மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 24 மா 2022

ஒவ்வொரு நாளும் கொடூரம்: அண்ணாமலை

ஒவ்வொரு நாளும் கொடூரம்: அண்ணாமலை

விருதுநகரில் 22 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று (மார்ச் 24) கண்டன ஆர்ப்பாட்டத்தை பாஜக நடத்தியது.

விருதுநகரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சசிகலா புஷ்பா, நடிகையும் பாஜக நிர்வாகியுமான மதுவந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும்’, ’தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்’, ‘பாரத் மாதா கி ஜே’ உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய அண்ணாமலை, “திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. ஒவ்வொரு நாளும் செய்திதாள்களிலும், ஊடகங்களிலும் படிக்கும் செய்திகள் இதைத்தான் சொல்கின்றன. ஒவ்வொரு நாளும் நடக்கும் சம்பவம் அதற்கு முந்தைய நாளில் நடந்ததைவிட கொடூரமாக இருக்கின்றன. விருதுநகரில் 22 வயதான இளம்பெண்ணுக்கு கோரமான சம்பவம் நடந்துள்ளது. அவருக்கு ஆறுதல் சொல்ல யாரும் வரவில்லை, ஆதரித்து பேசவும் யாரும் இல்லை. இதுகுறித்து பாஜக கேள்விப்பட்டவுடன், மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்ததும், இதுவரை இந்த விஷயத்தில் வாய் பேசாதவர்கள் கூட தற்போது களத்தில் இறங்கியுள்ளனர். குறிப்பாக நம்முடைய முதல்வர்.

நேற்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர், வழக்கில் எப்படி விரைந்து தண்டனை பெற்றுத் தருவது என்பதற்கு இந்தியாவுக்கே இந்த வழக்கு முன்மாதிரியாக இருக்கும் என்று கூறினார். அதை சொல்லி முடித்து வாயை மூடவில்லை, அதற்குள் வேலூரில் தன் நண்பருடன் ஆட்டோவில் சென்ற பெண் ஒருவரை ஐந்து பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக செய்தி வந்தது.

நிர்பயா சம்பவம் நடந்தபோது, தமிழகத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை, நடக்கவும் விடமாட்டோம் என்று பெருமையாக கூறிக் கொண்டிருந்தார்கள். தற்போது அதுபோன்ற சம்பவம் வேலூரில் நடந்துள்ளது.

விருதுநகரில் அப்பெண்ணுக்கு நடந்த குற்றத்தில் முதல் மற்றும் இரண்டாவது குற்றவாளி திமுககாரர்கள்தான். அப்படி இருக்கும்போது எப்படி, அந்த பெண் தைரியமாக வந்து காவல்துறையில் புகார் அளிப்பார். தமிழகத்தில் நடக்கக் கூடிய குற்றச் சம்பவங்களில் திமுகக்காரர் சம்பந்தப்பட்டிருக்கிறார்.

இரண்டு அமைச்சர்கள் இருக்கக் கூடிய விருதுநகரில் இந்த கொடுமை நடந்துள்ளது. இவர்களின் வேலை காவல்துறையை நசுக்குவதுதான். காவல்துறைக்கு சுதந்திரம் இல்லை. ஆளுங்கட்சியினரால் அவர்களின் கைகள் கட்டுப்பட்டுள்ளன. காவல்துறை மீது பெண்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். காவல்நிலையத்தில் புகார் அளித்தால், அவர் ஆளும் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை பெண்களுக்கு ஏற்படவேண்டும்.

காவல்துறையை சீரமைப்பதற்கு ஓர் ஆணையத்தை முதல்வர் அமைக்கிறார். அதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி சிடி செல்வம் தலைவராக அறிவிக்கப்படுகிறார். ஆனால், அண்மையில் சென்னை அசோக் நகரில் ஆணையத்தின் தலைவர் சென்ற வாகனத்தை நிறுத்தி, அவரது பாதுகாவலரை வெட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இப்படித்தான் சட்டம் ஒழுங்கு இருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் ஒரு சிறுமிக்கு நேர்ந்த கொடுமைக்கு குரல் கொடுத்த திமுக எம்.பி கனிமொழி, தனது தொகுதிக்கு பக்கத்தில் இருக்கும் விருதுநகரில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி பட்டும்படாமல் சமூகவலைதளத்தில் பேசுகிறார். இதன்மூலம் அப்பெண்ணுக்கு நியாயம் கிடைத்துவிடுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

முதல்வரின் துபாய் பயணம் குறித்து பேசிய அவர், “தமிழக முதல்வரின் கவனம் எல்லாம் துபாயில் தான் இருக்கிறது. இன்றைக்கு அவர் துபாய் செல்கிறார். இதற்கு முன்னர் அவர் குடும்பத்தினர் பலரும் சென்று வந்தனர். இன்றைக்கும் முதல்வருடன் குடும்பத்தினர் செல்கின்றனர். அவர் எதற்காக அடிக்கடி துபாய் செல்கிறார் என்ற மர்மம் பற்றித் தெரிய வேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,”பாஜக இன்றைக்கு இங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதால் நாளை மாற்றம் ஏற்பட போவதில்லை. ஆனால், ஒவ்வொரு நாளும் நடக்கின்ற போராட்டங்கள் நம் சகோதரிகளுக்கு நம்பிக்கையை ஊட்டும். இதுபோன்று என்ன பிரச்சனையாக இருந்தாலும் பாஜக குரல் கொடுக்கும். குரலற்ற சகோதரிகளுக்கு பாஜக எப்போதும் போராட்டங்களை முன்னெடுத்து நியாயம் வழங்க நடவடிக்கை எடுக்கும்.

இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணையை பாஜக தொடர்ந்து கண்காணிக்கும். காவல்துறைக்கு இந்த அரசு சுதந்திரம் கொடுக்கும் என்று நம்புகிறேன். இனி இதுபோன்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்கிறோம்” என்று கூறினார்.

-வினிதா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வியாழன் 24 மா 2022