பாலியல் வழக்கு: அதிகபட்ச தண்டனை வழங்க முதல்வர் உத்தரவு!

விருதுநகர் பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்று தர முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் 22 வயதான இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் திமுக நிர்வாகி, நான்கு பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளிகளான ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகியோரை கடந்த 21ஆம் தேதி காவல் துறையினர் கைது செய்தனர். இதில், ஜுனைத் அகமது விருதுநகர் 10ஆவது வார்டு திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ஆவார். இவர்களில் பள்ளி மாணவர்கள் நான்கு பேரும், 17 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதால் அவர்கள் ராமநாதபுரத்திலுள்ள சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கட்சியிலிருந்து நீக்கம்
பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக நிர்வாகி ஜுனைத் அகமது கைது செய்யப்பட்ட நிலையில், கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து திமுக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விருதுநகர் வடக்கு மாவட்டம், விருதுநகர் நகரத்தைச் சேர்ந்த ஜுனைத் அகமது கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் உத்தரவு
இதுகுறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு நேரடியாகவும், மறைமுகமாகவும் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து அவர்கள் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் இந்த வழக்கு புலன் விசாரணை காவல் துணை கண்காணிப்பாளர் அர்ச்சனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை தென்மண்டல தலைவர் அஸ்ரா கார்க் மதுரை சரக டிஐஜி பொன்னி ஆகியோர் விருதுநகரில் முகாமிட்டு புலன் மேற்பார்வை செய்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
போராட்டம்
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வரும் 24ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “தமிழகத்தில் சிறுமிகள், பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை தினமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மாநில அரசு அரசியல் காரணங்களுக்காக நம் காவல் துறையை செயல்பட விடாமல் இருப்பதை கண்டித்து விருதுநகரில் 24ஆம் தேதி காலை மாபெரும் கண்டன போராட்டம் பாஜக சார்பில் நடத்தப்படும்.
22 வயது நம் சகோதரியின் மீது விருதுநகரில் நடத்தப்பட்ட கூட்டு பாலியல் வன்கொடுமை நம்முடைய நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. தமிழக அரசு காவல் துறையைச் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் தமிழகத்தில் நடந்த கடைசி பாலியல் வன்கொடுமை ஆக இது இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
-வினிதா