மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஏப் 2022

சிறப்புக் கட்டுரை: சீனாவுடன் சமரசமாகிறதா இந்தியா? பகுதி 1

சிறப்புக் கட்டுரை: சீனாவுடன் சமரசமாகிறதா இந்தியா? பகுதி 1

பாஸ்கர் செல்வராஜ்

உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்தது கண்ட ஆச்சரியம் அடங்குவதற்குள் ரஷ்யாவுடன் ரூபாயில் வர்த்தகம் அதுவும் சீன நாணய மதிப்பை ஆதாரப் புள்ளியாகக் கொண்டு நடத்துவது என்ற செய்திகள் புருவத்தை உயரச் செய்கின்றன. இப்போது அதிரடியாக சீன வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்திருக்கிறார். அடுத்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகிறார். அதையடுத்து இந்திய அமைச்சர் சீனா செல்வார் என்கிறார்கள். இரான், வெனிசுவேலா நாடுகளை ஒடுக்கி தனிமைப்படுத்தும் அரசியலிலும், கொரோனா பெருந்தொற்றின்போது சீனாவைத் தனிமைப்படுத்தும் அமெரிக்க அரசியலிலும் அந்த நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியும், சீன நிறுவனங்களை வெளியேற்றியும் அமெரிக்கா காலால் இட்ட வேலைகளை கையால் செய்த பாஜக அரசா இது என நம்மை ஆச்சரியம் கொள்ள வைக்கிறது. இந்த மனமாற்றத்துக்கான காரணம் என்ன? இது திடீரென ஏற்பட்ட மாற்றமா? என்று சற்று நெருங்கிப் பார்ப்போம்.

அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப் போர் நடைபெற்று வந்தபோது ஏற்பட்ட கொரோனா தொற்றின்போது இருந்த ட்ரம்ப் நிர்வாகம் சீனாவை தனிமைப்படுத்தி ஒரு பனிப்போரை ஒத்த சூழலை ஏற்படுத்த முயற்சி செய்தது. அதில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளை பங்குதாரர்களாக இணைத்துக் கொண்டது. அந்த தனிமைப்படுத்தலில் பங்கேற்ற இந்தியா எல்லை பிரச்சினையை காரணமாகக் காட்டி சீன முதலீடுகளையும், நிறுவனங்களையும் வெளியேற்றியது. அமெரிக்க முதலீடுகளும், நிறுவனங்களும் இந்தியாவை ஆக்கிரமித்தன. அமெரிக்காவுடன் இந்தியா ராணுவ ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது. ரஷ்ய ஆயுத இறக்குமதியைக் குறைத்தது. இவை எல்லாம் எதற்காக? சீனாவில் இருக்கும் நிறுவனங்கள் இங்கே இடம்பெயரும்; அது சீனாவைப் போன்று இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றி வலுவான ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றும்; அதில் இரண்டு ‘அ’க்களும் பலனடையலாம் என்ற பேராவல்.

வேளாண்மை நில திருத்தச் சட்டம், தொழிலாளர் மற்றும் கல்வி திருத்தச் சட்டம் என அதிரடி அறிவிப்புகளால் நம்மை அதிரச் செய்தது ஒன்றிய பாஜக அரசு. எதிர்பார்ப்புக்கு மாறாக, கொரோனாவை சீனா வென்றது. அமெரிக்காவும் இந்தியாவும் கொரோனாவிடமும், ட்ரம்ப் உலகமய தரப்பிடமும் தோல்வியைத் தழுவியது யாவரும் அறிந்தது. அப்போதே இந்தியா விழித்திருக்க வேண்டும். ஆனால், பின்பு பதவியேற்ற பைடன் நிர்வாகம் தடுப்பூசியை உற்பத்தி செய்து ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி, அடுத்த பசுமை ஆற்றலுக்கான (Green Energy) மாற்றத்தில் இந்தியாவை முக்கிய மையமாக மாற வாய்ப்பு தருவதாக ஆசை காட்டியது. அம்பானியும், அதானியும் அதற்கான உற்பத்தியில் இறங்கி பல பில்லியன் டாலர் முதலீடுகள் செய்யப் போவதாக அறிவித்தார்கள். இங்கிலாந்தின் தடுப்பூசி தொழில்நுட்பம், மேற்கின் மூலப்பொருட்கள், இந்தியாவில் உற்பத்தி, ஆசிய - ஆப்பிரிக்க சந்தை என்பது அவர்களின் ஏற்பாடு. உள்ளூர் தடுப்பூசியையும் சந்தைப்படுத்த அனுமதி, அதற்கான மேற்கின் மூலப்பொருட்கள், மேற்கைப் போலவே உள்ளூர் சந்தை உள்ளூர் நிறுவனங்களுக்கு என்பது இந்தியாவின் கோரிக்கை.

