மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 மா 2022

முதல்வருக்கு திறந்த மடல்!

முதல்வருக்கு திறந்த மடல்!

எஸ்.வி.ராஜதுரை

கோத்தகிரி 30.03.2022.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இரண்டாவது திறந்த மடல்.

நிர்வாகச் சீர்கேடுகளைப் போக்கவும், லஞ்சம் ஊழல் ஆகியவற்றைத் தடுக்கவும், குற்றச் செயல்கள் புரிபவர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது அவர்களுக்கு வேண்டியவர்களாகவோ இருந்தாலும் சட்டத்தின் பாரபட்சமற்ற நடவடிக்கை சம்பந்தப்பட்டவர்கள் மீதும் பாயும் என்று தாங்கள் பல முறை சட்டமன்றத்திலும் பொதுவெளிகளிலும் பேசி வந்ததையும் அவற்றைச் செயல்படுத்தி வந்துள்ளதையும் நாடே அறியும். அதேபோல, சட்டப்படியான நியாயம் வழங்குவதென்றால் ஏழைகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று தாங்கள் தெளிவுபடுத்தியுள்ளதையும் கோடிக்கணக்கான தமிழர்களில் ஒருவனும் குறைந்தபட்சம் 1987ஆம் ஆண்டு முதல் தங்கள் கட்சிக்கே என் குடும்பத்தாருடன் சேர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்து வந்தவர்களில் ஒருவன் என்கின்ற முறையிலும் நானும் நன்கு அறிவேன்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய ‘ ஏழை பங்காளன் எமிலி ஜோலா’ என்னும் குறுநூலில் காணப்படும் உணர்வுக்கு ஏற்ப, நானும் கோத்தகிரி வட்டம், அரவேனு கிராமத்தைச் சேர்ந்த பங்களாவில் கதவு எண் 9/291 இல் வசிக்கும் என்.ராஜு என்னும் ஏழையின் சார்பாக தங்களுக்குக் கடந்த 31.10.2021 அன்று ஒரு திறந்த மடல் எழுதத் துணிந்தேன்.

அந்தத் திறந்த மடலில் நான் தங்களிடம் மிக சாதாரண கோரிக்கையொன்றை வைத்திருந்தேன்.

அதாவது, கோத்தகிரி தாலுக்கா, கோத்தகிரி கிராமம் 2- சர்வே எண் 2226/1 நிலத்தில் தனது தந்தை வழி பாட்டனாரின் வாரிசு என்ற முறையில் பாகப் பிரிவினை கேட்டு குன்னூர் சார் நீதிமன்றத்தில் என். ராஜு 2017இல் மனுதாரராக இருந்து தொடுத்த வழக்கில் ( எண் OS 150/2017) எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள காஜா ரஷீது, முனாப் முதலிய 18 பேர் இதுவரை ஒருமுறைகூட விசாரணைக்கு வரவில்லை. ஆனால் அவர்களுக்கு அந்த நீதிமன்றம் தொடர்ந்து வாய்தா கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

ஆனால், இந்த வழக்கு விசாரணையில் இருந்து கொண்டிருக்கும்போதே மேற்சொன்ன காஜா ரஷீது, முனாப் ஆகியோர், என்.ராஜு பாகப் பிரிவினை கேட்டுள்ள சர்வே எண் 2226/1இல் பெட்ரோல் பங்க் கட்டி வருவதால், மேற்சொன்ன வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை, அவர்கள் இருவரும் மேற்சொன்ன சர்வே எண்ணில் பெட்ரோல் பங்க் கட்டுவது உள்ளிட்ட எந்த மாற்றமும் செய்வதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று உதகமண்டலத்திலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் CMA 1/2021 என்ற எண்ணுள்ள மனுவை என்.ராஜு தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கு விசாரணைக்கும் மேற்சொன்ன எதிர் மனுதாரர்கள் ஒருவர்கூட இதுவரை வந்ததில்லை என்றாலும், மாவட்ட நீதிமன்றமும் அவர்களுக்குத் தொடர்ந்து வாய்தா கொடுத்துக் கொண்டே உள்ளது.

