மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 ஏப் 2022

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் டின்னர்- திருமா ஆவேசம்: ரசித்த சோனியா

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் டின்னர்- திருமா ஆவேசம்: ரசித்த சோனியா

வைஃபை ஆன் செய்ததும் லொகேஷன் டெல்லி காட்டியது.

இன்ஸ்டாகிராம் டெல்லியில் திமுக அலுவலக திறப்பு விழா படங்களை சரசரவென கொட்டியது.

அவற்றை ஒரு முறை ஸ்கேன் செய்து விட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

"டெல்லியில் திமுகவின் அலுவலகமான அண்ணா கலைஞர் அறிவாலயம் ஏப்ரல் 2ஆம் தேதி மாலை திறப்பு விழா கண்டது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் திறந்து வைத்த இந்த நிகழ்வு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலக் கட்சிகளை ஒரே புள்ளியில் சேர்க்கும் வகையில் ஒரு தேசிய அரசியல் விழாவாகவும் பார்க்கப்படுகிறது.

வருகிற மக்களவைத் தேர்தலை முன்வைத்து தேசிய அரசியலில் திமுக ஒரு குறிப்பிடத்தக்க பங்கு வகிக்க வேண்டும் என்ற திட்டம் கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினுக்கு இருக்கிறது. அந்தத் திட்டத்தை செயல்படுத்துகின்ற ஒரு முக்கியமான திருப்புமுனை நிகழ்வாக இந்த திமுக அலுவலக திறப்பு விழா அமைந்துவிட்டது.

மக்களவையில் தற்போது மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் திமுக தேசிய அரசியலைப் பொறுத்தவரை ஒரு மாநில கட்சி தான். ஆனாலும் சமூக நீதி, மாநிலங்களின் உரிமை, சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தி தேசிய அளவில் பாஜக-வுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்கும் கடமையை இழுத்துப் போட்டுக் கொண்டு இந்த விழா மூலம் செய்திருக்கிறது திமுக.

ஸ்டாலினின் அழைப்பை ஏற்று இந்த விழாவில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதல் கிட்டத்தட்ட பெரும்பாலான மாநில கட்சிகளின் பிரதிநிதிகளும் திமுகவின் நம்பிக்கையை அதிகப் படுத்தியுள்ளனர் என்கிறார்கள் அக்கட்சியின் மூத்த எம்பிக்கள்.

நேற்று மாலை கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து ஒவ்வொரு கட்சியின் பிரதிநிதிகளுக்கும் ஸ்டாலின் தன் கையாலேயே பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

இந்த நிகழ்வுக்கு பிறகு சோனியா காந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற ஒரு டின்னரும் நடைபெற்றது.

இந்த விருந்து நிகழ்ச்சியில் தாஜ் ஹோட்டலில் இருந்து சிற்றுண்டிகளை வர வைத்திருந்தார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான அமைச்சர் எ.வ.வேலு.

சமீப நாட்களாக வெளி நிகழ்ச்சிகள் எதிலும் பெரிதாக தலை கட்டாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, சில மணி நேரங்கள் திமுக அலுவலகத்தில் செலவிட்டு ஸ்டாலினுடனும் பிற எதிர்க் கட்சித் தலைவர்களுடனும் மனம்விட்டு பேசியிருக்கிறார்.

குறிப்பாக இந்த அலுவலகத்தை திறந்து அதன் மூலம் தேசிய அளவிலான காங்கிரசை உள்ளடக்கிய ஒற்றைக் கூட்டணிக்கு வாசலையும் திறந்து இருக்கிறார் ஸ்டாலின் என்பதுதான் சோனியாவின் எண்ணம். நேற்று இரவு நடந்த டின்னர் நிகழ்ச்சியில் சோனியாவின் வார்த்தைகள் அதைத்தான் வெளிப்படுத்தின. சோனியாவை மையமாக அமரவைத்து இருபுறமும் ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா தலைவர்கள் அமர வைக்கப்பட்டிருந்த காட்சியே சில செய்திகளைச் சொல்லியது.

தலைவர்கள் தங்களுக்கிடையே வழக்கமான சம்பிரதாய நலம் விசாரிப்பு களை செய்து கொண்டிருந்த நிலையில்... சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனக்கு எதிரே அமர்ந்திருந்த அகிலேஷ் யாதவை பார்த்து சில விஷயங்களை கூற அப்போதுதான் டின்னர் விவாதம் சூடுபிடித்தது.

'இந்தியாவில் மீண்டும் பிஜேபி ஆட்சி அமைந்து விடுமானால் மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது. அதற்கு நாம் தான் பொறுப்பேற்க வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் நிச்சயமாக அதை தடுக்க முடியும்' என்று முதலில் பொதுவாக பேசிய திருமாவளவன், தனக்கு முன்பாக அமர்ந்திருந்த அகிலேஷ் யாதவை பார்த்து, 'பாருங்கள் உங்களிடம் தான் சொல்கிறேன்... நீங்கள் நினைத்திருந்தால் உத்திரப்பிரதேசத்தில் தேர்தல் முடிவை வேறு மாதிரி ஆக்கி இருக்க முடியும். உரிய காலத்திலேயே காங்கிரசுடன் கூட்டணியை உறுதிப்படுத்தி மற்ற கட்சிகளையும் அதில் இணைத்திருந்தால் உத்திரப்பிரதேசத்தில் நீங்கள் இன்று முதல்வராகி இருக்க முடியும். அதன்மூலம் தேசம் முழுதும் நாம் ஒரு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்க முடியும். ஆனால் துரதிஷ்டவசமாக நீங்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை. உத்திரப்பிரதேச தேர்தல் முடிவுகளின் புள்ளி விவரங்கள் நமக்கு இதைத்தான் தெரிவிக்கின்றன' என்று அகிலேஷ் யாதவை பார்த்து திருமாவளவன் படபடவென பேச, அகிலேஷ் எழுந்துநின்று திருமாவின் கையைப்பிடித்து 'ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்' என்று பதிலளித்தார். இந்தக் காட்சியை சோனியா காந்தி அப்படியே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

திருமாவளவனின் இந்த கருத்துக்கு பின்னர்தான் மற்ற தலைவர்களும் நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நாம் ஒன்றிணைய வேண்டும். அதற்கான செயல்திட்டங்களை வகுக்க வேண்டும் என்றெல்லாம் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தினார்கள். நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடருக்காக கூட எதிர்க் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை இதுவரை கூட்டாத காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நேற்றைய டின்னரில் கலந்து கொண்ட தலைவர்களின் கருத்துக்களை கேட்டு ரசித்தார்.

தனக்கு அருகில் அமர்ந்திருந்த

ஸ்டாலினிடம் கலைஞரை நினைவுபடுத்தி சில விஷயங்களை நெகிழ்ந்து போய் சொல்லி இருக்கிறார் சோனியா. அதற்கு பதிலாக தான் ஏப்ரல் 1ஆம் தேதி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு கொடுத்த நேர்காணலை பற்றி சோனியாவிடம் குறிப்பிட்டார் ஸ்டாலின்.

இந்த டின்னரின் தொடர்ச்சியாக காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பாஜகவுக்கு எதிரான மாநிலக் கட்சிகள் அனைவரையும் ஒன்றிணைத்து டெல்லியில் அல்லது நாட்டின் வேறு ஒரு நகரத்தில் ஒரு கூட்டத்தை கூட்ட ஸ்டாலின் தயாராகிக் கொண்டிருக்கிறார்"என்ற மெசேஜ் சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

ஞாயிறு 3 ஏப் 2022