மாதம் ஒருமுறை தேர்தல் நடத்துங்கள்: சுப்ரியா சுலே எம்.பி!

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மாதந்தோறும் தேர்தல் நடத்துவதுதான் சிறந்த வழி என்று தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் சுப்ரியா சுலே மக்களவையில் தெரிவித்துள்ளார்.
கடந்த 137 நாட்களுக்கு பிறகு நேற்று, இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதுபோன்று சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. ஐந்து மாநில தேர்தல் முடிவடைந்தவுடன், எரிபொருள்களின் விலையை அரசு உயர்த்த ஆரம்பித்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
மேலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று(மார்ச் 23) மக்களவையில் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் சுப்ரியா சுலே,”நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து அளித்த வாக்குகளால் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தேர்தல் முடிந்தவுடனேயே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
தேர்தல் மூலம் மட்டுமே எரிபொருள் விலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதனால், ஒவ்வொரு மாதமும் தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். தேர்தல்கள் ஆளும் கட்சியை பிஸியாக வைத்திருக்கும் அதே வேளையில், எரிபொருள் பொருட்களின் விலைகள் கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்யும்” என்று மத்திய அரசுக்கு கிண்டலாக வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், “பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்களை வழங்குவதற்காக உஜ்வாலா யோஜ்னா திட்டம் தொடங்கப்பட்டபோது, பெரிய சாதனை படைத்ததாக அரசு மார்தட்டி கொண்டது. ஆனால், தற்போது சமையல் எரிவாயுவின் விலை உயர்வால் அதே பெண்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர்” என்று விமர்சித்துள்ளார்.
-வினிதா