தரகனாக இருக்கலாம்; சொந்த காலில் நிற்க ஆசைப்படக் கூடாது என்று சொல்லாமல் சொன்னார்கள். அமெரிக்கா சென்று பலநாள் தங்கி மூலப்பொருளை தருமாறு பேசிப் பார்த்தார் நமது “சாணக்கிய” ஜெய்சங்கர். கதைக்கு ஆகவில்லை. இறுதியில் சண்டைக்காரன் சீனாவின் காலில் ரஷ்யா வழியாக பிரிக்ஸ் கூட்டத்தில் விழுந்து காரியம் சாதித்தது இந்தியா. இந்திய சந்தையை அமெரிக்க தடுப்பூசி நிறுவனங்களுக்குத் திறக்க வேண்டும் என்றார்கள். முடியாது என்று அடம்பிடித்தது இந்தியா. தடுப்பூசி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் ப்ளிங்கன் வர சிலநாட்களுக்கு முன்பு ஏற்கனவே வெளியான பெகசஸ் உளவு விவகாரம் கூடுதல் விவரங்களுடன் அமெரிக்க பத்திரிகையின் வாயிலாக ஊதிப் பெருக்கப்பட்டது. இந்தியாவின் எதிர்க்கட்சிகள் இதைக் கையில் எடுத்து அரசுக்கு நெருக்கடி கொடுத்தன. இறுதியில் மேற்கின் தடுப்பூசியை இந்தியாவில் சோதனை செய்யாமல் அனுமதிப்பதாக அப்போதைக்கு ஒன்றியம் அறிவித்து சமாளித்தது.

தடுப்பூசி ஏற்றுமதியில் ஏமாற்றத்தைச் சந்தித்து, சந்தை விவகாரத்தில் (பெகசஸ்) உள்குத்தையும் வாங்கிக் கொண்டு ஒன்றியம் அமைதியாக இருந்தது. எல்லாம் எதற்காக? எப்படியும் சூரிய மின்னாற்றல் தொழில்நுட்பமும், அதற்கான முதலீடும் இரண்டு “அ”வுக்கும் கிடைத்துவிடும் என்பதற்காக. இந்தியாவை மின்னணு பொருளாதாரமாக மாற்ற கிளம்பி பண மதிப்பிழப்பையும் ஒரே வரியையும் (ஜிஎஸ்டி) கொண்டுவந்து ஜியோவை அந்த மாற்றத்தின் மையமாக வைத்ததிலும் சிக்கல் இருந்து வந்தது. இணையப் பயன்பாடும் இணைய வர்த்தகமும் முழுமையாக வளராத நிலையில் கடைகளிலும் இணையத்திலும் இணைந்து சில்லறை வர்த்தகம் செய்வதுதான் லாபகரமானது. மேல்மட்ட சில்லறை விற்பனையில் பெரும் சந்தையை வைத்திருக்கும் ப்யூச்சர் குழுமத்தை யார் கைப்பற்றுவது என்பதில் ஜியோ, அமேசான் இடையே போட்டி எழுந்தது. இதை யாருக்கு வாங்க உரிமை இருக்கிறது என இருவரும் நீதிமன்றத்தில் மோதிக்கொண்டிருந்தார்கள்.

