மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 மா 2022

வளர்ந்த மாநிலத்துக்கு எதற்கு இலவசங்கள்?: மநீம கேள்வி!

வளர்ந்த மாநிலத்துக்கு எதற்கு இலவசங்கள்?: மநீம கேள்வி!

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்துக்கு பதில் உரையாற்றி பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல, வளர்ந்த மாநிலம் என்பதையே பல்வேறு ஆய்வுகள் காட்டுவதாகத் தெரிவித்தார்.

மேலும், எந்த ஏழை நாட்டிலும் 52% மேற்பட்ட இளைஞர்கள் கல்லூரியில் போய் சேர மாட்டார்கள். 90% குடும்பங்களுக்கு மேல் செல்போன் வைத்திருக்கிறார்கள், 75% குடும்பங்களுக்கு மேல் சொந்த வீட்டில் வசிக்கிறார்கள். அதில் 14% மட்டுமே அரசாங்கம் தந்த வீடுகளில் வசிக்கிறார்கள். 66% வீடுகளில் இருசக்கர வாகனம் இருக்கிறது என்றும் தரவுகளை முன்வைத்து பேசினார்.

இந்த நிலையில், வளர்ந்த மாநிலத்திற்கு எதற்கு இலவசங்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் துணைத் தலைவர் மௌரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிதியமைச்சர் சொல்கின்ற தரவுகள் சரியா, தவறா என்ற விவாதம் ஒருபுறம் இருக்க, உயர்கல்வி படிப்பவர்கள், வீடு, செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை கொண்டு ஒரு மாநிலம் வளர்ந்த மாநிலமா இல்லை, ஏழை மாநிலமா என்று முடிவுக்கு வர முடியுமா என்ற கேள்வி நமக்குள் இயல்பாக எழுகிறது.

தமிழகத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அரசு காப்பீட்டுத் திட்டங்களை வைத்துள்ள மக்கள்தொகையின் சதவிகிதம் என்ன? தமிழகத்தின் வேலைவாய்ப்பு சதவிகிதம் என்ன? அதிலும் படித்த படிப்பிற்கு ஏற்றார்போல் அதே பணியைச் செய்பவர்கள் சதவிகிதம் என்ன? இந்த மேற்சொன்ன விஷயங்களுக்கு நம்மிடம் தரவுகள் உண்டா? இதையெல்லாம் தாண்டி நிதியமைச்சர் குறிப்பிட்ட 4 விஷயங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொள்வோம்.

ஒருபக்கம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளால் உயர் படிப்பைத் தொடர முடியாத காரணத்துக்காக ரூபாய் 1,000 அவர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று சொல்லிவிட்டு, மறுபக்கம் 52 சதவிகித மாணவ மாணவிகள் கல்லூரிக்குச் செல்கிறார்கள் என்று பெருமையாகப் பேசுகிறோம்.

வீடு இருக்கும் பட்சத்தில் அவர் சொல்வது போல் கிராமத்தில் வசிக்கும் 90 சதவிகிதத்தினருக்கு சொந்த வீடு இருக்கிறது என்றாலும், அதில் எத்தனை குடிசை வீடுகள், அதில் எத்தனை வீடுகள் முறையான இடத்தில் இல்லாமல் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளன போன்ற தரவுகள் நம்மிடம் உண்டா? குறிப்பாக அதில் எத்தனை வீடுகளில் கழிவறைகள் உள்ளன என்று நமக்குத் தெரியுமா? நகர்ப்புறத்தில் மக்கள் வசிக்கும் சொந்த வீடுகளில் எத்தனை லட்சக்கணக்கான வீடுகள் கடனில் வாங்கப்பட்டுள்ளன என்ற தரவுகள் தெரியுமா?

66% இருசக்கர வாகனம் வைத்திருந்தாலும் அதில் எத்தனை கடனில் வாங்கப்பட்டுள்ளன, அந்தக் கடனை கூட கட்ட முடியாமல் கொடுமையான கொரோனா காலத்தில் எவ்வளவு பேர் தங்களின் வண்டியை இழந்தார்கள், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தார்கள் என்ற புள்ளிவிவரம் நமக்கு தெரியுமா? வளர்ந்த மாநிலம் என்றால் பொங்கல் பரிசு எதற்கு? மகளிர்க்கான இலவச பேருந்து எதற்கு? வறுமை ஒழிக்கும் 100 நாள் ஊரக வளர்ச்சித் திட்டம் எதற்கு?

இவை பற்றி முழுமையாகப் பேசாமல், நவ நாகரிகமான நகர்ப்புறத்தில் இருந்து எந்த ஒரு கருத்தையும் சொல்வது எளிது. உண்மையான தமிழகத்தைத் தெரிந்துகொள்ள பைபாஸ் சாலைகளைத் தவிர்த்து கிராமப்புறங்களுக்கு சென்றால்தான் 100 ரூபாய் கூலிக்கு எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்பது போன்ற உண்மைகள் நமக்குப் புரியும். இதைப் புரிந்து கொள்ளாமல் தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாகக் காட்ட முயற்சி செய்வது வருத்தத்தையே தருகிறது.

மேலும் தமிழகத்தை வளர்ந்த மாநிலம் என்று சொல்வதன் மூலம் தேர்தல் அறிக்கையில், மக்கள் நீதி மய்யத்திடம் இருந்து நகல் எடுக்கப்பட்டு, பெரிதாய் காட்டப்பட்ட மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 1,000 என்ற தேர்தல் அறிக்கையைச் செயல்படுத்தாமல் விட்டுவிடலாம் என்ற எண்ணம் இருப்பதாகவே தோன்றுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

ஞாயிறு 27 மா 2022