சொத்து வரி உயர்வு: மத்திய அரசு கட்டாயப்படுத்தியதா?

சொத்து வரியை உயர்த்த மத்திய அரசு கட்டாயப்படுத்தவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அதே சமயத்தில், சொத்து வரி உயர்வைக் கண்டித்து அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ஏற்ப சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்த உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம். சொத்து வரி உயர்த்தவில்லை என்றால் தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பணம் விடுவிக்கப்படாது என்று மத்திய அரசு நிபந்தனை விதித்தது. அதனால்தான் வரி உயர்த்தப்பட்டது என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அமைச்சரின் பதிலுக்கு மறுப்புத் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “மத்திய அரசு வரியை உயர்த்தச் சொல்லவில்லை. மாநில அரசுதான் தன்னிச்சையாக உயர்த்தியிருக்கிறது” என்று கூறியுள்ளார்.
அவர் நேற்று (ஏப்ரல் 2) வெளியிட்டுள்ள அறிக்கையில், “திடீரென்று உயர்த்தப்பட்ட சொத்து வரியை எதிர்த்து எழுந்த மக்களின் எதிர்ப்பை கண்டவுடன் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு சொத்து வரி உயர்வுக்கு நீண்ட விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசு சொல்லித்தான் வரியை உயர்த்தினோம் எனக் கூறியுள்ளார்.
ஆனால், மத்திய அரசு வழங்கிய ஆணையில் எந்த இடத்திலும் அவ்வாறு குறிப்பிடவில்லை. குறைந்தபட்ச நில அளவைக்கு ஏற்ப வரி விகிதாச்சார அளவுகளை அதில் உள்ள வேறுபாடுகளைக் குடியிருப்பு, வணிக மற்றும் தொழில் சார்ந்த பகுதிகளைப் பிரித்து அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப வித்தியாசங்களுடன் வரி விகிதங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரியைத் தன்னிச்சையாக உயர்த்திவிட்டு மக்களைச் சந்திக்கத் துணிவு இல்லாமல் மத்திய அரசின் மீது கோழைத்தனமான பொய்யான புகார் தெரிவித்து நடந்த சம்பவத்தைத் திசை திருப்ப முயற்சி செய்யும் தமிழக அரசின் கபட நாடகத்தை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. சொத்து வரி உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
அதுபோன்று அதிமுக சார்பில் சொத்து வரி உயர்வைக் கண்டித்து வரும் ஏப்ரல் 5ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில், “தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றும் வகையில் செயல்பட்டு சொத்துவரியை உயர்த்தி இருக்கும் திமுக அரசைக் கண்டித்தும், சொத்து வரி உயர்வினை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் ஏப்ரல் 5ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-பிரியா