மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 ஏப் 2022

சொத்து வரி உயர்வு : தலைவர்கள் கண்டனம்!

சொத்து வரி உயர்வு : தலைவர்கள் கண்டனம்!

தமிழகத்தில் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது. சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், மத்திய அரசின் 15ஆவது நிதி ஆணையம் விதித்த நிபந்தனையின் அடிப்படையில் சொத்து வரி உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையின் பிரதான நகரப் பகுதியில் 600 சதுர அடிக்குக் குறைவாக உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50%, சென்னையோடு 2011இல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் 25 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதுபோன்று, 600-1,200 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம், 1,201-1,800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம், 1,801 சதுர அடிக்கு மேல் பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கான சொத்து வரி 150 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையோடு 2011இல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில், 600-1,200 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம், 1201-1800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம், 1,801 சதுர அடிக்கு மேல் பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கான சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது

சென்னையின் பிரதான நகரப் பகுதிகளில் வணிக பயன்பாட்டுக் கட்டிடங்களுக்கு 150 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், சென்னையோடு 2011இல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் உள்ள வணிக பயன்பாட்டுக் கட்டிடங்களுக்கு 100 சதவீதம், தொழில் மற்றும் கல்வி நிலையங்களுக்கு 75 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

நகராட்சிகள், பேரூராட்சிகளில் 600 சதுர அடிக்குக் கீழ் உள்ள குடியிருப்புகளுக்கு 25 சதவீதமும், 601 - 1200 சதுர அடி பரப்புள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், 1,201 - 1,800 சதுர அடி பரப்புள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும், 1800 சதுர அடிக்கு மேல் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள வணிக பயன்பாட்டுக் கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய கட்டிடங்களுக்கு 75 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் சொத்து வரி குறைவு என்றும் உதாரணமாக, சென்னையில் 600 சதுர அடி குடியிருப்புக்கு ரூ.1,215ம், மும்பையில் ரூ.2,157ம், பெங்களூருவில் ரூ.3,464ம், கொல்கத்தாவில் ரூ.3,510ம் வசூலிக்கப்படுவதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.

இந்நிலையில் சொத்து வரி உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “சட்டமன்ற தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்குப் பரிசாகப் பொங்கல் சிறப்புத் தொகையைத் தராமல் கைவிரித்த இந்த விடியா அரசு தற்போது நகர்ப்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்குச் சிறப்புப் பரிசாக 150% வரை சொத்து வரி உயர்வை அளித்துள்ளது. இந்த சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்குப் பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது” என்று விமர்சித்துள்ளார்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், “பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, மருந்துகள் விலை உயர்வு, சுங்கக்கட்டணம் உயர்வு ஆகியவற்றால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், சொத்து வரியும் உயர்த்தப்பட்டால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். மக்கள் மீது தாங்க முடியாத சுமைகளை சுமத்தக்கூடாது. சொத்துவரி உயர்வு சொத்து வைத்திருப்பவர்களை மட்டும் பாதிக்காது. வாடகை உயர்வு என்ற பெயரில் ஏழை மக்களையும் பாதிக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு நகரப்பகுதிகளில் சொத்துவரி உயர்வைத் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும். பொருளாதார சுமையிலிருந்து மக்களைக் காக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

“கொரோனா பாதிப்புக்குப் பிறகு முழுமையான இயல்புநிலை இப்போதுதான் ஏற்படத்தொடங்கி இருக்கும் நிலையில், இப்படி ஒவ்வொன்றாக மக்கள் தலையில் இடி விழுவது போல் அறிவிப்புகளை வெளியிடுவது மனசாட்சி இல்லாத செயல். எனவே, சொத்துவரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

சனி 2 ஏப் 2022