மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 ஏப் 2022

சிறப்புக் கட்டுரை: இந்தியாவின் சீன - ரஷ்ய நகர்வுக்கு முந்தைய நகர்வுகள்! பகுதி 2

சிறப்புக் கட்டுரை:  இந்தியாவின் சீன - ரஷ்ய நகர்வுக்கு முந்தைய நகர்வுகள்! பகுதி 2

பாஸ்கர் செல்வராஜ்

புதிய அமெரிக்க - சீன பனிப்போரின் மூலம் ஏற்றுமதி பொருளாதாரமாக மாறலாம் என்று அமெரிக்க சார்பெடுத்த இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பதிலாக தடுப்பூசி உற்பத்தி, சூரிய மின்னாற்றல் உற்பத்தி வாய்ப்பு என்றார்கள். தடுப்பூசி உற்பத்தியில் தண்ணி காட்டியவர்கள் சூரிய மின்னாற்றல் உற்பத்தி வாய்ப்பையும் சீனாவுக்கு விட்டுக்கொடுத்து பேரம் பேசுவே, எரிச்சலடைந்து எச்சரிக்கை அரசியலை மேற்கொண்டது பாஜக அரசு. விவசாய திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றது. தொழிலாளர் திருத்தச் சட்டத்தைக் கிடப்பில் போட்டது. அதிலிருந்து ஒன்றிய அரசின் போக்கு மாறியது.

முரண்டு பிடிக்கும் இந்தியாவை சமாதானம் செய்ய அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி கேத்தரின் தாய் வருவதற்கு முன்பாக போதைப்பொருள் விற்பனை தொடர்பாக அமேசான் நிர்வாகிகளை கைது செய்து பாஜக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்ததோடு பெகசஸ் விவகாரத்துக்குப் பதிலடியும் கொடுத்தது. பின்பு அமெரிக்க - சீன ஒத்துழைப்பு இழுபறியைச் சந்தித்து தைவான் - சீன விவகாரம் சூடுபிடித்தது. இந்தியா தைவானின் சில்லுகள் உற்பத்திக்கு அடிபோட்டது. சீனாவுடனான முரண்பாடும் போரும் அமெரிக்க நலன்களுக்கு எதிராகச் சென்று எல்லாவற்றையும் உடைத்து உலக ஒழுங்கையே மாற்றிவிடும் என்பதால் சீன எதிர்ப்பில் இருந்து அமெரிக்கா பின்வாங்கி உக்ரைன் பக்கம் கவனத்தைத் திருப்பியது. அதை ஊதிப்பெருக்கி உக்ரைனை நேட்டோவில் சேர்க்க முனைந்தால் அதைத் தடுக்க ரஷ்யா போருக்கு வரும் என்பது அரசியல் அரிச்சுவடி அறிந்த அனைவருக்கும் தெரியும். அதனால்தான் பைடன் ரஷ்யா ஆக்கிரமிப்பு போரில் ஈடுபடப் போகிறது என அவ்வளவு உறுதியாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அது போரை தடுக்கும் நோக்கம் கொண்டது அல்ல; சண்டைக்குத் தூண்டும் நோக்கம் கொண்டது.

அப்படி சண்டைக்கு வரும் ரஷ்யாவின் சொத்தை முடக்கி, வெனிசுவேலாவில் செய்ததைபோல ரஷ்யாவின் பணத்தை ஒன்றுக்கும் உதவாததாக்கி உலக வர்த்தகத்தில் இருந்து துண்டிப்பதன் மூலம் அங்கே உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்துவது; இதைப் பயன்படுத்தி உக்ரைனில் வைத்து ரஷ்ய படைகளை பதிலிகள் மூலமாகத் தோற்கடிப்பது; ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்து அதன் எண்ணெய், எரிவாயு இயற்கை வளங்களை ஐரோப்பிய, அமெரிக்க நிறுவனங்கள் கைப்பற்றுவது என்பது திட்டமாக இருந்திருக்கலாம். எதிர்பார்ப்புக்கு மாறாக ரஷ்யா உக்ரைனின் எல்லா பகுதிக்கும் போரைப் பரவலாக்கி உக்ரைனின் படைகளைச் சிதறடித்தது. நவீன போர்க்கருவிகளைக் கொண்டு அதன் வான், கப்பற்படை பலத்தை ஓர் இரவில் ஒன்றுமில்லாமல் செய்தது. மேற்கின் உதவி ரஷ்யாவைக் குறுகிய காலத்தில் வெற்றி பெறாமல் தடுத்து ரஷ்யாவுக்கு அதிக இழப்பை ஏற்படுத்த முடிந்திருக்கிறதே தவிர, அதன் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார ஆதரவால் மேற்கின் பொருளாதாரப் போரும் புஸ்வானம் ஆனது. மேற்கின் எதிர்பார்ப்புகள், திட்டங்கள் அனைத்தும் தோல்வியடைந்தது.

