காங்கிரஸ் இடத்தை மாநிலக் கட்சிகள் பிடிக்கக் கூடாது: பாஜக அமைச்சர்

politics

காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி தொடர்ந்து அரசியல் முழக்கங்களை முன்னெடுத்து கொண்டிருக்க… மோடியின் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றும் மூத்த பாஜக தலைவரான பாஜகவின் முன்னாள் அகில இந்தியத் தலைவரான நிதின் கட்கரி, “இந்திய ஜனநாயகத்துக்கு வலிமையான காங்கிரஸ் கட்சி அவசியம்” என்று பேசியிருக்கிறார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் மார்ச் 26ஆம் தேதி இதழியல் விருதுகளை வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசினார் அமைச்சர் நிதின் கட்கரி.
“நான் தேசிய அளவிலான அரசியல்வாதி. மகாராஷ்டிர மாநில அரசியலுக்குள் வருவதை நான் விரும்பவில்லை. ஒரு காலத்தில் நான் தேசிய அரசியலுக்குச் செல்ல விரும்பவில்லை. ஆனால் அங்கே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
தற்போதைய தேசிய அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி பலவீனமாகி கொண்டிருப்பது நாட்டுக்கு நல்லதல்ல. காங்கிரஸ் கட்சியின் இடத்தை மாநிலக் கட்சிகள் எடுத்துக் கொள்ள முயற்சி செய்வது ஜனநாயகத்துக்கு நல்ல அறிகுறி இல்லை.
ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் பங்கு என்பது முக்கியமானது. இந்த வகையில் காங்கிரஸ் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை நான் மனமார விரும்புகிறேன்.
அடல் பிகாரி வாஜ்பாய் மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் பண்டிட் ஜவகர்லால் நேருவின் பெருமதிப்பைப் பெற்றிருந்தார். எனவே ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் பங்கு மிக முக்கியமானது. காங்கிரஸில் இருப்பவர்கள் தங்கள் நம்பிக்கையை இழந்து விடாமல் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். தோல்விகளால் விரக்தி அடையாமல் இருக்க வேண்டும்.
வெறும் தேர்தல் தோல்விகளால் ஒருவர் தனது சித்தாந்தத்தையும் கட்சியையோ விட்டுவிடக் கூடாது.
ஒவ்வொரு கட்சியும் அதற்கான நாளை அடைந்தே தீரும். அதுவரை உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமானது. ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் ஜனநாயக வண்டியின் இரு சக்கரங்களுக்கு நிகரானவை. வெவ்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர்கள் எதிரிகள் என்று அர்த்தமில்லை” என்று பேசி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார் பாஜக அமைச்சர் நிதின் கட்கரி.
**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *