மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 மா 2022

சிறப்புக் கட்டுரை: இந்திய முஸ்லிம்கள்: நொறுங்கிச் சிதறும் நம்பிக்கை

சிறப்புக் கட்டுரை: இந்திய முஸ்லிம்கள்: நொறுங்கிச் சிதறும் நம்பிக்கை

சாலிக் அகமது

சில தினங்களுக்கு முன் என் நண்பருடன் டெல்லி வாழ்க்கை குறித்து பேசிக்கொண்டிருந்தேன். மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்யும் என் நண்பர், ஒரு முஸ்லிமாக இருப்பதால் அலுவலகத்தில் தான் எப்படி நடத்தப்படுகிறேன் என்பது பற்றி பேசினார்.

“முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுவதை எல்லோருமே கண்டுகொள்ளாமல்தான் இருக்கின்றனர். தினம் தினம் யாரோ ஒரு முஸ்லிம் ஏதோ ஒரு கும்பலால் படுகொலை செய்யப்படும் வீடியோ, வெறுப்புப் பேச்சு, இன அழிப்பைத் தூண்டும் கார்டூன்கள் போன்றவை வாடிக்கையாகிவிட்டன. ஆனால் தினம் அலுவலகம் செல்லும்போது சிறந்த உணவு எங்கு கிடைக்கும், சிறந்த கேக் எங்கு கிடைக்கும் என எல்லோரும் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருக்கின்றனர்” என்று வேதனையாக கூறினார்.

முழுக்க முழுக்க மதவெறுப்பு சிந்தனை கொண்ட அலுவலகங்களில் வேலை செய்யும் முஸ்லிம்களின் நிலை என்ன? இதையும் தாண்டி, அமைப்புசாராத் துறையைச் சேர்ந்த நடைபாதை வியாபாரிகள், ரிக்‌ஷா இழுப்பவர்கள், சாதாரண முஸ்லிம் தொழிலாளர்களின் நிலைதான் என்ன?

ஆங்கிலப் பத்திரிகை ஊடகத்தில் வேலை செய்வதால் நான் இதுபோன்ற அனுபவங்களைச் சந்திக்கவில்லை. மதச்சார்பற்ற ஆசிரியர்களின் கீழ் நான் வேலை செய்தேன். ஆனால் அவர்களும் கொஞ்ச நாட்களுக்கு மட்டுமே அலுவலகத்துக்காக மதச்சார்பற்ற தன்மையுடன் நடந்துகொண்டு, பின்னாட்களில் கொள்கையை விட்டு வெளியேறிவிட்டனர்.

மேகங்கள் இருள் சூழ்ந்துவிட்டன. கடைசியில், பெரும்பாலான முஸ்லிம்களின் மனநிலை பற்றிப் பேசினோம். நாம் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டுமா? இந்திய அரசின் உறுதிமொழிகளை நாங்கள் நம்பிய காலமும் உண்டு. ஆனால் இப்போது நிலை எப்படி மாறியிருக்கிறது? முற்போக்கான அரசியல் சாசனம் இருந்தும் இந்திய அரசு மதச்சார்பற்றுச் செயல்பட முடியவில்லை. மாறாக அது பெரும்பான்மைவாத அரசாக மாறிவிட்டது.

2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் கலவரம் நடந்தபோது 23 வயது ஃபைசன் என்ற முஸ்லிம் இளைஞரைக் காவல்துறையினர் தரையில் தள்ளி அடித்துத் துன்புறுத்தி தேசிய கீதம் பாடும்படி கட்டாயப்படுத்தினர். கடைசியில் ஃபைசன் இறந்துவிட்டார். இரண்டு ஆண்டுகளான பிறகும் இன்னும் அவருக்கு நீதி கிடைக்கவில்லை.

ஃபைசனின் தாயார், கர்நாடகத்தில் பல ஆண்டுகளாகப் பாடம் நடத்திவந்த பின் திடீரென புர்காவை நீக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்ட முஸ்லிம் ஆசிரியர், பொய் வழக்குகளால் பெரும்பாலான இளமைக் காலத்தைச் சிறையில் கழித்த முஸ்லிம் இளைஞர்கள் எனப் பல விதங்களில் வேதனையுறும் முஸ்லிம்களின் முகங்களைப் பாருங்கள். இரக்கம் வேண்டி நிற்கும் அவர்களின் கண்கள் அச்சத்தை உண்டாக்குகின்றன.

எங்கே அந்தச் சிரிப்பு?

முஸ்லிம்களை இன அழிப்பு செய்ய வேண்டும் எனக் கூறும் சாமியார்கள், புல்லி பாய் ஆப், குர்கானில் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தத் தடை போன்ற விவகாரங்களை அரசு அமைதியாகக் கடந்துபோவதைப் பார்க்கிறேன். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் ஆகிய கல்விக்கூடங்களில் போலீசார் கலவரம் செய்கின்றனர். ஒருகாலத்தில் நாங்கள் சிரித்து மகிழ்ந்த இடங்களில் தற்போது வன்முறையும் வெறுப்பும் நிறைந்துள்ளன.

பாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்களுக்கு நீதி வழங்குவதிலும் கடைசியில் அரசு தோற்றது. தீர்ப்பு வந்தபோது நான் பெரிதும் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன். இந்தியாவில் எல்லா நிறுவனங்களையும் விட நீதிமன்றங்கள்தான் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. முஸ்லிம்களைக் கொன்றவர்கள், குண்டுவைத்தவர்கள், இன அழிப்புக்கு அழைப்பு விடுத்தவர்கள் போன்றவர்களுக்கு நீதிமன்றங்கள் வேகவேகமாக ஜாமீன் வழங்குகின்றன.

பாடப்புத்தகங்களும் சினிமாக்களும் பத்திரிகைகளும் இந்த நாடு நாங்கள் வாழ்வதற்கான இடம்தான் என்ற கருத்தை உருவாக்கின. ஆனால் அந்த உணர்வு நிஜத்தில் நமக்கு ஏற்படவில்லை. இல்லாத ஒன்றை இருப்பதாக நம்பும்படி பல ஆண்டுகளாக நம்மைக் கட்டாயப்படுத்தியிருக்கின்றனர்.

அங்கீகாரத்தைப் பெறுவதற்கான அழுத்தம்

எல்லாம் சேர்ந்து என்னைப் போன்ற லட்சக்கணக்கான முஸ்லிம்கள் தங்கள் மத அடையாளம் குறித்து வருந்தக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நான் மதச்சார்பற்றவன், இந்தியாவை விரும்புகிறேன் என ஒவ்வொரு முறையும் என்னை மற்றவர்களிடம் நிரூபித்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஓவைசி கெட்டவர் என்பதை சொல்லாமல் பாஜகவை என்னால் விமர்சிக்கவே முடியாது. என்னை மற்றவர்கள் எப்படிப் பார்க்கின்றனர் என்பதை ஆராய்ந்து ஆராய்ந்து சோர்வு ஏற்படுகிறது.

ஆனால், நான் யாரைச் சமாதானப்படுத்த இதையெல்லாம் செய்துகொண்டிருக்கிறேன்? எனது துன்புறுத்தலைத் தேர்தல் மூலமாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஏற்றுக்கொண்ட பெரும்பான்மையினரைத்தான். ஒரு நல்ல முஸ்லிம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவர்கள் வகுத்துள்ள விதிகளுக்கு ஏற்ப என்னால் வாழ முடியாது. ஒவ்வொரு முறையும் அவர்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான அழுத்தம் முஸ்லிம்களுக்கு ஏற்படக் கூடாது. வன்மவாதிகளுக்குப் பாடம் எடுப்பதும் நமது வேலை இல்லை.

