மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 24 மா 2022

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக புதிய சட்டம்: கி.வீரமணி

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக புதிய சட்டம்: கி.வீரமணி

விருதுநகரில் 22 வயதான இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் ஒரு வழக்கில் எப்படி விரைந்து தண்டனை பெற்றுத் தருவது என்பதற்கு இந்தியாவுக்கே இந்த வழக்கு முன்மாதிரியாக இருக்கும் என்றும் முதல்வர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக புதிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்பு டெல்லியில் நடைபெற்ற ‘நிர்பயா’ நிகழ்வுபோல பாலியல் வன்கொடுமை தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது என்று எழுதும் முன்பே, பொள்ளாச்சியில் நடந்த அருவருக்கத்தக்க நிகழ்வுகளும், அதில் பல பிரமுகர்களின் பிள்ளைகளும் ஈடுபட்டிருந்தார்கள் என்ற வெட்கக்கேடான அவலமும் நம் நினைவைவிட்டு இன்னமும் நீங்கவில்லை. நீதிமன்றங்களும் கடுமையாகத்தான் தண்டிக்கின்றன. காவல்துறையினரும் பெரிதும் அருமையாக கடமையாற்றுகின்றனர், ஒரு சில நிகழ்வுகளைத் தவிர.

இந்த நிலையில், அண்மையில் விருதுநகரில் நடைபெற்றுள்ள பாலியல் வன்கொடுமைச் செய்தியைக் கேட்டாலே நம் நெஞ்சத்தில் இரத்தக் கண்ணீர் பீறிடுகிறது. இத்தகைய மனிதர்கள் ஏன் இப்படி மிருகங்களைவிடக் கேவலமாக நடந்துகொள்ளுகிறார்கள்? இந்த லட்சணத்தில் இந்தக் கூட்டுக் கிரிமினல் நடவடிக்கையில் மாணவர்களும் உண்டாம். என்னே கொடுமை. என்னே இழிவு.

விருதுநகர் பாரம்பரிய சுயமரியாதை மண். 1931-ல் மூன்றாவது சுயமரியாதை மாநாடு, பெண்கள் மாநாடெல்லாம் நடைபெற்று பெண்ணுரிமை, மண்ணுரிமையைவிட மகத்தானது என்று பிரகடனம் செய்த பூமி. அனைவருக்கும் கல்வி நீரோடையைப் பாய்ச்சி, அருந்தச் செய்த அருந்தலைவர் கல்வி வள்ளல் காமராசர் பிறந்த ஊர். அங்கே இப்படி ஒரு அருவருக்கத்தக்க செயல், எழுதவே பேனாகூட ஒத்துழைக்க மறுக்கும் கொடுமையான நிகழ்வு.

ஒரே ஆறுதல், உடனடியாக நமது தமிழ்நாடு முதல்வர் மின்னல் வேகத்தில் காவல் துறைக்கு ஆணையிட்டு, திறமையும், நேர்மையும் உள்ள பல காவல்துறை அதிகாரிகளை அனுப்பி, குற்றவாளிகளை உடனே கைது செய்து, இந்த செயலுக்குக் கடுந்தண்டனை வழங்க ஏற்பாடு செய்திருப்பது சற்று புண்ணுக்கு மருந்திடுவதாக உள்ளது.

இந்த மனித மிருகங்களை நிரந்தர சமூக விரோதிகள் என்று கூறி, வாழ்நாள் தண்டனை தந்து, மற்றவர்கள் இதுபோன்று செய்ய நினைக்கும் எண்ணத்தை அறவே மனதிலிருந்து அழிக்கக் கூடிய புதிய சட்டங்களை நிறைவேற்றுவதும்கூட அவசர அவசியம்.

பெண்களை வெறும் பாலுறவுப் பண்டங்களாகப் பார்க்கும் எண்ணத்தையே வேரோடும், வேரடி மண்ணோடும் பெயர்த்தெறியும் வண்ணம் தந்தை பெரியாரின், திராவிடர் இயக்கத்தின் பெண்ணுரிமைச் சிந்தனைகளை ஒரு தீவிரப் பிரச்சார இயக்கமாகவே நாடு தழுவிய அளவில் நடத்திட, தமிழ்நாடு அரசே ஊக்கம் தந்து உந்தித் தள்ள திட்டமிடல் வேண்டும்.

ஆட்சியின் முன்னுரிமையே பெண்ணுரிமையாக இருக்கவேண்டும். எந்தப் பிரச்சினையையும் வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக மட்டும் பாராமல், சமூகம் சார்ந்த பிரச்சினையாகவும் அணுகி, அதற்கேற்ப இளைஞர்களை அறிவுபூர்வமானவர்களாக ஆக்கவேண்டும். காட்சி ஊடகங்களின் போக்கிலும் பெரிய மாற்றத்தை உருவாக்கி, இந்தப் பாலியல் வன்கொடுமையை பல கோணங்களில் ஆராய்ந்து தக்க தீர்வு காணவேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முன்னுரிமையே பெண்ணுரிமையாக இருக்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்,” விருதுநகர் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை, நினைக்கவும் பயங்கரம். குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்தோடு, தனக்கு இழைக்கப்பட்டது தீங்குதான், அவமானமல்ல என்று பெண்கள் புரிந்துகொள்ளத் தேவையானதைச் செய்வதும் அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “ விருதுநகரில் இளம்பெண் தொழிலாளியை மாணவர்கள், ஆளும் கட்சிக்காரர்கள் உள்பட 8 பேர் ஆறு மாத காலம் தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவு செய்து வந்ததாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இக்கொடிய நிகழ்வு வன்மையான கண்டனத்துக்குரியது. உள்ளூர் அரசியல் நிர்ப்பந்தத்தையும் மீறி, எட்டு குற்றவாளிகளும் இந்திய தண்டனைச் சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது.

எனவே குறிப்பிட்ட கால வரையறைக்குள் வழக்கு விரைந்து முடிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு உரிய தண்டணை வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகளில் 18 வயதுக்கு குறைவானவர்கள் உள்ளனர் என்பது கவலை அளிக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த நிலைமையை மாற்றுவதற்கான உறுதியான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

-வினிதா

மோடி வருகை: கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக நிபந்தனை!

4 நிமிட வாசிப்பு

மோடி வருகை: கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக நிபந்தனை!

ஓபிஎஸ் பேசினாரா?: சசிகலா பதில்!

6 நிமிட வாசிப்பு

ஓபிஎஸ் பேசினாரா?: சசிகலா பதில்!

டி.ராஜேந்தருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: ஏன்?

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு வெளிநாட்டில் சிகிச்சை: ஏன்?

வியாழன் 24 மா 2022