காரில் கட்டு கட்டாக பணம்: கைதான துணை ஆட்சியர்!


திருச்சியிலிருந்து சென்னைக்கு காரில் கணக்கில் வராத 40 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்ற ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி ஆதிதிராவிடர நலத் துறை துணை ஆட்சியராக பணியாற்றி வருபவர் சரவணக்குமார். இவர் தன்னுடைய துறையில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக கையூட்டு பெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த சூழலில் இன்று அவர் திருச்சியிலிருந்து சென்னைக்கு தனது ஓட்டுநருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது காரை மதியம் 2.30 மணியளவில் கள்ளக்குறிச்சி அருகே ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீசார் மடக்கி நிறுத்தினர். அப்போது காரில் இருந்த ஒரு பையில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருப்பது தெரியவந்தது.
இந்த சூழலில் அந்த இடத்திலேயே துணை ஆட்சியர் சரவணகுமார் மற்றும் கார் ஓட்டுநர் மணி ஆகிய இருவரிடமும் இந்தப் பணம் எப்படி வந்தது எதற்காக எடுத்துச் செல்லப்படுகிறது உரிய ஆவணங்கள் இருக்கிறதா என போலீசார் விசாரித்தனர்.
இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த நிலையில் இருவரையும் விழுப்புரம் ஆட்சியரகத்துக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில், “தன்னுடைய சஸ்பெண்ட் ஆர்டரை ரத்து செய்வதற்காக ரூ.40 லட்சம் பணத்துடன் ஆதிதிராவிடர் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தேன். அமைச்சர் ஒருவருக்கு பணத்தை கொடுப்பதற்காக ஆணையர் அலுவலகத்தில் பொறியாளர் ஒருவரை பார்க்க சென்றேன்” என்று கூறியுள்ளார்.
இவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பொறியாளர் வீட்டிலும் தற்போது ரெய்டு நடந்து வருவதாகவும், இவரால் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் இவர்குறித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ரூபாய் 40 லட்சம் பணத்தையும் அவர்களது சொகுசு காரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
-வினிதா