பாஜகவுக்கு எதிரான ஓரணி: டெல்லியில் முதல்வர் பேட்டி!

politics

டெல்லியில் கட்டப்பட்டுள்ள அண்ணா – கலைஞர் அறிவாலயம் இன்று(ஏப்ரல் 2) மாலை திறந்து வைக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். டெல்லி சென்ற அவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து கோரிக்கை மனுக்களைக் கொடுத்தார்.

நேற்று மதியம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். பின்னர் டெல்லியில் உள்ள அரசு பள்ளியைப் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் டெல்லியில் உள்ள இந்த மார்டன் பள்ளி எப்படி நடந்து கொண்டிருக்கிறதோ, அதேபோன்ற பள்ளிகளைத் தமிழ்நாட்டில் விரைவில் நாங்கள் உருவாக்கப் போகிறோம். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த பணிகள் முடிவுற்று பள்ளியை நாங்கள் திறக்கும் நேரத்தில் நிச்சயமாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலையும் அழைக்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்த அவர், “மத்தியில் ஆட்சியைப் பிடிக்கக் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பாஜகவை எதிர்க்கும் அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்தியாவின் பன்முகத் தன்மை, கூட்டாட்சி, ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம் சகோதரத்துவம், மாநில உரிமைகள், கல்வி உரிமைகள் ஆகியவற்றை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். நமது தனிப்பட்ட அரசியல் சிந்தனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபட வேண்டும். ஒற்றுமையே பலம் என்பதை அனைத்து தரப்பினரும் உணர வேண்டும். இந்தியாவைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

மாநில அரசியலுக்கும், தேசிய அரசியலுக்கும் வித்தியாசம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. தேசிய அரசியல் என்பது மாநில அரசியலின் கலவையாகும். எனவே இரண்டையும் பிரிக்க முடியாது.

பாஜகவை எதிர்ப்பது என்பது அந்த கட்சியின் மீதான தனிப்பட்ட வெறுப்பு அல்ல. அப்படி நினைக்க வேண்டாம். நாங்கள் பாஜகவின் கொள்கைகளைத் தான் விமர்சிக்கிறோம். தனிப்பட்ட நபர்களை அல்ல. எங்கள் விமர்சனங்கள் அனைத்தும் கொள்கை ரீதியானவை.

என்னைப் பொறுத்தவரைக் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள், பாஜகவை எதிர்க்கும் அனைத்து மாநிலக் கட்சிகளும், கைகோர்த்து பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்க வேண்டும்.

தமிழகத்தில் திமுகவுடன் இருப்பதைப்போல அகில இந்திய அளவில் மாநிலக் கட்சிகளுடன் கொள்கை ரீதியான நட்புறவைக் காங்கிரஸ் வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் ஒன்றுதிரட்டி பாஜகவை ஓரம்கட்டி உள்ளன.

திமுக கூட்டணி தேர்தல் காலத்தில் தொகுதிகளைப் பகிர்ந்து கொள்ளும் கட்சிகள் அல்ல. கொள்கை அளவில் உறவைத் தொடர்ந்து வருகிறோம். அதுவே எங்கள் வெற்றிக்கு அடித்தளம். காங்கிரஸ் கட்சியும் இத்தகைய கொள்கை ரீதியான நட்பை வளர்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

தமிழகத்துக்குப் பிரச்சாரம் செய்ய வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற அணிகளை அமைப்பதில் காங்கிரஸ் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

மத்திய அரசு தனது அதிகார வரம்பிற்குள் உள்ள அமைப்புகளை அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்துகிறது என்பது உண்மைதான். அது எல்லோருக்கும் தெரியும்” என்று கூறியுள்ளார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *