மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 22 மா 2022

எரிபொருள் விலை உயர்வு: மாநிலங்களவையில் அமளி!

எரிபொருள் விலை உயர்வு: மாநிலங்களவையில் அமளி!

எரிபொருள்களின் விலை உயர்வை கண்டித்து மாநிலங்களவையில் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

கடந்த 137 நாட்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர் எரிவாயு உள்ளிட்டவைகளின் விலை உயர்வு இன்றி ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக கடந்த ஒரு மாதமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து காணப்பட்டாலும், பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இவற்றின் விலை ஐந்து மாநில தேர்தலுக்கு பிறகு கண்டிப்பாக உயரும் என்று எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தன.

இந்த நிலையில் இன்று(மார்ச் 22) காலை முதல் பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து 102 ரூபாய் 16 காசுகளுக்கும், டீசல் விலை 77 காசுகள் அதிகரித்து ரூ.92.19க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.81, டீசல் ரூ.91.88 என்ற விலையில் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து தற்போது வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் ரூ.50 அதிகரித்து இன்று முதல் ரூ.965 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த நான்கு மாதங்களாக எந்தவிதமாற்றமுமின்றி ரூ.915க்கு விற்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சிலிண்டர் விலை ரூ.965 என்றாலும், சிலிண்டர் டெலிவரிக்கு ரூ.50கொடுக்க வேண்டும் என்பதால், ஒரு சிலிண்டர் வாங்க ரூ.1015 வேண்டும்.

இந்த விலை உயர்வு நடுத்தர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில், “சென்னையில் ஒரு சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.965.50ஆக அதிகரித்திருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் தவித்து வரும் ஏழை மற்றும் நடுத்தர மக்களால் இதை தாங்க முடியாது.

சமையல் எரிவாயு விலை கடந்த ஓராண்டின் 9 தவணைகளில் ரூ.255 உயர்த்தப்பட்டிருக்கிறது. இது 36% உயர்வு ஆகும். மக்களின் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையான சமையல் எரிவாயு விலை ஓராண்டில் 36% உயர்த்தப்படுவது எந்த வகையிலும் நியாயமற்றது. இதை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலைகளும் 136 நாட்களுக்குப் பிறகு லிட்டருக்கு முறையே 76 காசுகளும், 77 காசுகளும் இன்று உயர்த்தப்பட்டுள்ளன. அடுத்தடுத்த நாட்களிலும் இதே அளவுக்கு விலை உயர்வு இருக்கும் என்றும், மொத்தமாக லிட்டருக்கு ரூ.25 வரை உயர்த்தப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

பெட்ரோல் விலை ஏற்கனவே ரூ. 102.58 ஆகவும், டீசல் விலை ரூ.92.65 ஆகவும் உயர்ந்திருக்கும் நிலையில், விலை உயர்வு தொடர்வதை மக்களால் சமாளிக்க முடியாது. இதைக் கருத்தில் கொண்டு எரிபொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து, விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் அமளி

இந்த நிலையில், எரிபொருள் விலை உயர்வு குறித்து விவாதிக்கக் கோரி மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. சக்திசிங் கோஹில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார்.

இன்று காலை 11 மணியளவில் மாநிலங்களவை செயல்படத் தொடங்கியது. அப்போது, ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் விதி 267 கீழ் ஏற்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் மானியக் கோரிக்கையின்போது இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்கலாம் என்றும், இப்போது விவாதிப்பது முறையல்ல. அது பதிவும் செய்யப்படாது என்றும் அவை தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தும், எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராகவும் உறுப்பினர்கள் தங்கள் இருக்கையை விட்டு எழுந்து தலைவர் இருக்கைக்கு முன்பு வந்து கோஷங்களை எழுப்பியும், பதாகைகள் ஏந்தியும் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மாநிலங்களவை 12 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

இதனிடையே சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து மக்களவையில் அலுவல்களை ஒத்திவைத்து விட்டு விவாதிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

செவ்வாய் 22 மா 2022