மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 மா 2022

பன்னீரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய ஸ்டாலின்

பன்னீரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மூன்றாவது நாளாக இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் காழ்ப்புணர்ச்சியோடு, தாலிக்குத் தங்கம் வழங்கக்கூடிய திட்டத்தை திமுக அரசு நிறுத்தியதாகக் குற்றம்சாட்டினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ அதிமுக தொடங்கிய திட்டங்களை, ஏதோ திமுக அரசு அமைந்ததும் நிறுத்தி விடுவதைப்போல ஒரு போலித் தோற்றத்தை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உருவாக்கியிருக்கிறார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, முந்தைய திட்டங்களை முடக்குவதற்குப் பெயர் போன அரசு உங்களுடைய அரசு. இது கடந்த காலங்களில், பல நேரங்களில் நிரூபணமாகியிருக்கிறது.

திமுக ஆட்சிப் பொறுப்பிலிருந்தபோது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் மாபெரும் சட்டமன்ற, தலைமைச் செயலக வளாகம் கட்டப்பட்டு, அன்றைக்குப் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கால் திறந்து வைக்கப்பட்டது. அந்த இடத்தில்தான், சட்டமன்றமும் நடந்திருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்குப்பிறகு, சட்டமன்றம் நடைபெற்ற அந்த இடத்தை மருத்துவமனையாக மாற்றியது யார்?

பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா நினைவாக, 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 8 மாடிகொண்ட அளவில் ஒரு பெரிய மாளிகையை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை திமுக ஆட்சி கட்டியது. அந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற நினைத்ததும், அதைப் பாழடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டதும் யார்?

அங்கிருந்த அண்ணாவின் சிலைக்குக் கீழே உள்ள கல்வெட்டில் எழுதப்பட்டிருந்த கலைஞர் பெயரை எடுத்த ஆட்சி எது?

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில், கலைஞர் வீடு வழங்கக்கூடிய திட்டத்திலிருந்த கலைஞர் பெயரை நீக்கியது யார்?

செம்மொழிப் பூங்காவிலே, கலைஞருடைய பெயரை மறைப்பதற்காகச் செடி, கொடிகளைக் கொண்டுபோய் வைத்து, அதை முழுமையாக மூடி மறைத்தது யார்?.

கடற்கரைப் பூங்காவிலிருந்த கலைஞர் பெயரை எடுத்தது யார்?

ராணி மேரிக் கல்லூரியை இடித்துவிட்டு, அங்கிருந்த கல்லூரியை அப்புறப்படுத்த நினைத்தது உங்களுடைய ஆட்சி. அதை இடிக்கக்கூடாது, அந்தக் கல்லூரி பழமையான கல்லூரி, பல நூற்றாண்டுகளைக் கண்டிருக்கக்கூடிய வரலாற்றுச் சிறப்புக்குரிய கல்லூரி என்று நாங்கள் அன்றைக்குத் திமுக சார்பில் குரல் கொடுத்தோம். அதற்காகச் சிறைபிடிக்கப்பட்டு, சிறைக்குப் போய் பல நாட்கள் இருந்து வந்திருக்கிறோம். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்ததற்குப்பிறகு, அந்தக் கல்லூரி வளாகத்தில் ஒரு கட்டடம் கட்டப்பட்டு, கலைஞர் மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டது. நீங்கள் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, கலைஞர் மாளிகையிலிருந்த அவரது பெயரை நீக்கியதுதான் உங்களுடைய சாதனை.

கலைஞர் கொண்டுவந்தார் என்பதற்காகவே சமத்துவபுரங்கள் எல்லாம் பழுதுபார்க்கப்படாமல், அவற்றைப் பேணிப் பாதுகாக்க முடியாத அளவிற்கு, அதைப் பாழடித்தது யார்? உழவர் சந்தைகளை மேலும் மேலும் வலுப்படுத்தக்கூடாது என்று அதை இடித்து மூடியது யார்?

நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், வருமுன் காப்போம் திட்டம் போன்ற இந்தத் திட்டங்களையெல்லாம் உங்கள் ஆட்சியில் முடக்கினீர்கள். அதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

மதுரவாயல்-சென்னை துறைமுகம் உயர் மட்டச் சாலைத் திட்டம் குறித்தும் பேசினார்கள். அந்தத் திட்டத்தை முடக்கியது யார்? சமச்சீர் கல்விப் பாடப்புத்தகத்தில் கலைஞர் எழுதிய செம்மொழி வாழ்த்துப் பாடலையும், 7 ஆம் வகுப்புப் பாடத் திட்டத்திலே நாடகக் கலை குறித்த பாடத்தில் கலைஞர் அவர்களது பெயரையும் ஸ்டிக்கரை வைத்து மறைத்தது யார்?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார் முதல்வர் ஸ்டாலின்.

மேலும் அவர், “இதற்காக எல்லாம் பழிவாங்குவதற்காக நாங்கள் செய்கிறோம் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நல்ல திட்டங்கள் எதுவாக இருந்தாலும், முறையான திட்டங்கள் எதுவாக இருந்தாலும், அதை நிறைவேற்றுகிற ஆட்சிதான் திமுக ஆட்சி” என்று குறிப்பிட்டார்.

-பிரியா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

புதன் 23 மா 2022