மும்முனை மின்சாரம் - தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டது: செந்தில் பாலாஜி

2022-23ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 18 தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் பட்ஜெட் மார்ச் 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது.
இன்று (மார்ச் 22) இரண்டாவது நாளாகக் கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது, சேந்தமங்கலம் திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி, “சேந்தமங்கலம் பகுதியில் 5 பேரூராட்சி உள்ளது. இங்குள்ள மக்கள் அதிகமானோர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் வாடகை கூட கட்ட முடியாமல் தவித்து வந்தனர். அப்பகுதி மக்களுக்கு நகர்ப்புற வீட்டு வசதி வாரியம் மூலமாக அடுக்குமாடி வீடு கட்டித் தர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கு, “சேந்தமங்கலம் தொகுதியின் சூழலை ஆய்வு செய்து தேவை இருந்தால் வீடு கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்கும்” என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார். பல வீடுகள் பல ஆண்டுகளாக காலியாக இருக்கும் சூழலும் காணப்படுகிறது எனவும் கூறினார்.
அதிமுக உறுப்பினர் மகேந்திரன், “முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த இலவச மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்குத் தொடர்ந்து வழங்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “2021 தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாக 25.2.2021 அன்று இந்த திட்டத்தை அறிவித்தனர். இது தேர்தலை முன்னிட்டு அறிவித்த திட்டம். இதற்காக அவர்கள் முழு கட்டமைப்பையும், நிதியையும் ஒதுக்கவில்லை.
தற்போது முதல்வர் இந்த திட்டத்துக்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்த பிறகு இத்திட்டம் நிறைவேற்றப்படும்” என்றார்.
-பிரியா