விருதுநகர் பாலியல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!


விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை முதல்வர் ஸ்டாலின் சிபிசிஐடிக்கு மாற்றுவதாகச் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
விருதுநகரில் 22 வயதான இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்திருந்தார்.
இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரை எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
அதோடு விருதுநகர் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாகப் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த அவர், வழக்கை முறையாக விசாரித்து குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கதையாக உள்ளது அதற்கு முற்றுப்புள்ளி தேவை. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தவறு செய்தவர்கள் அனைவருக்கும் தண்டனையை வழங்கி உள்ளோம் என்றும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “விருதுநகரில் 22 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ள 4 பேர் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதற்காக வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடுகிறேன். சிபிசிஐடி கண்காணிப்பாளர் முத்தரசி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரப்படும். அதிலும் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்.
விருதுநகர் பாலியல் வழக்கை மாடல் வழக்காக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிடுகிறேன். பொள்ளாச்சி பாலியல் வழக்கு போல் இல்லாமல் வண்ணாரப்பேட்டை 13 வயது சிறுமி பாலியல் வழக்கு போல் இல்லாமல் நிச்சயம் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவோம். எப்படி விரைந்து தண்டனை பெற்றுத் தருவது என்பதற்கு இந்தியாவுக்கே இந்த வழக்கு முன்மாதிரியாக இருக்கும்' என்றார்.
இதனிடையே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறி சட்டப்பேரவையிலிருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. சென்னையில் 3000 ரவுடிகள் இருப்பதாகக் காவல் ஆணையரே தெரிவித்துள்ளார். ரவுடிகள் எல்லாம் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள்" என்று கூறினார்.
-பிரியா