இதற்கிடையில் குன்னூர் சார் நீதிமன்றத்தில் என்.ராஜு தொடுத்துள்ள பாகப் பிரிவினை வழக்கு நடந்து வருகிறது என்ற உண்மையை மேற்சொன்ன எதிர் மனுதாரர்கள் கோத்தகிரி உரிமையியல் நீதிமன்றத்துக்குச் சொல்லாமல் மூடி மறைத்து ராஜு மீது வழக்கு எண் 4/2020ஐ 11.2.2020இல் தாக்கல் செய்தனர். அந்த மனு அன்றே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பாகப் பிரிவினை வழக்கிலுள்ள மேற்படி சர்வே எண்ணில் ராஜு நுழைந்து பெட்ரோல் பங்க் கட்டுவதற்குக் குறுக்கீடுகள் செய்யக்கூடாது என்ற உத்தரவை அன்றே பெற்றுக் கொண்டனர். இந்த விவரம் தெரிந்த உடனேயே என். ராஜு கோத்தகிரி உரிமையியல் நீதிமன்றத்தில் 2/2020 ஆம் எண்ணுள்ள இடை மனுவைத் தாக்கல் செய்து, அந்த உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மேற்சொன்ன தீர்ப்பை ரத்து செய்யும் புதிய உத்தரவைப் பிறப்பிக்கச் செய்தார். அந்த உரிமையியல் நீதிமன்றத்தில் உண்மையை மறைத்து தங்களுக்கு சார்பான தீர்ப்பைப் பெற்றுக் கொண்ட மனுதாரர்களான காஜா ரஷீது, முனாப் ஆகியோரிடமிருந்து, குன்னூர் சார் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் இறுதி உத்தரவு வரும் வரை அவர்கள் மேற்சொன்ன சர்வே எண்ணில் உள்ள கட்டடத்தில் மாற்றம் செய்யவோ, பெட்ரோல் பங்க் கட்டவோ மாட்டோம் என்று எழுத்துபூர்வமான உறுதி மொழியை கோத்தகிரி உரிமையியல் நீதிமன்றத்திடம் சமர்ப்பித்தனர்.

ஆனால், அந்த எழுத்துபூர்வமான உறுதிமொழியை மீறி, மேற்சொன்ன சர்வே எண்ணில் பெட்ரோல் பங்க் கட்டும் வேலை துரிதமாக நடைபெற்று வந்து, இப்போது திறக்கப்படும் நிலைக்கு வந்துள்ளது. அந்தக் கட்டடம் கட்டும் வேலை மும்முரமாக நடைபெறுவதை அவ்வப்போது புகைப்படச் சான்றுகளுடன் என். ராஜு கோத்தகிரி உரிமையில் நீதிமன்றத்துக்குத் தெரிவித்து வந்ததுடன், காஜா ரஷீது, முனாப் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் (எண்.9/2021) தொடுத்துள்ளார். ஆனால், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கும் மேற்சொன்ன இருவரும் இதுவரை வரவில்லை என்பதோடு அவர்களுக்கு இந்த வழக்கிலும் வாய்தா கொடுக்கப்பட்ட வந்த பிறகு, கடைசி வாய்தா 04.04.2022க்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அன்றும் மேற்சொன்ன இருவரும் விசாரணைக்கு வரவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தன் தீர்ப்பை வழங்குவதாக உரிமையியல் நீதிமன்ற நீதிபதி 27.3.2022 அன்று நீதிமன்ற விவகாரங்கள் நடக்கும்போதே கூறினார்.

மேற்சொன்ன காஜா ரஷீது , முனாப் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளனர் என்பதற்கான புகைப்படச் சான்றுகள் கோத்தகிரி உரிமையியல் நீதிமன்ற நீதிபதியிடம் பலமுறை வழங்கப்பட்ட போதிலும், மேற்சொன்ன நீதிபதி எந்த உத்தரவும் வழங்காமல் இருப்பது என்.ராஜுவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதுடன், வக்கீல் கட்டணம் முதலிய அவரது சக்திக்கு மீறிய செலவைச் செய்ய வைத்து அவரை பெரும் கடனாளியாக ஆக்கியுள்ளது.

இதற்கிடையில்தான், மாண்புமிகு தமிழக முதலமைச்சராகிய தங்களுக்கு 31.10.2021 அன்று நான் எழுதி ‘மின்னம்பலம்’ டிஜிட்டல் இதழில் வெளிவந்த திறந்த மடலில், என்.ராஜுவுக்கு எவ்வித அறிவிக்கையும் அனுப்பாமலும் அவரிடம் எவ்வித விசாரணையும் செய்யாமலும் சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் மேற்சொன்ன சர்வே எண்ணிலுள்ள பட்டா, சிட்டா ஆகியவற்றிலிருந்து அவருடைய பெயரை சட்டவிரோதமாக நீக்கியுள்ளதைத் தெரிவித்திருந்தேன்.