இந்திய ஜியோவின் வழியாக அமெரிக்க தொழில்நுட்பம் (கூகுள், முகநூல்), முதலீடு மின்னணு பொருளாதார மாற்றம் என்பது இந்தியாவின் தெரிவு (ஆத்ம நிர்பார்). அனைத்திலும் அமெரிக்கா அதற்கு துணையாக இந்திய தரகர்கள் என்பது அமெரிக்க நிலைப்பாடு. ஜியோவுக்காக சட்டத்தை வளைப்பதில் பிரச்சினையில்லை என்றாலும் அது அமெரிக்காவின் எதிர்ப்பை எதிர்கொள்ளும் என்பதால் ஒன்றியம் இழுத்துக்கொண்டிருந்தது. அக்டோபரில் நடந்த காலநிலை மாற்றத்துக்கான கூட்டத்தின்போது மாற்று எரிபொருள் உற்பத்திக்கான தொழில்நுட்பம் மற்றும் மூலதனத்தை வளர்ந்த நாடுகள் தர வேண்டும் என்றது இந்தியா. இல்லை என்று நேரடியாக சொல்லாமல் வெப்பநிலை அதிகரிப்புக்கு சீனா, இந்தியா போன்ற ஆசிய நாடுகள்தான் காரணம் என குற்றவாளியாக்கி வாயைமூட வைத்தது மேற்கு. முத்தாய்ப்பாக நவம்பர் பைடன் - ஷி மெய்நிகர் இணையச் சந்திப்பின்போது அமெரிக்கா...

1. சீனாவுடன் புதிய பனிப்போர்;

2. சீனப் பொருளாதார கட்டமைப்பை மாற்ற முயற்சி செய்தல்;

3. சீனாவுக்கு எதிரான ராணுவக் கூட்டை ஏற்படுத்துதல்;

4. தைவான் தனிநாட்டு கோரிக்கைக்கு ஆதரவு ஆகியவற்றை செய்யாது என்று உறுதி அளித்தல்.

இதோடு காலநிலை மாற்றத்தில் நாம் இணைந்து செயல்படலாம் என்றும் கூறினார்.

இதுவரையிலும் சூரிய மின்னாற்றல் வாய்ப்புக்கு இலவுகாத்த கிளியாக காத்திருந்த இந்தியாவின் தலையில் இது இடியாக இறங்கியது. இதுவரையிலான எல்லா நம்பிக்கைகளும் உடைந்து நொறுங்கியது. பண மதிப்பிழப்பில் தொடங்கி மின்னணு பொருளாதார மாற்ற நடவடிக்கைகளாலும், கொரோனாவினாலும் விலைவாசி உயர்வு, வேலையின்மை பெருகிக் கொண்டிருந்தது. விவசாயிகள் போராட்டத்தால் அரசியல் அடித்தளம் ஆட்டம் கண்டு வந்தது. அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டிவிகிதத்தை உயர்த்தினால் இந்திய பங்குச்சந்தை வீழ்ந்து முதலீடுகள் மேலும் குறைந்து பிரச்சினையை தீவிரமாக்கும். 2013இல் இதே சூழலை எதிர்கொண்ட காங்கிரஸ் பின்பு இவர்களிடம் ஆட்சியை இழந்ததைப் போல இவர்களும் ஆட்சியை இழப்பது தவிர்க்க இயலாததாகிவிடும். விழித்துக் கொண்ட பாஜக அரசு உடனடியாக விவசாய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற்றது. தொழிலாளர் திருத்தச் சட்டத்தைக் கிடப்பில் போட்டது. ஒன்றிய அரசின் போக்கு மாறியது.

இதன்பிறகு ஒன்றியம் என்ன செய்தது?

நாளை காலை 7 மணி பதிப்பில் பார்க்கலாம்.

கட்டுரையாளர் குறிப்பு

பாஸ்கர் செல்வராஜ், தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.

.

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 1 ஏப் 2022