உண்மையைச் சொன்னால், இந்தியா எந்த திசையில் செல்கிறது என்பதை பற்றி எனக்கு அக்கறை இல்லை. சகோதரத்துவம் பற்றிப் பாடம் எடுக்கவும், இந்தியாவின் கலாச்சாரத்தை மீட்டெடுக்கவும் நான் விரும்பவில்லை. அதனால் எந்தப் பயனும் இருப்பதாக நான் நம்பவில்லை. அதையெல்லாம் செய்ய முஸ்லிம் அரசு அதிகாரிகள், எழுத்தாளர்கள், ஜமீன்தார்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளான பிறகும், அலுவலகத்தில் இருப்பவர்கள் “உங்களுக்கு பாகிஸ்தானை கொடுத்துவிட்டோம். இன்னும் வேறென்ன வேண்டும்?” என்று கேட்பதாக எனது நண்பரின் தாத்தா கூறுகிறார். இந்தியா பிரிக்கப்பட்டது குறித்த தவறான பிரச்சாரங்கள் மிகச் சாதாரணமாகப் பரப்பப்படுகின்றன. இதனால்தான், தனது உரிமைகளைக் கேட்கும் ஒரு முஸ்லிமைப் பார்த்தால் பெரும்பான்மையைச் சேர்ந்த சிலருக்கு கோபம் வருகிறது. சம நீதி வேண்டும் எனக் கேட்ட எனது பெற்றோருக்குக் குற்ற உணர்ச்சிகூட ஏற்பட்டிருக்கலாம்; ஆனால் எனக்கில்லை. எனக்கான உரிமை முழுவதுமாக எனக்கு வேண்டும்.

இந்தியாவை விட்டு வெளியேற வேண்டுமா?

இருந்தாலும், இந்தியாவை விட்டு வெளியேற வேண்டுமா எனச் சில நேரங்களில் தோன்றுகிறது. ஆனால், இங்கிருந்து வெளியே செல்ல முடியாதவர்களின் நிலை என்ன? நான் இங்கிருந்தே போராட வேண்டுமா? எல்லோருக்கும் பாதுகாப்பு கேட்பது ஒரு நியாயமான முயற்சிதானே? பள்ளிகளில் முஸ்லிம் குழந்தைகள் என்ன விதமான வெறுப்புப் பேச்சுகளை எதிர்கொள்கின்றனர், எதிர்காலத்தில் நம் குழந்தைகள் எந்தவிதமான சமூகத்தை சந்திக்கப்போகின்றனர் என்பது குறித்து நண்பர்கள் வருந்துகின்றனர். வாய்ப்புக் கிடைத்தபோதே இந்தியாவை விட்டு வெளியேறியிருக்க வேண்டுமென வருந்தும் முதியோர்களையும் பார்க்கிறேன்.

நான் இந்த மண்ணைச் சேர்ந்தவன் என்பதால் இங்கேயே இருக்க விரும்புகிறேன். 30 ஆண்டுகளாக இங்கு என் வாழ்க்கையைக் கழித்திருக்கிறேன். புலம்பெயர்வது எவ்வளவு வேதனையானது என நான் அறிவேன். நண்பர்கள், உறவினர்கள், நான் பார்த்து வியந்தவர்கள், நான் வெறுத்தவர்கள் என எனக்குத் தெரிந்தவர்கள் அனைவரும் இந்த மண்ணில் இருக்கின்றனர்; இதுதான் என் உலகம்.

இதையெல்லாம் விட்டுவிட்டு எதுவும் தெரியாத வேறு இடத்துக்குச் செல்வது என்ற எண்ணமே அச்சத்தை ஏற்படுத்துகிறது. சொல்லப்போனால், தூய்மையான சாலைகள், நவீன வசதிகள் போன்றவைகூட என்னைப் பெரிதாக ஈர்க்கும் என்று தோன்றவில்லை. இதுவொரு நீண்ட இரவாக இருக்கலாம். எப்போது விழிப்பேன் என எனக்குத் தெரியாது. ஆனால், ஒரு காலையில் நீதிக்கான வெளிச்சம் வரும் என நம்புகிறேன்.

*

கட்டுரையாளர் சாலிக் அகமது தில்லியில் உள்ள சுயேச்சை பத்திரிகையாளர்

நன்றி: தி இந்தியா ஃபோரம்

தமிழில்: புலிகேசி

.

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வெள்ளி 25 மா 2022