மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 மா 2022

அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம்: ராஜினாமா சலசலப்பை முடித்து வைத்த முதல்வர்!

அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம்: ராஜினாமா சலசலப்பை முடித்து வைத்த முதல்வர்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் முகமாகவும், பிரதிநிதியாகவும் இருக்கும் அட்வகேட் ஜெனரல் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனது பதவியில் இருந்து விலகப் போவதாக கடந்த ஒரு வாரமாகவே சட்ட வட்டாரத்தில் சலசலப்புகள் எழுந்தன. அதேநேரம் அவர் உயர் நீதிமன்றத்துக்கு வந்து தன் அலுவல்களை கவனித்தபடியேதான் இருக்கிறார்.

சண்முகசுந்தரம் தனது அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்ய எழுந்த நெருக்கடி உண்மை. ஆனால், இந்த நெருக்கடி எதனால் ஏற்பட்டது, முதல்வர் அதை எப்படி அணுகினார், சண்முகசுந்தரம் அட்வகேட் ஜெனரலாக தொடர்வதற்கான முடிவு எப்படி எடுக்கப்பட்டது ஆகியவை திருப்பங்கள் நிறைந்த ஒரு த்ரில்லர் ஸ்டோரியாகவே இருக்கின்றன.

புதிய ஆட்சியின் அட்வகேட் ஜெனரல்

ஒவ்வொரு மாநில அரசுக்கும் அட்வகேட் ஜெனரல் எனப்படும் அரசு தலைமை வழக்கறிஞர் முக்கியமானவர். அரசுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வழக்குகளை சட்டரீதியாக வெல்வதும், நீதிமன்றத்தில் அரசின் இமேஜை காப்பாற்றுவதும் அட்வகேட் ஜெனரலின் வாதத் திறமையிலும், அணுகுமுறையிலும்தான் இருக்கிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் மாநில அரசின் அட்வகேட் ஜெனரலாக விஜய் நாராயணன் பதவி வகித்தார். 2021 மே 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவந்து திமுக ஆட்சி அமைப்பது உறுதியானதுமே, விஜய் நாராயணன் தனது அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தார்.

மே 7ஆம் தேதி தமிழக முதல்வராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பதற்கு சில நாட்களுக்கு முன்பே... திமுக அரசின் புதிய அட்வகேட் ஜெனரல் யார் என்ற கேள்வி சட்ட வட்டாரங்களிலும் நீதித் துறை வட்டாரங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் ஒரு முக்கியமான கேள்வியாக எதிரொலித்தது.

அப்போது ஸ்டாலினுடைய மாப்பிள்ளையான சபரீசன்... நீதித் துறை பாரம்பரியம் கொண்டவரும் ரிட் வழக்குகளில் அனுபவமும் நிபுணத்துவமும் பெற்றவருமான ஏ .ஆர். எல்.சுந்தரேசனை அட்வகேட் ஜெனரலாக நியமிக்கலாம் என்று ஸ்டாலினிடம் பரிந்துரை செய்தார். இதுபற்றி திமுகவின் வழக்கறிஞர் அணி நிர்வாகிகளிடமும், தலைமைகழக சட்ட ஆலோசகர்களிடமும் ஸ்டாலின் ஆலோசனை கேட்டார்.

அப்போது, “இந்தியாவில் உள்ள மாநிலக் கட்சிகளிலேயே மிக வலிமையான கட்டமைப்பு கொண்ட வழக்கறிஞர் அணியைப் பெற்றிருப்பது திமுக மட்டும்தான். ஆட்சியில் இல்லாத காலங்களில் மக்களோடு சேர்ந்து போராட்டம் ஒருவகை என்றால் இன்னொரு பக்கம் நீதிமன்றங்களில் சட்டப் போராட்டம் நடத்தி நாம் பல வெற்றிகளைப் பெற்று இருக்கிறோம். எனவே திமுக கட்சிக்காரராக இருக்கும் மூத்த வழக்கறிஞருக்கு இந்தப் பதவியை கொடுத்தால் சரியாக இருக்கும்” என்று ஆலோசனை கூறியிருக்கிறார்கள் தலைமை கழக சட்ட ஆலோசகர்கள். மூத்த வழக்கறிஞரான சண்முகசுந்தரத்தின் பெயரையும் பரிந்துரைத்தனர்.

அந்த அடிப்படையில் திமுகவிலும் சட்டத் துறையிலும் மிக நீண்ட அனுபவம் பெற்ற சண்முகசுந்தரத்தை அட்வகேட் ஜெனரலாக நியமிப்பது என ஸ்டாலின் முடிவு செய்தார்.

ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கு நடத்தியதற்காக ரவுடிகளை ஏவி சண்முகசுந்தரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் படுகாயமடைந்த சண்முகசுந்தரம் தற்போதும் அந்தத் தாக்குதலின் வடுக்களை தன் உடலில் தாங்கியபடி இருக்கிறார். இப்படி கட்சிக்காக சட்டக் களத்திலும் போராட்டக் களத்திலும் துணையாக நின்ற சண்முகசுந்தரத்துக்கு அட்வகேட் ஜெனரல் பதவி அளிக்கப்பட்டது திமுக வழக்கறிஞர்கள் பலருக்கும் உற்சாகத்தை அளித்தது.

அதேநேரம் கிரிமினல் வழக்குகளில் அனுபவம் கொண்ட இவரால் ரிட் வழக்குகளை சமாளிக்க முடியுமா என்ற சந்தேகமும் எழுந்தது.

பிரச்சினை தொடங்கியது எங்கே?

பொதுவாகவே அட்வகேட் ஜெனரலுக்கு உதவியாக அடிஷனல் அட்வகேட் ஜெனரல் எனப்படும் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்களை அரசு நியமிக்கும். அந்த வகையில் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் 9 அடிஷனல் அட்வகேட் ஜெனரல்கள் இருக்கிறார்கள். (சென்னை உயர்நீதிமன்றத்தில் 7, மதுரை உயர்நீதிமன்றத்தில் 2) இந்தக் கூடுதல் அரசு வழக்கறிஞர்களில் யார் யார் எந்தெந்த வழக்குக்கு நீதிமன்றத்தில் அரசு சார்பாக வாதாட வேண்டும் என்பதை அட்வகேட் ஜெனரல்தான் முடிவு செய்வார். இவர்களில் சிலருக்கே நீதிமன்றத்தில் அரசு சார்பாக வாதாடும் வாய்ப்பு தொடர்ந்து கொடுக்கப்படுகிறது என்றும் பெரும்பாலான வழக்குகளில் அட்வகேட் ஜெனரலே வாதிடுகிறார் என்றும் ஒரு முணுமுணுப்பு உயர் நீதிமன்ற வட்டாரத்தில் இருந்து வந்தது. இது தலைமைச் செயலாளர் வரைக்கும் சென்றது.

இந்த நிலையில்தான் குறிப்பிட்ட ஒரு வழக்கில் அரசு சார்பில் வாதாடுவதற்காக ஒரு சிறப்பு வழக்கறிஞரை நியமித்து உத்தரவிடுகிறார் தலைமைச் செயலாளர். இதையறிந்த அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், ‘எனக்குத் தெரியாமல் எப்படி நீங்கள் இவ்வாறு உத்தரவிட முடியும்?’ என்று கேட்கிறார். இதற்கு தலைமைச் செயலாளர், சில பதில்களை கூற இருவருக்குமிடையே வாக்குவாதம் ஆகிறது.

தலைமைச் செயலாளர் புகார்

இந்தப் பின்னணியில்தான் சில நாட்களுக்கு முன் தலைமைச் செயலாளர் இறையன்பு தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் பற்றி சில விஷயங்களைத் தெரிவித்துள்ளார்.

"நமது அரசு எல்லா நிலைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேநேரம் நீதிமன்றங்களில் நமது பிரதிநிதியாகச் செயல்படும் அட்வகேட் ஜெனரலின் செயல்பாடுகள் அரசின் சிறப்பான செயல்பாட்டுக்குச் சற்று பின்னடைவைத் தரும் வகையில் இருக்கிறது. அவர் மிகத் திறமையான கிரிமினல் வழக்கறிஞர் தான். ஆனால் ரிட் வழக்குகளில் அவருக்கு அனுபவம் இல்லை.

வன்னியர் இட ஒதுக்கீடு வழக்கு, நீர்நிலை ஆக்கிரமிப்பு வழக்கு, அறநிலையத் துறை சார்பில் தொடங்கப்பட்ட கல்லூரிகள் தொடர்பான வழக்கு, கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்பான வழக்கு, ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பான வழக்கு, மாரிதாஸ் மீதான வழக்குகள் போன்றவற்றில் தமிழ்நாடு அரசின் சார்பில் நீதிமன்றத்தில் இன்னும் உறுதியான முறையில் நம் தரப்பு நியாயங்கள் நிலைநாட்டப்பட்டிருக்க வேண்டும்.

இந்த வழக்குகளில் சிலவற்றில் தலைமைச் செயலாளரான என் மீது நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மூத்த வழக்கறிஞராக இருக்கும் சண்முகசுந்தரத்துக்கு உதவும் வகையில் குறிப்பிட்ட சில வழக்குகளில் மட்டும் அரசுக்காக வாதாடுவதற்கு சிறப்பு அட்வகேட் ஜெனரலை நியமிக்கலாம்..

போன ஆட்சியில் அட்வகேட் ஜெனரலாக விஜய் நாராயணன் இருந்தபோதும் மூத்த வழக்கறிஞர் சோமயாஜுலுவை சிறப்பு அரசு தலைமை வழக்கறிஞராக நியமித்து இருந்தார்கள்” என்று தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதற்கு அப்போது உடனடியாக முதல்வர் ஸ்டாலின் ஏதும் பதில் அளிக்கவில்லை.

இதற்கிடையே முதல்வரின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் முதல்வரிடம் உயர் நீதிமன்றத்தில் மாநில அரசுக்கு ஏற்படும் சிக்கல்கள் பற்றிப் பேசியிருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் துறைச் செயலாளர் ஒருவரே, ‘அட்வகேட் ஜெனரலை மாற்றிவிடலாம்’ என்று முதல்வரிடம் கூற... ‘நீங்கள் ஒரு துறை செயலாளர். அட்வகேட் ஜெனரலை மாற்ற வேண்டுமென நீங்கள் எப்படிச் சொல்ல முடியும்?’ என்று முதல்வரே கோபப்பட்டிருக்கிறார். அதற்கு அந்த செயலாளர், ‘உயர் நீதிமன்றத்தில் அரசுக்கு ஏற்படும் நெருக்கடிகளால் தான் அப்படிச் சொன்னேன்’ என்று பதிலளித்திருக்கிறார்.

தலைமைச் செயலாளர், தனது செயலாளர்கள் எனப் பலரும் அட்வகேட் ஜெனரல் விஷயத்தைப் பற்றி விவாதித்து வருவதை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்... தனக்கு நம்பகமான கட்சியின் சட்ட ஆலோசகர்களிடமும் இது குறித்து விவாதித்துள்ளார்.

'தலைமைச் செயலாளர் சொல்வதுபோல குறிப்பிட்ட சில வழக்குகளில் அரசுக்காக ஸ்பெஷல் சீனியர் வழக்கறிஞர்களை நாம் நியமித்தால் சண்முகசுந்தரம் சார் நிச்சயமாக ராஜினாமா செய்து விட்டு போய் விடுவார்' என்று சண்முகசுந்தரத்தின் சுபாவத்தை அறிந்த திமுக சட்ட ஆலோசகர்கள் முதல்வரிடம் தெரிவித்துள்ளார்கள்.

விவாதிக்கப்பட்ட விடுதலை பெயர்

ஒருபக்கம் திமுகவின் தலைமைக் கழக சட்ட ஆலோசகர்களுடன் இந்த விவகாரம் பற்றி ஆலோசனை நடத்திய முதல்வர் இன்னொரு பக்கம் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் தொடர்ந்து பேசியிருக்கிறார்.

அவர்களும், 'சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமித்தால் சண்முகசுந்தரம் கொஞ்சம் ஈகோ மிக்கவர். அவர் அதை விரும்ப மாட்டார். ராஜினாமா செய்து விட்டுத்தான் போவார்’ என்ற கருத்தையே வழிமொழிந்துள்ளார்கள்.

இந்த ஆலோசனைகளின்படி, ‘இந்திய அரசியல் கட்சிகளிலேயே மிகத் திறமையான வழக்கறிஞர் அணி கட்டமைப்பைப் பெற்றிருக்கும் ஒரே கட்சி திமுக தான். எனவே நீதித் துறையில் அரசு சார்ந்த உயர் பதவியாக இருக்கும் அட்வகேட் ஜெனரல் பதவிக்கு திமுகக்காரரை நியமிப்பதே சரியாக இருக்கும்' என்று ஆரம்ப கட்டத்தில் கட்சியின் சட்ட ஆலோசகர்கள் சொன்னதை நினைவுபடுத்திய முதல்வர்... அந்த வகையில் சட்ட தகுதியும் கட்சி தகுதியும் கொண்ட விடுதலையை அட்வகேட் ஜெனரலாக நியமிக்கலாம் என்றும் அவருக்குத் துணையாக சிறப்பு அரசு தலைமை வழக்கறிஞர்களை நியமிக்கலாம் என்பது வரையிலும் ஆலோசனை செய்திருக்கிறார். இது பற்றிய தகவல்கள் விடுதலைக்கும் போய்ச் சேர்ந்திருக்கின்றன. சண்முகசுந்தரத்துக்கும் போய் சேர்ந்திருக்கின்றன.

முதல்வரிடம் பேசிய கனிமொழி

இந்தத் தொடர் ஆலோசனைகளை அடுத்து அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் எந்த நேரமும் ராஜினாமா செய்வார் என்று நீதித் துறை வட்டாரத்தில் பரபரப்பு பற்றிக் கொண்டது.

இந்த நிலையில்தான் மார்ச் 20ஆம் தேதி இரவு திமுக மகளிர் அணிச் செயலாளரும் எம்.பியுமான கனிமொழி தனது அண்ணன் முதல்வர் ஸ்டாலினைத் தொடர்பு கொள்கிறார்.

'அண்ணே அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ரொம்ப வருத்தத்தில் இருக்குறாரு. அவர் என்கிட்ட பேசினாரு... 'நான் முழு நேரமா அட்வகேட் ஜெனரல் வேலைய மட்டும்தான் பாக்குறேன். ராத்திரி பகலா படிச்சு ரெஃபர் பண்றேன். ஆனா, என்ன ரிசைன் பண்ண சொல்லி சி.எம் சொன்னதா சொல்றாங்க. சரி நான் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா பண்றேன். ஆனா ஒண்ணு... அதோட சேர்த்து திமுகவின் அடிப்படை உறுப்பினர்லேர்ந்தும் நான் விலகிக்கிறேன்’னு ரொம்ப வருத்தப்பட்டு சொல்றாருண்ணே’ என சண்முகசுந்தரத்தின் தற்போதைய நிலைப்பாட்டை முதல்வர் ஸ்டாலினிடம் தெரியப்படுத்தியிருக்கிறார் கனிமொழி.

முதல்வரை சந்தித்த சண்முகசுந்தரம்

இதன்பிறகு மார்ச் 21ஆம் தேதி அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரத்தை அழைத்துப் பேசியிருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

'உங்களுக்கு அதிக பணிச்சுமை இருக்கிறதால... முக்கியமான வழக்குகள்ல அரசுக்காக வாதாட சீனியர் வழக்கறிஞர்களை ஸ்பெஷலா நியமிக்கலாம்னு தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் சொல்றாங்க. அப்படியே பண்ணலாமே?' என்று சண்முகசுந்தரத்திடம் கேட்டிருக்கிறார் முதல்வர்.

அப்போது சண்முகசுந்தரம், 'அதுல நிறைய ப்ரொசீஜர்ஸ் அண்ட் புரோட்டாகால்ஸ் இருக்கு. ஸ்பெஷல் அட்வகேட் ஜெனரல் நியமிக்கணும்னா முறைப்படி விளம்பரம் வெளியிடணும். அதற்கு பல பேர் அப்ளை பண்ணுவாங்க. அது உங்களுக்கு வேறு வகையில நெருக்கடியாக இருக்கும்' என்று தனது நிலையை முதல்வரிடமே நேரடியாக தெளிவுபடுத்தியிருக்கிறார் சண்முகசுந்தரம்.

முற்றுப்புள்ளி வைத்த முதல்வர்

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் மார்ச் 21ஆம் தேதி அதிகாரிகளுடனும் கட்சியின் சட்ட ஆலோசகர்களுடனும் மீண்டும் ஆலோசித்திருக்கிறார்.

'கட்சிக்காக கடுமையாகத் தாக்கப்பட்டு ரத்தம் சிந்தியவர் சண்முகசுந்தரம். அட்வகேட் ஜெனரல் என்ற பதவிக்கும் முழுமையான தகுதி உடையவர்தான். அவர் இவ்வளவு வருத்தப்படுகிறார் என்றால் இப்போதைக்கு அவசரப்பட வேண்டாம்’ என்று கூறிய முதல்வர் இப்போதைக்கு இந்த விவகாரத்தை முடித்து வைத்திருக்கிறார்.

தலைமைச் செயலாளருக்கும் அட்வகேட் ஜெனரலுக்கும் இடையில் எழுந்திருக்கும் முரண்பாடுகளை முற்றிலுமாக முதல்வர் பேசி சரி செய்வதுதான் அரசுக்கு நல்லது!

வேந்தன்

பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் 41% மாநிலங்களின் பங்கு: ப.சிதம்பரம் ...

3 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசல் விலை குறைப்பில் 41% மாநிலங்களின் பங்கு: ப.சிதம்பரம்

முள்ளிவாய்க்கால்: பெசன்ட் நகர் கடற்கரை நினைவேந்தலுக்கு திமுக ...

12 நிமிட வாசிப்பு

முள்ளிவாய்க்கால்: பெசன்ட் நகர் கடற்கரை நினைவேந்தலுக்கு திமுக அரசு தடை!

72 மணி நேரம்தான் கெடு: அண்ணாமலை எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

72 மணி நேரம்தான் கெடு:  அண்ணாமலை எச்சரிக்கை!

புதன் 23 மா 2022