றியம் ரஷ்யாவைக் கண்டிக்க மறுத்தது மட்டுமல்ல; மலிவான விலையில் அதன் எண்ணெயை ரூபிள்-ரூபாய் பரிவர்த்தனை மூலம் வாங்கி பெட்ரோலிய விலை உயர்வைச் சமாளிக்க ஆரம்பித்திருக்கிறது. முன்பு அந்நிய முதலீடுகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்த ஒன்றியம் இப்போது கட்டுப்பாடுகளைக் கொண்டுவருகிறது. ரூபிள்-ரூபாய் பரிவர்த்தனையை இப்போது இருக்கும் டாலருக்கு எதிராக மதிப்பிடும் முறைக்கு பதிலாக சீனாவின் யுயனுக்கு எதிராக மதிப்பிடப் போவதாக செய்திகள் வருகின்றன.

அமெரிக்க மத்திய வங்கி வட்டிவிகிதத்தை உயர்த்தப் போவதால் நிதி நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளை விற்று வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அந்த பங்குகளை எல்ஐசி, எஸ்பிஐ உள்ளிட்ட உள்ளூர் நிதி நிறுவனங்களை ஒன்றியம் வாங்கச் செய்து வந்தது. இது பொது நிறுவனங்களை போண்டியாக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே இந்திய ரிசர்வ் வங்கித்தலைவர் அமெரிக்கா வட்டிவிகிதத்தை உயர்த்தினாலும் நாங்கள் உயர்த்த மாட்டோம்; விலைவாசி உயர்வை 4.5 விழுக்காட்டுக்குள் கட்டுப்படுத்துவோம்; கொரோனா காலத்தில் அதிக பணத்தை அச்சிட்டு இருந்தாலும் பணவீக்கம் உயராது; அச்சிட்ட 12 ட்ரில்லியன் ரூபாயில் 5 ட்ரில்லியன் ஏற்கனவே வந்துவிட்டது; நாங்கள் வகுத்திருப்பது சக்கரவியூகம்; அதிலிருந்து வெளியேறும் வித்தை எங்களுக்குத் தெரியும் என அதீத நம்பிக்கையுடன் சவால்விட்டுப் பேசுகிறார்.

பாஜக அரசு எரிபொருள் விலையை உயர்த்தி, காஷ்மீர் பைல் படத்தை வைத்து மத பிளவு அரசியல் செய்ததைத் தவிர உருப்படியாக எதுவும் செய்யாதபோது இவர் எப்படி இவ்வளவு நம்பிக்கையுடன் பேசுகிறார் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே சீன வெளியுறவு அமைச்சர் இந்தியா வரப்போவதாக மற்றுமோர் ஆச்சரியச் செய்தி வந்தது. ஆர்பிஐ கவர்னர் தாஸ் சொன்ன சக்கர வியூகத்துக்கும் சீன வெளியுற அமைச்சரின் வருகைக்கும் என்ன தொடர்பு?

பகுதி 1 / பகுதி 2

நாளை காலை 7 மணி பதிப்பில் பார்க்கலாம்

கட்டுரையாளர் குறிப்பு

பாஸ்கர் செல்வராஜ், தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.

.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

ஞாயிறு 3 ஏப் 2022