மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 31 மா 2022

‘ஏமாற்றம்தான்’முடிவல்ல : அன்புமணி

‘ஏமாற்றம்தான்’முடிவல்ல : அன்புமணி

வன்னியர்களுக்கான 10.5 உள் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு ஆணையம் ஒன்றை அமைத்து புள்ளிவிபரங்களை திரட்டி மீண்டும் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வன்னியர்களுக்கான 10.5 உள் இடஒதுக்கீடு செல்லாது என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் பாமக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இன்று(மார்ச் 31) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், “சாதியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீட்டை முடிவு செய்ய முடியாது. வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டம் அரசியல் சாசனத்தின் 14,16 பிரிவுகளுக்கு விரோதமானது. மேலும் வன்னியர்களை மட்டும் தனி பிரிவாக கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், உயர் நீதிமன்ற தீர்ப்பு செல்லும் என்று உத்தரவிட்டனர். மேலும் தமிழக அரசு, பாமக உள்ளிட்டோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளித்துள்ளது. இருப்பினும், இது முடிவு கிடையாது, தொடர்ச்சிதான். தமிழக அரசு உடனடியாக ஒரு ஆணையத்தை அமைத்து புள்ளிவிவரங்களை சேகரித்து உடனடியாக சட்டமன்றத்தில் சட்டத்தை கொண்டு வந்து, மீண்டும் இந்த ஒதுக்கீட்டை அவர்கள் எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. இது செயல்படுத்தக் கூடியதுதான். ஏனெனில், அதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

விரைவில் தமிழக அரசு புள்ளிவிவரங்களை சேகரித்து, மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரும் என்று நம்புகிறோம். 42 ஆண்டு காலமாக மருத்துவர் ஐயா போராடி, லட்சக்கணக்கான மக்கள் சிறைக்கு சென்று, நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்து, இத்தனை பேரின் தியாகத்தால் கிடைத்ததுதான் இந்த இட ஒதுக்கீடு. இது ஒரே நாளில் கிடைத்தது இல்லை. எங்களுடைய போராட்டம் தொடரும். வாழ்க்கையே போராட்டம்தான்.

அருந்ததியர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோரின் இட ஒதுக்கீட்டுக்கு எந்த புள்ளிவிவரமும் கிடையாது. ஆனால், வன்னியர்களுக்கு மட்டும் புள்ளிவிவரங்கள் கேட்கின்றனர் , அது ஏன் என்று தெரியவில்லை. போதுமான அளவு தரவுகள் இல்லாததே தீர்ப்பு சாதகமாக இல்லாததற்கு காரணம்.

வன்னியர் உள் ஒதுக்கீட்டு சட்டம் செல்லாது என்று உயர் நீதிமன்றம் கூறிய 7 காரணங்களில் 6 காரணத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஆணையம் ஒன்றை அமைத்து புள்ளிவிவரங்களை திரட்டி மீண்டும் சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதுதான் கோரிக்கை. இந்த இட ஒதுக்கீட்டின்படி ஏற்கனவே கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சேர்க்கப்பட்டவர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு சென்றவுடன், இதுகுறித்து மருத்துவருடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.

-வினிதா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வியாழன் 31 மா 2022