மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 22 மா 2022

மாற்றுத்திறனாளிகளை கைது செய்வதா?: டிடிவி தினகரன் கண்டனம்!

மாற்றுத்திறனாளிகளை கைது செய்வதா?: டிடிவி தினகரன் கண்டனம்!

உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி சென்னை தலைமைச் செயலகத்தில் போராட்டம் நடத்த வந்த மாற்றுத்திறனாளிகளை கைது செய்த சம்பவத்திற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை 1000 ரூபாயிலிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தக்கோரியும், கடும் ஊனத்திற்கு வழங்கப்படும் ரூ.1,500-ஐ ரூ.5000 ஆக உயர்த்தக்கோரியும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனின் அடுத்தகட்டமாக, சென்னையில் தலைமை செயலகம் முன்பு இன்று மார்ச் 22 அன்று குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என்று மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாற்றுத்திறனாளிகள் சென்னை வரவுள்ளனர் என்ற தகவலை அறிந்த போலீசார், அந்தந்த மாவட்டத்திலிருந்து நேற்றிரவு பயணம் மேற்கொள்ள முற்பட்ட மாற்றுத்திறனாளிகளை தடுத்தி நிறுத்தியுள்ளனர்.

போராட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்றிரவு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் 65 மாற்றத்திறனாளிகள் ஒன்று கூடினர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் சென்னை செல்ல அனுமதி இல்லை, தடையை மீறி செல்ல முயன்றால், கைது செய்யப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதை கண்டித்து மத்திய பேருந்து நிலையத்திலேயே மாற்றுத்திறனாளிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து 33 பெண்கள் உள்ளிட்ட 65 பேரை போலீசார் கைது செய்தனர். அதுபோன்று திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை செல்ல தயாரான மாற்றுத்திறனாளிகள் 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

பயணம் மேற்கொள்வதற்கு முன்பே ஒருசிலர் தடுத்து நிறுத்தப்பட்டாலும், பலர் போராட்டத்திற்காக சென்னை வந்தபிறகு கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட செயலாளர் பகத்சிங் தலைமையில் 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ரயில் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர். இவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதை ஏற்காத மாற்றுத்திறனாளிகள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீஸார் மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் கைது செய்து ராயபுரம் பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அதுபோன்று இன்று காலை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் ஒன்று திரண்டதை அறிந்து வந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ உதவித்தொகையை உயர்த்தி கேட்டு போராடுவதற்காக சென்னை வந்த மாற்றுத் திறனாளிகளை பல இடங்களில் தடுத்து நிறுத்தி, கைது செய்வதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திமுக அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடவுளின் குழந்தைகளான மாற்றுத் திறனாளிகளை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர நினைக்காமல் மனசாட்சியின்றி காவல் துறையை வைத்து அவர்களை அலைக்கழிப்பது சரியானதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

-வினிதா

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

செவ்வாய் 22 மா 2022