மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஏப் 2022

பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள் சொன்னது என்ன?: முதல்வர்!

பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள் சொன்னது என்ன?: முதல்வர்!

திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் 4 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி சென்றார். இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, கட்கரி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரைச் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”இந்தியப் பிரதமரை இன்று (நேற்று) மதியம் சந்தித்தேன். என்னைச் சந்திப்பதற்காகப் பிரதமர் நேரம் ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டினுடைய முக்கிய 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் கொடுத்தேன். இந்த கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை அவருக்கு எடுத்துரைத்தேன்.

இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை தமிழர்களுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் உதவி செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும். அதைப்போல் அத்தியாவசியமான பொருள்களையும் உயிர்காக்கும் மருந்துகளையும் அவர்களுக்கு வழங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமையும், அரசியல் உரிமையும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை குறித்து வலியுறுத்தி இருக்கிறேன். கச்சத்தீவு மீட்பு குறித்தும் வலியுறுத்தி இருக்கிறேன்.

உக்ரேனில் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்களின் மருத்துவக் கல்லூரி படிப்பை இந்தியாவில் தொடர அனுமதி வழங்க வேண்டும்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது.

2022 ஜூனுக்குப் பிறகு ஜிஎஸ்டி இழப்பீட்டைத் தொடர்ந்துவழங்கிட வேண்டும், காலணி உற்பத்தியில் பிஎல்ஐ திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.

டி.டி.ஐ.எஸ் திட்டத்தில் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வலைத்தளத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும்.

சேலம் எஃகு ஆலையின் மிகை நிலம், பாதுகாப்பு தொழில் பூங்காவிற்கு வழங்கப்பட வேண்டும்.

நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகங்களைப் பட்டியல் மற்றும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

குறிப்பாகப் பிரதமரிடமும் உள்துறை அமைச்சரிடமும் நீட் தேர்வு குறித்து அழுத்தமாகப் பதிவு செய்தேன். நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்கும் சட்ட முன்வடிவை தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி இரண்டாவது முறை ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். இதுவரையில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலதாமதம் செய்து கொண்டிருக்கிறார். இந்த சட்ட முன்வடிவுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழகத்திற்கு வர வேண்டிய வெள்ள நிவாரண நிதி குறித்தும் வலியுறுத்தினேன். காவல் மற்றும் தீயணைப்பு துறையை நவீனப்படுத்துவது குறித்தும் நிதி ஒதுக்கீடும் செய்ய வலியுறுத்தினேன்.

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தமிழகத்தில் அமைய இருக்கக்கடிய புதிய விமான நிலையங்கள் அமைத்திடத் தேவைப்படக்கூடிய பாதுகாப்பு துறைவசம் உள்ள நிலங்களை ஒதுக்கி தர வேண்டும் என்று வலியுறுத்தினேன். தமிழகத்தில் டிஆர்டிஓ ஆய்வுக் கூடம் அமைக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசு அமைக்கத் திட்டமிட்டுள்ள ஏவியேஷன் டெக்னாலஜி ஹப் ஒன்றைக் கோவையில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரியிடம், சென்னை- கன்னியாகுமரி இடையே தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழி சாலையாக மாற்ற வேண்டும். சென்னை - மதுரவாயல் உயர்மட்ட சாலையை ஸ்ரீபெரும்புதூர் வரை நீட்டிக்கவும் கோரிக்கை வைத்தேன்.

தாம்பரம் - செங்கல்பட்டு வரை உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும். மாநிலத்தில் நிலுவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்தை விரைவில் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் உடனான இந்த சந்திப்பு மனநிறைவாக இருந்தது.

இந்த உரையாடலின்போது நிதின் கட்கரி தமிழகத்தின் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைத் துறையில் அதிக அளவிலான திட்டங்கள் செயல்படுத்த இருப்பதாகத் தெரிவித்தார்.

அதுபோன்று அமைச்சர் ராஜ்நாத் சிங் பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளைத் துவங்குவதற்குத் தமிழ்நாடுதான் உகந்த மாநிலமாக திகழ்வதாகப் பாராட்டினார்.

அதுமட்டுமின்றி ஏப்ரல் 1ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகம் மற்றும் உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களையும் சந்திக்க இருக்கிறேன். தமிழகத்துக்கான கோரிக்கைகளை அவர்களிடமும் எடுத்து வைப்பேன் என்று கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் முதல்வரிடம் கேள்வி எழுப்பினர்.

டெல்லியில் நேற்று முதல்வரைச் சந்திக்க வரும்போது ஏழு இடங்களில் பத்திரிகையாளர்களைத் தமிழக போலீசார் அனுமதிக்கவில்லை, டார்ச்சர் செய்தனர் என்று ஒரு செய்தியாளர் கூறினார். இதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் இப்படி நடந்து கொண்டால் அது தவறு. நிச்சயமாக விசாரிக்கப்படும். நானும் விளக்கத்தைக் கேட்பேன் என்று தெரிவித்தார்.

மேலும், டெல்லியில் 7 தமிழ் பள்ளிக்கூடங்கள் உள்ளன. அந்தப் பள்ளிக் கூடங்களில் படிக்கின்ற மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாக இருக்கிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் பள்ளிக்கூடத்திற்கு அம்மா பிளாக் கட்டுவதற்குப் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் பல விதிமீறல்கள் நடந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து விசாரணை செய்வீர்களா என்ற கேள்விக்கு, “நாளைய தினம் டெல்லியில் உள்ள மாடல் பள்ளிக்கூடத்தைப் பார்வையிட உள்ளேன். டெல்லி முதலமைச்சர் அவர்களும் மகிழ்ச்சியுடன் தானும் வருவதாகத் தெரிவித்துள்ளார்” என்றார்.

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதா என்ற கேள்விக்கு, “நிச்சயமாக... ஏற்கனவே இது குறித்து சட்ட ரீதியாக நாங்கள் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறோம். அதற்கான முயற்சிகளை எடுப்பதற்காகத் தான் பிரதமரிடத்திலும் வலியுறுத்தியுள்ளேன்” என்றார்.

இலங்கைத் தமிழர்கள் அதிகமாக வந்து இருக்கிறார்கள் அவர்களை அகதிகளாகப் பதிவு செய்வதா சட்டவிரோதமாக வந்ததாகப் பதிவு செய்வதா என்று குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக என்ன பதில் கொடுத்துள்ளார்கள். எந்த மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, “இன்றைய கோரிக்கைகளில் இதுவும் அடங்கியுள்ளது. அதனைக் குறித்துப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்கள். ஏற்கனவே இலங்கையிலிருந்து வருபவர்களுக்கு அகதிகள் என்று பெயர் சூட்டப்பட்டு இருந்ததை நாங்கள் மாற்றிப் புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று அழைத்து அவர்களுக்கு நிதி உதவி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறோம்” என்றார்.

மேலும், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருந்தார். அவரைப் பார்க்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அது மட்டுமல்ல நான் எப்போது டெல்லி வந்தாலும் அவரை சந்திக்காமலிருந்ததில்லை. வரும் 2ஆம் தேதி கட்சி அலுவலக திறப்பு விழாவுக்குச் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள் என்று கூறினார்.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வெள்ளி 1 ஏப் 2022