மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஏப் 2022

சுங்கக் கட்டணம் உயர்வு: அரசியல் கட்சிகள் கண்டனம்!

சுங்கக் கட்டணம் உயர்வு: அரசியல் கட்சிகள் கண்டனம்!

தமிழ்நாட்டில் வானகரம், சூரப்பட்டு, செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு சொந்தமான 27 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்த சுங்கக் கட்டண உயர்வு குறித்து அறியாத சில வாகன ஓட்டிகள், சுங்கச் சாவடி ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பல சாவடிகளில் பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில் சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

“பெட்ரோல், டீசல், சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு சுங்க கட்டணத்தை ரூ. 40 முதல் ரூ.240 வரை உயர்த்தி மக்கள் மீது மென்மேலும் சுமையை ஏற்றுவதை வன்மையாக கண்டிக்கிறேன். சுங்க கட்டண உயர்வால் அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்து பூ, பழம், காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகன உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதன் காரணமாக வாடகை வாகனங்களின் கட்டணத்தை உயர்த்தும் நிலைக்கு அதன் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை பலமடங்கு அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. உடனடியாக சுங்க கட்டண உயர்வை திரும்ப பெறுவதுடன் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காலாவதியான சுங்கச்சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த வேண்டும்” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

“பெட்ரோல், டீசல், சமையல் எரிகாற்று உருளை உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை உயர்த்தியது போதாதென்று, சுங்கச்சாவடி கட்டணத்தையும் 40% அளவுக்கு உயர்த்தியுள்ள ஒன்றிய அரசின் செயல் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்றுள்ளது. சுங்கச்சாவடி கட்டணம் மற்றும் எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களைச் சுமந்துசெல்லும் வாகனங்களின் வாடகைச்செலவு பல மடங்கு அதிகமாகும். இவை யாவும், விற்பனைச்சந்தையில் எதிரொலித்து, அத்தியாவசியப்பொருட்களின் அபரிமித விலையேற்றத்திற்கே வழிவகை செய்யும். இதனால், நடுத்தர, ஏழை மக்கள் மாதம் ஒன்றுக்கு 1,500 ரூபாய் அளவுக்குக் கூடுதலாகச் செலவிட வேண்டிய கொடிய நெருக்கடி நிலைக்கு ஆளாவார்கள். அதனால், நெடுஞ்சாலை பராமரிப்பை அரசே ஏற்று சுங்கச்சாவடி கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், “சுங்கச் சாவடியே இருக்கக் கூடாது. இந்த கட்டணத்தை அரசாங்கம்தான் கட்ட வேண்டும். மக்களுக்கு எந்த சுமையும் இருக்கக் கூடாது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக சுங்கச் சாவடிகள் உள்ளன. தமிழ்நாட்டு நெடுஞ்சாலைகளில் 90 சதவிகிதம் சுங்கச் சாவடிகள் உள்ளன. மற்ற மாநிலங்களில் 20%, 30% என்றுதான் இருக்கிறது. சட்டப்படி 60 கி.மீட்டருக்குள் ஒரு சுங்கச் சாவடிதான் இருக்க வேண்டும். ஆனால், அந்த நிலை இல்லை. தமிழ்நாட்டில் 47 சுங்கச் சாவடிகளில் 28 உடனடியாக அகற்றப்பட வேண்டும். ஏற்கனவே மக்கள் எரிபொருள் விலை உயர்வு, பொருளாதார வீழ்ச்சி போன்றவற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சுங்கக் கட்டணத்தையும் உயர்த்துவது மோசமானது. இதற்கு தேவைப்பட்டால் போராடவும் செய்வோம்” என்று கூறினார்.

-வினிதா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வெள்ளி 1 ஏப் 2022