கைரேகை ஜெயலலிதாதான் வைத்தார்: ஓபிஎஸ்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று (மார்ச் 22) இரண்டாவது நாளாக ஆஜரானார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. இதுவரை 150க்கும் மேற்பட்டோர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், ஜெயலலிதா மரணத்துக்கு விசாரணை வேண்டும் என ஆரம்பத்தில் வலியுறுத்திய ஓபிஎஸ், ஆணையம் தரப்பில் 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.
இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் நேற்று முதன்முறையாக ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். 3 மணி நேரத்தில் 78 கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன
இதில் பெரும்பாலான கேள்விக்கு அவரது பதில் ‘இது பற்றி எதுவும் தெரியாது’ என்பதாகத் தான் இருந்தது. இதைத்தொடர்ந்து இன்றும் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி இன்று இரண்டாவது நாளாக ஒபிஎஸ் ஆஜரானார். இன்று காலை சட்டப்பேரவைக்கு வந்த அவர், தனது கைகடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார்.
அப்போது, மருத்துவமனையிலிருந்த போது ஜெயலலிதா நலமுடன் இருப்பதாக ஓரிரு முறை சசிகலா என்னிடம் கூறினார். அவர் கூறியதை சக அமைச்சர்களிடம் மட்டுமே தெரிவித்தேன், பொதுவெளியில் எங்கும் பேசவில்லை. ஜெயலலிதாவுக்கு என்ன உணவு வழங்கப்பட்டது என எனக்குத் தெரியாது.
திருப்பரங்குன்றம், தஞ்சை, அரவக்குறிச்சிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது அதற்கான படிவங்களில் ஜெயலலிதாதான் கைரேகை வைத்தார். வேட்பாளர்களையும் அவர்தான் தேர்வு செய்தார் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான கேள்விகளை ஓபிஎஸிடம் கேட்கக்கூடாது என அப்பல்லோ தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்கும்போது மருத்துவர்கள் உடன் இருக்க வேண்டும் எனக் கூறி எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-பிரியா