பொதுத் தேர்வு தொடக்கம்: ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு மறுப்பு!


கர்நாடகாவில் இன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில், ஹிஜாப் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பை மீறும் எவரும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
ஹிஜாப் சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 3,440 மையங்களில் 8.76 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
ஹிஜாப் அணிந்து வந்து தேர்வு எழுத யாருக்கும் அனுமதி கிடையாது. இதன் காரணமாக தேர்வை புறக்கணிப்பவர்களுக்கு, மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்று அம்மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று(மார்ச் 28) பொதுத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில், ஹிஜாப் அணிந்திருந்த பல மாணவிகள் தேர்வு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தேர்வு நடைபெறும் வகுப்புகளுக்குள் அனுமதியில்லை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஹிஜாபை கழற்றினால் மட்டுமே அனுமதி என்றதால், இதை ஏற்க மறுத்த சில மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறுகையில், “விதியை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். உயர்நீதிமன்ற உத்தரவை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். மாணவர்கள் ஹிஜாபை கழற்றிவிட்டு தேர்வு எழுத வேண்டும்” என்று கூறினார்.
“விதிகளை மீறுபவர்கள் மீது காவல்துறை நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். இதுபோன்ற விஷயங்களுக்கு எந்தக் குழந்தையும் வாய்ப்பளிக்காது” என்று நம்புவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார்.
-வினிதா