மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 29 மா 2022

அமைச்சர் கண்ணப்பன் மீது வன்கொடுமை வழக்கா? நடந்தது என்ன!

அமைச்சர் கண்ணப்பன் மீது வன்கொடுமை வழக்கா? நடந்தது என்ன!

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சமீபகாலமாகவே தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

நிர்வாக ரீதியான சர்ச்சைகளை தொடர்ந்து தற்போது சமூக ரீதியிலும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் அமைச்சர் ராஜகண்ணப்பன்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜ கண்ணப்பன். முதுகுளத்தூர் ஒன்றிய சேர்மனாக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த தருமர்.

இந்த நிலையில் முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆன ராஜேந்திரன் நேற்று மார்ச் 28ஆம் தேதி முதுகுளத்தூரில், அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதி பெயரை சொல்லி தன்னைத் திட்டியதாக

செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

"கடந்த 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை அவரைப் பார்க்க அவரது வீட்டுக்கு சென்றேன். வீட்டுக்குள் சென்று அவருக்கு விஷ் பண்ணினேன். அதற்கு அமைச்சர், 'ஏன்யா நீ ஒரு எஸ் சி. பிடிஓ. சேர்மன் சொன்னாதான நீ கேப்ப. மத்தவங்க யார் சொன்னாலும் கேக்க மாட்ட. உன்ன நா இந்த சீட்டிலேயே வைக்க மாட்டேன். அமுதா மேடத்துக்கிட்ட சொல்லி உன்ன வட மாவட்டத்துக்கு மாத்திடுவேன் என கடுமையான தொனியில் கூறினார். எனக்கு 57 வயதாகிறது. இதுவரை என்னுடைய அனுபவத்தில் இந்த அளவு நான் மனக்காயம் பட்டதில்லை. ஐந்து முறை ஆறு முறை எஸ்.சி. பிடிஓ என்று கூறினார் அமைச்சர். நான் அமைச்சரைப் பற்றி குறை கூற விரும்பவில்லை. உள்ளபடி நடந்ததை சொல்லி இருக்கிறேன்.

நேற்று முழுவதும் என்னால் சாப்பிட முடியவில்லை. இரவு தூக்கம் வரவில்லை. காலையில் எழுந்து வாக்கிங் சென்றுவிட்டு மாவட்ட ஆட்சியரை சந்திக்க சென்றேன். துணை ஆட்சியரை சந்திக்கச் சென்றேன். முடியவில்லை. மீண்டும் முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து என் பணியை செய்து கொண்டிருக்கிறேன்" என்று தனது மனப் புழுக்கத்தை மார்ச் 28ஆம் தேதி முதுகுளத்தூரில் வைத்து செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார் பிடிஓ ராஜேந்திரன்.

நடந்தது என்ன என்பது குறித்து முதுகுளத்தூர் அரசு ஊழியர்கள், அரசியல் கட்சியினர் வட்டாரத்தில் விசாரித்தோம்.

"அமைச்சர் ராஜ கண்ணப்பனின் சட்டமன்ற தொகுதி முதுகுளத்தூர். இந்த முதுகுளத்தூர் ஒன்றியத்தில் 2019ஆம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெரும்பான்மையோடு வெற்றி பெற்றது. தருமர் சேர்மனாக இருக்கிறார்.

சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ராஜகண்ணப்பன் அமைச்சர் ஆகி விட்டபோதிலும் உள்ளூரில் ஒன்றிய சேர்மன் அதிமுகவைச் சேர்ந்த தருமர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக தொடர்ந்து காய்களை நகர்த்தி வருகிறார்.

முதுகுளத்தூர் ஒன்றியத்தில் அமைச்சர் பிளஸ் எம்எல்ஏவான கண்ணப்பன் சொல்வதை அதிகாரிகள் கேட்க மறுக்கிறார்கள். காரணம் ஒன்றிய தலைவர் ஆன தருமர் தான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்று ஒன்றிய அதிகாரிகளுக்கும் அரசு அலுவலர்களுக்கும் வாய்மொழி உத்தரவு போட்டுள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் அமைச்சராக வலம் வரும் ராஜகண்ணப்பன், முதுகுளத்தூரில் ஒரு எம்எல்ஏ வாக கூட தனது அதிகாரத்தை பயன்படுத்த முடியவில்லை.

முதுகுளத்தூர் ரெகுலர் பிடிஓ ராஜேந்திரன் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். வளர்ச்சி பிடிஓ அன்பு கண்ணன் மறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

இந்த இரண்டு அரசு ஊழியர்களும் அதிமுக சேர்மன் தருமரின் கட்டுப்பாட்டில் தான் செயல்பட்டுக் கொண்டு இருப்பதாக அமைச்சர் கண்ணப்பனுக்கு தொடர்ந்து தகவல்கள் சென்று கொண்டிருந்தன.