முக்கிய கூட்டு நோக்கம் தோல்வியடையவே அமெரிக்கா தனது சொந்த சுயநல நோக்கத்தை நிறைவேற்ற ஆரம்பித்தது. உலக எரிபொருள் மற்றும் கோதுமை உற்பத்தியில் பெரும்பங்கு செலுத்தும் ரஷ்யாவின் மீதான பொருளாதாரப் போரால் விலையேற்றம் காணும் என்பது யாருக்கும் தெரியாதது அல்ல. இதுதான் அமெரிக்காவின் எதிர்பார்ப்பா என்றால் இல்லையென்று சொல்ல முடியாது. இந்தப் போருக்கு முந்தைய பண வீக்கத்துக்கு காரணம் மிகைடாலர் அச்சடிப்பு. இப்போது உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள விலையேற்றத்தால் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தில் டாலரின் தேவை கூடும். அது ஓரிடத்தில் குவிந்து கிடக்கும் வெறும் டாலர் காகிதத்தைச் சுற்றுக்குக் கொண்டுவந்து அதற்கான மதிப்பை எய்த வைக்கும். இதன்மூலம் அமெரிக்கா தன்னுடைய பணவீக்கத்தை உலகம் முழுக்க ஏற்றுமதி செய்கிறது. அடுத்து இந்தப் பண உற்பத்தியால் உள்நாட்டில் ஏற்பட்ட பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கா சீனாவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது.

மார்ச் 14இல் அமெரிக்காவின் சுள்ளிவனும் சீனாவின் யாங்கும் ரோமில் சந்திக்கிறார்கள். 17இல் அமெரிக்கப் பங்குச்சந்தையில் சீன நிறுவனங்கள் நீடிக்க அதன் கணக்கு வழக்குகளை இதுவரையிலும் சரிபார்க்க ஒப்புக் கொள்ளாத சீனா ஒப்புக் கொள்கிறது. 18இல் ஷி - பைடன் பேச்சுவார்த்தையில் முன்பு கொடுத்த நான்கு உறுதிமொழிகளை மீண்டும் கொடுக்கிறார் பைடன். இதுவரையிலும் டாலருக்கு எதிரான சீன நாணய மதிப்பை உயர்த்தி பணவீக்கத்தை அமெரிக்காவுக்குத் திருப்பி அனுப்பிய சீனா இப்போது நாணய மதிப்பைக் குறைத்துக் கொள்கிறது. இதுவரையிலும் வீழ்ச்சி கண்டுவந்த சீன பெருநிறுவனங்களின் பங்குகள் 22 விழுக்காடு கூடுகிறது. மார்ச் 24இல் ட்ரம்ப் நிர்வாகத்தால் 549 சீனப் பொருட்களின் மீது விதிக்கப்பட்ட 25 விழுக்காடு வரி விதிப்பை தளர்த்தி 342 பொருட்களுக்கு அமெரிக்கா விலக்கு அளிக்கிறது. சீன நிறுவனங்கள் உலகம் முழுக்க செல்ல வேண்டும்; அண்டை நாடுகளுடன் சீனா வர்த்தகத் தொடர்பை வலுவாக்க வேண்டும் என்று சீன அரச ஆலோசகர்கள் பேசுகிறார்கள். இதுவரையிலும் “எல்லோரும் வளமாவோம்” என்ற சீன அதிபர் இப்போது புத்தாக்கம், ஒத்துழைப்பு, பசுமை, திறந்த சந்தை, கூட்டு வளர்ச்சி என புதிய பொருளாதாரம் பேசுகிறார்.

சுருக்கமாக சீன சந்தையில் அமெரிக்க நிதி நிறுவன கும்பல் முதலிட வாய்ப்பு, அமெரிக்கக் கடன் பத்திரங்களில் சீனாவின் முதலீடு, பணவீக்கத்தைப் போக்க சீன நாணய மதிப்பு குறைப்புக்கு பதிலாக சீனப் பெருநிறுவனங்கள் உலகம் முழுக்க பொருட்களை சந்தைப்படுத்த வாய்ப்பு, சீனப் பொருட்களின் மீதான வரிகுறைப்பு. சீனப் பெருநிறுவனங்கள் வளர அந்த நாட்டு குறைகூலி தொழிலாளர்கள் அதற்கான விலையைத் தொடர்ந்து கொடுப்பார்கள். பெருநிறுவனங்களின் நலனை பிரதிநிதித்துவப்படுத்தும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சீர்திருத்தப் பிரிவு முன்னுக்கு வந்து சிறு குறு நிறுவனங்களையும் மக்களையும் முன்னிறுத்தி சோசலிசம் பேசிய இடது பிரிவு பின்வரிசைக்குச் சென்றிருக்கிறது.

சீன நாணய மதிப்பைக் குறைப்பதால் ஏற்படும் செல்வத்தின் தரக்குறைவை (Quality) பெருகப்போகும் வர்த்தகத்தினால் குவியும் செல்வத்தைக் கொண்டு (Quantity) சீனா ஈடுசெய்து கொள்ளும். அமெரிக்காவின் பணவீக்க தலைவலி குறைந்து விலைவாசி உயர்வும் கட்டுக்குள் வரும். அது இந்த வருட இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கு வாக்குகளாக மாறும். இருவருக்கும் வெற்றி (win-win). இதனால் ஏற்பட்டு இருக்கும் விலைவாசி உயர்வுக்கான விலையை உலகிலுள்ள மக்கள் அனைவரும் கொடுப்பார்கள். அடுத்த நாட்டை தூண்டிவிட்டு பலிகொடுத்து தனது தலைவலியை அமெரிக்கா தீர்த்துக் கொண்டிருக்கிறது. அதற்குத் துணைபோன ஐரோப்பா முன்பு சீன எதிர்ப்புக்குத் துணைபோன இந்தியா ஆகியவை இப்போது எரிபொருள் விலையேற்றத்தையும், விலைவாசி உயர்வையும் சந்திக்கிறார்கள்.

இவர்கள் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள்?

நாளை காலை 7 மணி பதிப்பில் பார்க்கலாம்.

கட்டுரையாளர் குறிப்பு

பாஸ்கர் செல்வராஜ், தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.

.

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

சனி 2 ஏப் 2022