மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 மா 2022

அரியலூர் மாவட்டத்துக்கு அங்கீகாரம்: கொண்டாடப்படும் சிவசங்கர் நியமனம்!

அரியலூர் மாவட்டத்துக்கு அங்கீகாரம்: கொண்டாடப்படும் சிவசங்கர் நியமனம்!

ஆட்சிப் பொறுப்பேற்ற 10 மாதங்கள் ஆன நிலையில் முதன்முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அந்தத் துறையிலிருந்து மாற்றப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இதுவரை பணியாற்றி வந்த சிவசங்கர் இனி போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி ஸ்வீட் கொடுக்கும் பணிகளில் முறைகேடு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருமாவளவனைச் சந்திக்கும்போது அவருக்கு நாற்காலி போடாமல் அவமதித்ததாக சர்ச்சை, போக்குவரத்துத் துறை துணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு செய்து கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றியது என்ற சர்ச்சைகளைத் தொடர்ந்து...

முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் என்ற அரசு அதிகாரியே, தன்னை சாதிப் பெயர் சொல்லித் திட்டியதாக பகிரங்கமான புகார். இப்படியான தொடர் சர்ச்சைகளால், மிக முக்கியமானதொரு துறையான போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனை அந்தத் துறையில் இருந்து நீக்கி பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக நியமனம் செய்துள்ளார் முதலமைச்சர்.

மார்ச் 29ஆம் தேதி மாலை அரியலூரில் திராவிட இயக்க பயிலரங்கம் நடத்திக்கொண்டிருந்த அமைச்சர் சிவசங்கர் அதில் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் அவரது துறை மாற்றப்பட்டு அவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டது தெரியவந்தது. அந்த அரங்கத்தில் இருந்தே கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர் அரியலூர் திமுகவினர்.

அரியலூர் நகரம் மட்டுமல்ல மாவட்டம் முழுவதுமே வெடிகளை வெடித்து இனிப்புகள் கொடுத்து அதிரடியாக நேற்று கொண்டாடியிருக்கிறார்கள்.

சென்னையிலிருந்து வந்த அழைப்பின் பேரில் அமைச்சர் சிவசங்கர் நேற்று இரவே சென்னைக்குப் புறப்பட்டார்.

அரியலூர் மாவட்டத்தின் வரலாற்றில் போக்குவரத்துத் துறை என்கிற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பதவி கொடுக்கப்படுவது இதுவே முதல்முறை. இந்த அடிப்படையில் அரியலூர் திமுகவினர் மட்டுமல்ல; மாவட்ட பொது மக்களும் திருப்தியாகவே உள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பார்வையாளரும் சமூக ஆர்வலருமான மணியன் கலியமூர்த்தி இது தொடர்பாக நம்மிடம் பேசினார்.

"சுதந்திர இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தபோதும் அரியலூர் மாவட்டச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிய அங்கீகாரமும் முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை என்பதுதான் இந்த மாவட்டத்து மக்களின் நீண்டநாள் குறை.

மிகவும் பின்தங்கிய மாவட்டமான அரியலூரில் மக்கள் பிரதிநிதிகளை அமைச்சர்கள் ஆக்குவதன் மூலம் இம்மாவட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்த முடியும் என்றும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும் என்றும் நீண்ட ஆண்டுகளாக இந்த மாவட்டம் காத்திருந்தது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்துக்குப் பிரச்சாரத்துக்கு வந்தபோது, இதுவரை இல்லாத அளவு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை வரும் அரசாங்கத்தில் அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று திமுகவினரே கோரிக்கை மனு கொடுத்தார்கள்.

தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு சிவசங்கருக்கு அமைச்சர் பதவி அளித்தார்கள். அதுவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை. இத்தனை ஆண்டுகள் காத்திருந்தமைக்கு அரியலூர் மாவட்டத்துக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை என்பது அப்படி ஒன்றும் பெரிய துறை இல்லை. ஆனாலும் தன் துறையைத் தாண்டி அமைச்சர் என்ற அந்தஸ்து மூலம் அரியலூருக்கு பல திட்டங்களை கொண்டு வர முனைந்தார் சிவசங்கர்.

இந்த நிலையில் எங்கள் அரியலூர் மாவட்டத்துக்கு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக போக்குவரத்துத் துறை அமைச்சரை அளித்திருக்கும் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம். அரியலூர் மாவட்டத்துக்கு வாராது வந்த மாமணி போல் கிடைத்த கவுரவம் இது" என்கிறார் மணியன் கலியமூர்த்தி.

போக்குவரத்துத் துறையை திறம்பட நடத்தி அரியலூர் மாவட்டத்தையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய சவால் மிகுந்த பொறுப்பு எஸ்.எஸ்.சிவசங்கரின் தோள்களில் தொற்றிக் கொண்டுள்ளது.

வேந்தன்

.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

புதன் 30 மா 2022