இந்த நிலையில்தான் 26 ஆம் தேதி சனிக்கிழமை அமைச்சரின் முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் பணியாற்றும் சத்தியேந்திரன் முதுகுளத்தூர் பிடிஓ ராஜேந்திரனுக்கு அலைபேசி செய்து, 'நாளை காலை சிவகங்கையில் அமைச்சர் வீட்டுக்கு வந்திடுங்க. சாப்பிட்டு வந்துடாதீங்க. சாப்பிடாமலே வாங்க. அமைச்சரோடு சாப்பிடலாம்' என்று கூறி அழைத்திருக்கிறார். அதேபோல முதுகுளத்தூர் ஒன்றிய வளர்ச்சி பி டி ஓ அன்பு கண்ணனையும் அழைத்திருக்கிறார்.

இருவரும் ஞாயிற்றுக்கிழமை காலை சிவகங்கை செந்தமிழ் நகரில் இருக்கும் அமைச்சர் ராஜகண்ணப்பன் வீட்டுக்கு சென்று இருக்கிறார்கள்.

அங்கே தனக்கு கிடைத்த அனுபவத்தில் தான் ராஜேந்திரன் மனப் புழுக்கத்தோடு வெளியே வந்திருக்கிறார்.

அப்போது வெளியே நின்ற சத்தியேந்திரன், 'என்ன அமைச்சர் நல்ல சாப்பாடு போட்டாரா?'என்று கேட்க மேலும் ஷாக் ஆகி விட்டார் ராஜேந்திரன். ஆக திட்டமிட்டே தான் தன்னை வரச்சொல்லி அவமானப்படுத்தி இருக்கிறார்கள் என்று அவர் தன் சக அதிகாரிகளிடம் கூறி இருக்கிறார்.

முதுகுளத்தூர் ஒன்றிய அதிகாரிகள் ஒன்றிய சேர்மன் அதிமுகவைச் சேர்ந்த தருமரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தான் கண்ணப்பன் இவ்வாறு கோபப்பட்டிருக்கிறார். அரசு அதிகாரிகளை ஊழியர்களை அமைச்சர் கண்ணப்பன் கோபமாகப் பேசுவது அரசு ஊழியர்கள் வட்டாரத்தில் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

ஆனால் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டினார் என்று பிடிஒ பகிரங்கமாக புகார் கூறியுள்ளார்.

வன்கொடுமை சட்ட திருத்தத்தின்படி தன்னை சாதிப் பெயர் சொல்லி திட்டியதாக பட்டியலினத்தவர் புகார் செய்தால் அதற்கு சாட்சியாக பட்டியலினத்தவர் அல்லாத ஒருவர் சாட்சி சொல்ல வேண்டும். அதன்படி பார்த்தால் ராஜேந்திரனோடு அமைச்சரை பார்க்கச் சென்ற முதுகுளத்தூர் வளர்ச்சி பிடிஒ வான அன்பு கண்ணன் தான் இதில் சாட்சி சொல்ல வேண்டும். அவர் இதுவரை இந்த சம்பவம் பற்றி எதுவும் சொல்லவில்லை. அவர் அமைச்சருக்கு எதிராக சாட்சி சொன்னால்தான் அமைச்சருக்கு சிக்கல்.

அதனால் இப்போது அன்பு கண்ணனை அமைச்சரின் ஆதரவாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறார்கள் " என்கிறார்கள்.

மேலும் அவர்கள், "அமைச்சர் ராஜகண்ணப்பனின் முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் இருக்கும் சத்தியேந்திரன், சார்லஸ், டோனி ஆகிய 3 பேரும் தாங்கள் தான் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என்பது போல அங்கே வரும் பலரையும் ஏளனமாக பேசிவருகிறார்கள். அரசு அலுவலர்கள் ஆனாலும் சரி, உதவி கேட்க வரும் மக்கள் ஆனாலும் சரி இதுதான் கதி. எனவே அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது சட்டமன்ற அலுவலகத்தில் உள்ள சூழலை மாற்றி அமைத்தாலே பாதி சர்ச்சைகளை தவிர்க்கலாம்"என்கிறார்கள் முதுகுளத்தூர் வட்டார அரசு ஊழியர்களும், திமுகவினருமே.

இதற்கிடையே ராஜேந்திரன் சார்ந்த தேவேந்திர குல வேளாளர்கள் சங்கத்தினர் இந்த விவகாரத்தை அமைச்சருக்கு எதிராக பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இன்று மார்ச் 29 காலை முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், பிடிஓ ராஜேந்திரனை அவமதித்ததாக கூறி அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக அலுவலக வாயிலில் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

அதிமுக, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகளும் இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளன.

வேந்தன்

.

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

செவ்வாய் 29 மா 2022