இந்த விஷயம் கடந்த 28.12.2021 அன்று நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆ.இராசா அவர்களின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டு, அவர் என். ராஜுவை அழைத்து விவரங்களைக் கேட்டறிந்து நீலகிரி மாவட்டக் காவல் துறைத் துணைக் கண்காணிப்பாளர், குன்னூர் கோட்டாட்சியர் ஆகியோரை வரவழைத்து என். ராஜு அங்கு இருக்கும்போதே தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு என்.ராஜு தரப்பில் நியாயம் இருக்குமானால், உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு, சட்டவிரோதமாக மேற்சொன்ன சர்வே எண்ணிலுள்ள பட்டாவிலிருந்தும் சிட்டாவிலிருந்தும் நீக்கப்பட்ட அவரது பெயரை உடனடியாக மீண்டும் சேர்க்கும்படி அறிவுரை கூறினார்.

அதன்படி, குன்னூர் கோட்டாட்சியரும் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளரும் என். ராஜுவைத் தங்கள் அலுவலகத்துக்கு அழைத்து தனித்தனியாக விசாரணை செய்தனர். அவர்களிடம் என். ராஜு தன்னிடமுள்ள ஆவணங்களின் நகல்கள் அனைத்தையும் சமர்ப்பித்துள்ளார். என்.ராஜுவின் எதிர் மனுதாரர்களால் முறையான எந்த ஆவணங்களையும் மேற்சொன்ன அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க முடியவில்லை. எனினும் என்.ராஜுவின் பெயரை இன்றுவரை (30.03.2022) வரை கோட்டாட்சியரோ அவருக்குக் கீழ் பணியாற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளோ, மேற்சொன்ன பட்டாவிலும் சிட்டாவிலும் மீண்டும் முறைப்படி சேர்த்துவிட்டதாகக் கூறும் எழுத்துபூர்வமான ஆவணம் ஏதொன்றையும் வழங்கவில்லை.

வருவாய்த் துறை அதிகாரிகளிடம் இது பற்றி என் ராஜு கேட்கும் ஒவ்வொரு முறையும் அவரது வழக்கு விசாரணையில் இருப்பதால், நீக்கப்பட்ட அவரது பெயரை மேற்சொன்ன பட்டாவிலும் சிட்டாவிலும் சேர்க்க முடியவில்லை என்ற பதிலைத்தான் அவர்களிடமிருந்து பெற முடிகிறது.

சட்டவிரோதமாக என் ராஜுவின் பெயரை பட்டாவிலிருந்தும் சிட்டாவிலிருந்தும் வருவாய்த் துறை அதிகாரிகள் நீக்கியதற்கும் மேற்சொன்ன மூன்று வழக்குகளுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. ஆனால், வருவாய்த் துறை அதிகாரிகள் இதைச் செய்யாமலிருப்பதற்கு என்ன காரணம் என்பது என் சிற்றறிவுக்குப் புலப்படவில்லை. மேற்சொன்ன மூன்று நீதிமன்றங்களிலும் என்.ராஜுவுக்கு மேற்சொன்ன சர்வே எண்ணில் உள்ள சொத்துக்கு எவ்வித பாத்யதையும் இல்லை என்று காட்டி அவரது வழக்கைத் தள்ளுபடி செய்வதற்கான முயற்சியாகவே 2015 முதல் மேற்சொன்ன பட்டாவிலும் சிட்டாவிலும் இருந்த அவரது பெயர் திடீரென்று நீக்கப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு என்னால் வராமல் இருக்க முடியவில்லை.

எனவே, தமிழக முதலமைச்சராகிய தாங்கள், தங்கள் அதிகாரத்துக்குட்பட்ட இந்த மிக சாதாரணமான விவகாரத்தில் தக்க நடவடிக்கைகளைச் சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் மேலும் காலம் தாழ்த்தாமல் எடுக்குமாறும் என்.ராஜுவுக்கு நியாயம் கிடைக்க வழி வகை செய்யுமாறும் அறிவுறுத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

மிகுந்த வணக்கத்துடன்

தங்கள் உண்மையுள்ள

எஸ்.வி.ராஜதுரை (மனோகரன்)

எழுத்தாளர் - மொழிபெயர்ப்பாளர்

மேனாள் தலைவர், பெரியார் உயராய்வு மையம்,

பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பாள்ளி.

மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு ஒரு திறந்த மடல்!

(எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்)

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

புதன் 30 மா 2022