|தமிழகத்தில் சொத்து வரி குறைவுதான்: கே.என்.நேரு

politics

தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு அதிமுக இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்திய நிலையில், சொத்து வரி உயர்வு தொடர்பாக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு விளக்கமளித்துள்ளார்.

சொத்து வரி உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்தும் அதனை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் சொத்து வரி உயர்வு தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ள அமைச்சர் கே என் நேரு, 1989ஆம் ஆண்டு 102 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டரின் விலை இன்று 915 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அப்போது 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட டீசல் இன்று 98.30 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அதே காலகட்டத்தில் பெட்ரோல் விலை 23.94 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று 107.43 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நிலத்தின் வழிகாட்டும் மதிப்பீடுகளை எடுத்துக் கொண்டால் 1988-99ல் அண்ணா நகரில் ஒரு சதுர அடி அரசின் வழிகாட்டி மதிப்பீடு அடிப்படையில் 1393ஆக இருந்தது. இன்று அதன் மதிப்பு 6253 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில் தேனாம்பேட்டையில் 1,978ஆக இருந்த மதிப்பீடு தற்போது 7,705ஆக உயர்ந்துள்ளது. தேனாம்பேட்டையில் 289 சதவிகிதம் நிலத்தின் மதிப்பீடு உயர்ந்துள்ளது.

2008-2009ஆம் ஆண்டு ஆலந்தூரில் ஒரு சதுர அடி ரூ.1,833ஆக இருந்தது. தற்போது ரூ.3,685ஆக உள்ளது. திருவொற்றியூரில் ரூ.767ஆக இருந்த ஒரு சதுர அடி மதிப்பு தற்போது ரூ.1,965 ஆக உள்ளது” என்று தெரிவித்தார்.

முந்தைய சொத்து சீராய்வுகளின் போது கட்டிடங்களின் பரப்பளவுக்கு ஏற்றவாறு, குடியிருப்பு கட்டிடங்கள் தனித்தனியாகப் பிரித்து, பரப்பளவு குறைவான கட்டிடங்களுக்குக் குறைவான சொத்துவரி உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்த அவர் தற்போது கட்டிடங்கள் எவ்வளவு உள்ளது, காலியிடம் எவ்வளவு உள்ளது என்பதைப் பிரித்து வரி நிர்ணயம் செய்யப்பட்டது என்றார்.

மேலும் சொத்து வரி விகிதங்கள் குறித்துக் கணக்கிட்டுப் பேசிய அவர், “நகர்ப்புறத்தில் மொத்தமுள்ள 77, 87,188 குடியிருப்புகளில், 44,53,976 குடியிருப்புகளுக்கு அதாவது 58.45 % குடியிருப்புகளுக்கு வெறும் 25 சதவிகிதம் மட்டுமே வரி உயர்த்தப்பட்டுள்ளது. 19,23,393 குடியிருப்புகளுக்கு அதாவது 24.07% குடியிருப்புகளுக்கு 50 சதவிகிதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே குடியிருப்புகளைப் பொருத்தவரை பொருளாதார அடிப்படையில் பார்த்தால், 83.18 சதவிகித மக்களுக்கு இந்த வரி உயர்வு ஒரு பாதிப்பாக இருக்காது. மொத்தமுள்ள 77,87,188 குடியிருப்புகளில் வெறும் 1, 09,417 குடியிருப்புகளுக்கு மட்டும் அதாவது 1.4%குடியிருப்புகளுக்கு மட்டுமே அதிகபட்சமாக 150 சதவிகிதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரை, மொத்தமுள்ள 11,03,210 குடியிருப்புகளில் 1,52,158 குடியிருப்புகளுக்கு 25%, 3,46,832 குடியிருப்புகளுக்கு 50 %, 3,12, 894 குடியிருப்புகளுக்கு 75% சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

அதுபோன்று அகமதாபாத், நாக்பூர், லக்னோ,பெங்களூரு மற்றும் கொச்சின் போன்ற நகரங்களைக் காட்டிலும், தமிழகத்தில் மிகவும் குறைவாகத்தான் சொத்துவரி உள்ளது. சென்னை மாநகராட்சியில் 600 சதுர அடி பரப்புள்ள குடியிருப்புக் கட்டிடத்துக்கு தற்போது சொத்து வரி ரூ.810 ஆகும். சீராய்வுக்குப் பின்னர், இது ரூ.1,215 ஆக இருக்கும். ஆனால், இந்த தொகை மும்பையில் ரூ. 2,157, பெங்களூரில் ரூ. 3,464 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.3,510 ஆகவும், புனேவில் ரூ. 3,924ஆகவும் உள்ளன” என்று சுட்டிக்காட்டினார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *