மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 22 மா 2022

பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக நிர்வாகி கைது!

பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக நிர்வாகி கைது!

விருதுநகரில் 22 வயதான இளம்பெண்ணை திமுக பிரமுகர் உள்ளிட்ட 8 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து திமுக எம்பி கனிமொழி, பாஜக அண்ணாமலை , பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், பாண்டியன் நகர் பகுதியில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளம்பெண்ணும், மேலத்தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் (27) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஒருநாள் பெத்தனாட்சி நகரில் உள்ள மறைமுகமான மருந்து குடோனிற்கு தன்னுடைய காதலியை அழைத்து சென்று அங்கு இருவரும் தனிமையில் சந்தோஷமாக இருந்துள்ளனர். அப்போது ஹரிஹரன் இருவரும் சந்தோஷமாக இருப்பதை ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். இந்த வீடியோவை காட்டி ஹரிஹரன் பலமுறை தான் காதலித்த பெண்ணிடம் அத்துமீறி உள்ளார்.

அதுமட்டுமில்லாமல், தான் எடுத்து வைத்திருந்த வீடியோவை தனது நண்பரான திமுக நிர்வாகி ஜீனைத் அகமது, பிரவீன், மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 4 பேர் உள்பட 6 பேருக்கு ஷேர் செய்து, அப்பெண்ணின் நம்பரையும் அளித்துள்ளார்.

இந்த வீடியோவைக் காட்டி அவர்களும் அந்தப் பெண்ணை மிரட்டி தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி வந்துள்ளனர். கிட்டதட்ட கடந்த 6 மாதங்களாக எட்டு பேரும் அப்பெண்ணை பாலியல் ரீதியாக கொடுமை செய்து வந்தனர்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண், தனக்கு தெரிந்தவரிடம் கூறினால் எப்படியும் அவர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றிவிடுவார் என்று நம்பி தன் வீட்டருகே உள்ள மாடசாமி என்பவரிடம் தனக்கு நடந்த கொடுமையை கூறியுள்ளார். தனக்கு உதவி செய்வார் என்று நினைத்த நிலையில், அவரும் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கொடுமைப்படுத்தியுள்ளார்.

இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் அப்பெண் இதுகுறித்து விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், ஹரிஹரன்,பிரவீன், ஜூனைத் அகமது, மாடசாமி மற்றும் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் என எட்டு பேரையும் கைது செய்தனர். இவர்களில் பள்ளி மாணவர்கள் நான்கு பேரும், 17 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதால் அவர்கள் மதுரை தெப்பக்குளத்திலுள்ள சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி, “விருதுநகர் மாவட்டத்தில் 22 வயதான பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது ஆறுதலைத் தருகிறது. குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்,” விருதுநகரில், ஒரு கும்பல் வீடியோ மூலம் பிளாக்மெயில் செய்து, 22 வயது பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்த அவலச் செய்தியறிந்து அதிர்ச்சியும் சோகமும் அடைந்தேன். இதைவிட கூடுதல் அதிர்ச்சியளிக்கும் விஷயம் இந்த வெட்கக்கேடான செயலுக்கு மூளையாக இருந்தது ஒரு உள்ளூர் திமுக பிரமுகர்.

இந்தக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது அவசியமே, ஆனால், தற்போது திமுக அரசில் ஒட்டுமொத்த காவல் துறையை மேம்படுத்துவதே, மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும். முதலமைச்சர் ஸ்டாலின் தனது கட்சிக்காரர்களின் பிடியிலிருந்து உள்ளூர் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில், “விருதுநகரில் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றிய இளம் பெண்ணை மிரட்டி மாணவர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 8 பேர் தொடர்ந்து 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்று வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன.

இளம்பெண்ணை சீரழித்த கொடியவர்களை காவல்துறையினர் கைது செய்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால், இந்த நடவடிக்கைகள் போதுமானவை அல்ல. மனிதநேயமின்றி, மிருகங்களைப் போன்று செயல்பட்ட அனைவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும்.

விருதுநகர் பெண்ணை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த ஒருவர், அதை படம் பிடித்து மிரட்டி தான் தொடர் கொடூரத்தை நிகழ்த்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் நீதி கேட்டு சென்ற போது அவரும் இதே குற்றத்தை செய்துள்ளார். இவர்களை மன்னிக்கக் கூடாது.

பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு, தங்களின் விவரங்கள் வெளியில் வராமல், காவல்துறையை அணுகி நீதி பெறுவது குறித்த விழிப்புணர்வு இல்லாதது தான் அவர்கள் மீண்டும் மீண்டும் பாதிக்கப்பட காரணம். இது குறித்த பொது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி 8 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தமிழகத்தையே அதிரச் செய்திருக்கிறது. அதில் சிலர் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்கின்றன ஊடகங்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காவல்துறை விரைந்து கைது செய்திருப்பதைப் பாராட்டுகிறோம். அதேநேரம் எத்தனை நடவடிக்கை எடுத்தாலும் குற்றங்கள் தொடர்வது எவர் கொடுக்கும் தைரியத்தில் என்பதை கண்டறிந்து இவர்களை ஆதரிக்கும் அதிகாரவர்க்கத்தை ஒடுக்கவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.

-வினிதா

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

செவ்வாய் 22 மா 2022